பழசு என்றும் புதுசு

காஞ்சிபுரம் சங்கரா கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நாணவியல் கண்காட்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கக் காலக் காசுகள் ஆகியன இடம் பெற்றிருந்தன.
பழசு என்றும் புதுசு


காஞ்சிபுரம் சங்கரா கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நாணவியல் கண்காட்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கக் காலக் காசுகள், முகலாயர்கள், ஆற்காடு நவாப் காலத்து காசுகள், ஏராளமான வெளிநாட்டு பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியன இடம் பெற்றிருந்தன. இவை அனைத்தையும் சேகரித்து வைத்திருந்தவர் ரா.சு.ஜவஹர்பாபு என்ற "நாணயம் ஜவஹர்'.

அவரைச் சந்தித்துப் பேசியபோது:

வாணியம்பாடியில் ராமகிருஷ்ணா ஜூனியர் கல்லூரியில் தொடர்ந்து 25 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தொல்லியல் துறையின் மீதிருந்த ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சி, நாணயவியல், ஓலைச்சுவடி ஆகிய மூன்றிலும் பட்டயப் படிப்பை முடித்தேன். சென்னை செம்மொழி ஆய்வு மையம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ், தொல்லியல் தொடர்பான 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளேன்.

சிறு வயதிலேயே மடிப்பு கசங்காத பணத்தாள்களை நோட்டுப் புத்தகத்தில் சேமித்து வைப்பேன். நண்பர்கள், உறவினர்களிடம் வித்தியாசமானதாகவோ அல்லது பழமையானதாகவோ, வரிசை எண் மாறுபட்டிருந்தாலோ அதை விலை கொடுத்து வாங்கி சேமிப்பதே வழக்கமாயிற்று. இப்படியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாணயங்கள்,பணத்தாள்களை பல லட்சங்கள் ரூபாய்கள் கொடுத்து விலைக்கு வாங்கி சேமித்து வைத்திருக்கிறேன்.

சேமித்து வைத்தவற்றில் முக்கியமானது என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகு புழக்கத்திலுள்ள ஒரு ரூபாய் நாணயம், நோட்டுகள், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு உலோகங்களால் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்,நெகிழி பணத்தாள்கள், நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய,பல்லவர் கால நாணயங்கள், முகலாயர்கள் காலத்து நாணயங்கள், பிள்ளையார் உருவம் பொறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள், சுமார் 150-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள பணத்தாள்கள்,நாணயங்கள் இதுபோன்று ஏராளமானவை உள்ளன.

மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கரையோரங்களில் காசுகள் ஒதுங்கி கிடந்தால் அவற்றை கண்டெடுத்தவர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து, ""விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்று கேட்பார்கள். நானும் விலைக்கு வாங்கி விடுவேன். இதேபோன்று, கரூர் காவிரியாற்றங்கரை, காஞ்சிபுரம் பாலாற்றங்கரையோரங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல நாணயங்கள் பல கிடைத்தன.

சேமிப்பால் என்ன நன்மை கிடைக்கிறது?

காலணா, அரையணா, தம்பிடிக்காசு, ஓட்டைக்காசு, ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா.. என்றெல்லாம் நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தன. அவை இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை. இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனையும் வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் கையில் பணத்தையோ அல்லது நாணயத்தையோ பார்க்கவே முடியாமல் போனாலும் போகலாம். எனவே கண்காட்சிகளை நடத்தும் இடங்களில் அவற்றைப் பார்வையிட வருவோருக்கு நாணயங்களின் வரலாறுகளையும்,அதைப் பயன்படுத்திய ஆண்டுகளையும் விளக்கமாக எடுத்துச் சொல்வேன்.

இதுவரை வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை 25க்கும் மேற்பட்ட இடங்களில் நாணயங்கள் கண்காட்சியை இலவசமாகவே நடத்திக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு கூப்பிட்டாலும் சென்று இலவசமாக கண்காட்சி நடத்தவும் தயாராக இருக்கிறேன். அரசு விழாக்கள், தமிழ்ச்சங்கங்கள், கம்பன் கழகங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் இலவசமாக கண்காட்சியை நடத்தியிருக்கிறேன்.

நாணயங்களைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் உள்ளதா?

பழங்கால ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், எடைக்கருவிகள், எழுதுபொருள்கள்,செப்பேடுகள்,ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட பத்திரங்கள்,பதக்கங்கள்,யானைத் தந்தம், சந்தன மரத்தால் செய்யப்பட்ட கூஜாக்கள், பூச்சட்டிகள், சமையலுக்கு பயன்படக்கூடிய கலைப் பொருள்கள், உள்நாட்டு, வெளிநாடு தபால் தலைகள், பழங்கால நவரத்தினக் கற்கள், இந்து கடவுள்களின் படம் பொறித்த வெளிநாட்டு தபால் தலைகள் என ஏராளமானவையும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com