முதோல் - மற்போர் நகரம்
By ராஜேஸ்வரி | Published On : 25th September 2022 06:00 AM | Last Updated : 25th September 2022 06:00 AM | அ+அ அ- |

வடக்கு கர்நாடாகாவில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் முதோல். இவ்வூர் வெல்லம் மற்றும் மற்போர் ஆகிய இரண்டுக்கும் பிரபலம்.
மற்போர் பயிற்சி என்றால் ஹரியானா. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகியனவே என்ற பிரமை உண்டு. இந்த முதோல் நகரமும் அதில் சேர்க்கப் பட வேண்டிய இடம். விவசாயமே இங்கு பிரதானத் தொழிலாகும். ஒவ்வொரு வீட்டிலும் மற்போர் வீரர் இருப்பார்.
இங்குள்ள சிவாஜி சர்க்கிளில் "ஜெய் ஹனுமான் வியாசாம் சாலா' என ஒரு மற்போர் பயிற்சியகத்தில் 1952-ஆம் ஆண்டிலிருந்து பயிற்சிகள் தொடருகின்றன.
இதில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சி பெற்றவர்கள் ஜூனியர் லெவல், சீனியர் லெவல்களில் உள்ளூர் முதல் உலக அளவில் பங்கேற்று, பரிசுகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சியகத்தின் தலைமைப் பயிற்சியாளர் அருள் கும்காலே கூறியதாவது:
""கடந்த சில ஆண்டுகளாக இங்கு பயிற்சி பெறுவோர் சாதனைகளைப் படைத்துவருகின்றனர்.
நிங்கப்பா ஜெனைவார் கிர்கிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற போட்டியில், 17 வயதுக்குள்பட்டோருக்கான 48 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் சந்தீப் காடே வெள்ளிப் பதக்கமும், தேசிய போட்டியில் அர்ஜூன் ஹலகுர்கி தங்கப் பதக்கமும், ஆசியப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நரசிங் பாடில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
இதேபோல, மாநில அளவிலான போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவில் பல வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வெற்றி பெற்றுள்ளனர். சாதனை பட்டியல்கள் தொடர்கின்றன.
இங்கு பயிற்சி பெறுவோர் தாவணகரே, பெலகாவி, ஹலியால், பாகல்கோட், கடக்கில் உள்ள மாநில விளையாட்டுத் திடலில் இடம் பிடிக்க வேண்டும் என்றோ, அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டுப் பிரிவில் இடம் பிடிக்க வேண்டும் என்றோ நினைக்கின்றனர்'' என்றார்.