எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்  என்று ஒரு தமிழ் பழமொழி உள்ளது.
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

"எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று ஒரு தமிழ் பழமொழி உள்ளது. அதை அடைய வேண்டும் என்றால், கல்வியோடு வருங்கால சந்ததியில் மனதில் ஒழுக்கம், நன்நெறி, தார்மிகப் போதனைகளை நிலைநிறுத்த வேண்டும். இளம்தலைமுறையினரிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்தால், தூய்மையான தன்னலமற்ற மனம் உருவாக்கும். அதுஅமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும்'' என்றார் ஐ.நா. உரையாற்றிய இளைஞர் ராஜேஷ்.


திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அவர், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில், "மன மாசுதான் அனைத்து மாசுபாட்டிற்கும் காரணம்' என்ற தலைப்பில் உரையாற்றியதன் ஒரு பகுதிதான் இது.

"காந்தி உலக அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டுவருகிறார். ஐ.நா. சபையில் இரண்டு அங்கங்கள் உண்டு. ஒன்றில் உலக நாடுகளின் அரசு பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்கமுடியும். இன்னொன்றில், அரசு சாராத அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு பிரச்னைகள்குறித்து தங்கள்கருத்துகளைப் பகிர முடியும். இதில், அரசு சாரா அமைப்புகளுக்கான அரங்கில் ராஜேஷ் அண்மையில் உரையாற்றியுள்ளார்.

அவருடன் ஓர் சந்திப்பு:

ஐ.நா. சபையில் உரையாற்றும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

காந்திஜியின் உருவம் இடம்பெற்றுள்ள பல்வேறு நாட்டு தபால் தலைகள், பணத்தாள்களைச் சேகரித்துவருகிறேன். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவேன்.

எனது இத்தகைய செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு அரசுசாரா அமைப்பைச்சேர்ந்த ஒரு நண்பர் திடீரென்று என்னை அழைத்து, "ஐ.நா. சபையில் பேசுவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. நீங்கள் கலந்துகொள்கிறீர்களா?'' என்றுகேட்டார். "எனக்கு ஆசைதான். ஆனால், பாஸ்போர்ட் கூட இல்லையே?'' என்றேன்.

எனது ஆர்வத்தைக் கண்டு, ஐ.நா. அமைப்பின் நண்பர் உரிய அதிகாரிகளோடு பேசி, உரைக்கான அனுமதியைப் பெற்று அதற்கான கடிதத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.இதை வைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். "எனது வங்கிக் கணக்கில் குறைந்தது ஒருலட்சம் ரூபாய் இருக்க வேண்டும்'' என்று சொன்னபோது, கணக்கில் இருந்தது மூவாயிரம் ரூபாய்தான். எனது இரண்டு நண்பர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை மாற்றி உதவினார்கள்.திருப்பூர் நண்பர் எனக்கு விமானப் பயணச் சீட்டு வாங்கிக் கொடுத்தார்.

என்ன தலைப்பு என்பதை எப்படி முடிவு செய்தீர்கள்?

மகாத்மா காந்தி குறித்து பேசுவது என்பதில் உறுதியாக இருந்தேன். இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக அது இருக்க வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்து, "மன மாசுதான் அனைத்து மாசுபாட்டிற்கும் காரணம்' என்றதலைப்பில் பேச முடிவு செய்தேன். ஐ.நா. அரங்கில் பேச ஒன்றரை நிமிடங்கள்தான் ஒதுக்கப்படும். பலமுறை எழுதியதைத் திருத்தி எழுதி, நண்பர்களோடு ஆலோசனை செய்து உரையைஉருவாக்கினேன். எனது உரைக்கு இறுதி வடிவம் கொடுத்ததில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு முக்கிய பங்குண்டு.

உரை ஆங்கிலத்தில் இருந்தாலும், "எண்ணம்அழகானால் எல்லாம்அழகாகும்' என்று முதலில் தமிழில் குறிப்பிட்டுவிட்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன். இலங்கை, சிங்கப்பூர் நாட்டவர்கள் தமிழ் வாசகத்தை ரசித்துப் பாராட்டினர்.

உரையாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பில், உரையாற்றியது மகிழ்ச்சி. இருந்தாலும், நடுக்கமும் இருக்கவே செய்தது.

தமிழில் தயாரித்த உரையை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சீர்செய்து பலமுறை படித்துப் பார்த்து தயார்செய்துகொண்டேன். குறிப்பிட்ட நேரத்தில் தெளிவாகப் படித்தேன்.

ஐ.நா. சபைக்கு இந்திய அரசு 3 மயில்களை வழங்கியுள்ளது. நான் புறப்படும் நாளன்று மேகமூட்டமாக இருந்தது. ஒரு மரத்தடியில் மயில் தோகை விரித்து நடந்து செல்வதைக் கண்டேன். தேச பக்தி பொங்கிட, மெய்சிலிர்த்து நின்றேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com