படித்ததோ பொறியியல்; பார்ப்பதோ விவசாயம்

"படித்தது  பொறியியல் என்றாலும்,  பாரம்பரியத்  தொழிலைத் தொடர்ந்து செய்யலாம்'  என்று முடிவு செய்து கோவையில்தான் செய்துவந்த பணியை உதறிய பிரபு விவசாயத் தொழில் முனைவராகி இருக்கிறார்.
படித்ததோ பொறியியல்; பார்ப்பதோ விவசாயம்

"படித்தது பொறியியல் என்றாலும், பாரம்பரியத் தொழிலைத் தொடர்ந்து செய்யலாம்' என்று முடிவு செய்து கோவையில்தான் செய்துவந்த பணியை உதறிய பிரபு விவசாயத் தொழில் முனைவராகி இருக்கிறார்.
முப்பத்து இரண்டு வயதான அவர் தனது தொழில் அனுபவம் குறித்து கூறியதாவது:
""பாரம்பரியத் தொழிலுக்கு வந்ததற்கு வருமானம் குறைவாக இருந்த எனது வேலையும் ஒரு காரணம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடத்தில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக 13 ஏக்கர் முந்திரித் தோப்பு இருக்கிறது. முந்திரி பிப்ரவரி முதல் மே மாதம் வரை பறிக்கலாம்.
எங்கள் நிலம் செழிப்பானது. மண்ணுக்குள் கீழ் சுமார் அறுபது அடி வரை செம்மண்தான். அதனால் மழை அதிகமாகப் பெய்தாலும் தண்ணீர் மண்ணுக்குள் தேங்கி நிற்காது . அதனால் முந்திரி மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. வேறு இடங்களில் முந்திரி விளையும் வனப்பகுதிகள் இருக்கும். மண்ணின் கீழ் பலவகை மண் படிவங்கள் இருக்கும். அந்த நிலங்களில் மழைநீர் வடிந்து கீழே போகாமல் மண்ணுக்குள் தேங்கி நிற்கும்.
தண்ணீர் அதிகம் தேவைப்படாத முந்திரி மரங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரால் பாதிப்படையும். பருப்பின் தரம் குறையும். இங்கு விளையும் முந்திரியின் தரம், சுவை நன்றாக இருக்கும்.
முந்திரி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. முந்திரிப் பழங்களை கொரியரில் அனுப்ப முடியாது. மரத்திலிருந்து பறிக்கப்பட்ட மூன்று மணி நேரத்தில் பழத்திலிருந்து சாறு வடிய ஆரம்பித்து விடும். இப்போதைக்கு முந்திரிப் பழங்களை அப்படியே நிலத்தில் கொட்டி வைப்போம். அவை காய்ந்து பிறகு மண்ணோடு மண்ணாகிவிடும்.
மரத்துக்கு உரமாகும். முந்திரிப் பழத்தை வத்தல் போட்டு விற்கலாம். முந்திரிப் பருப்பு விற்பனையுடன் தேன் சேகரித்து விற்கிறோம்.
நாட்டில் மலைத் தேனீ, .அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலியன் தேனீ ஆகிய 5 வகைகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன, ஒவ்வொரு தேனீக்களும் தங்களுடைய உடல் அமைப்புக்குத் தகுந்தவாறு பூக்களைத் தேர்வு செய்து தேன், மகரந்தம் சேகரிக்கும்.
தேனின் நிறம், மணம், சுவை ஆகிய அனைத்துமே பூவை பொருத்தே அமையும். மாதுளம் பூவிலிருந்து கொம்பு தேனீ, கொசு தேனீயைத் தவிர மற்ற தேனீக்கள் தேன் சேகரிக்க முடியாது. மற்ற வகையான தேனீக்களின் உடல் அமைப்பு பெரியது.
தேனீக்களை முந்திரிக் காடுகள், வயல்களில் வளர்க்கிறோம். முந்திரி காடுகளில் மகரந்தச் சேர்க்கை நடைபெற தேனீக்கள் உதவுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. சேகரித்த தேனைப் பதப்படுத்துவது, தூய்மைப்படுத்துவதையும் நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
முந்திரியை முதல் தரத்தைப் பயனாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறோம். முதல், இரணடாம் மூன்றாம் தர முந்திரி பருப்புகள் அளவில் பெரியது சிறியதாக இருக்கும். ஆனால் தரத்தில் ஒருபோல இருக்கும். இரண்டாம், மூன்றாம் தரத்தை நெய்யில் வறுத்து உப்பு, மிளகு சேர்த்து மதிப்பு கூட்டி அதையும் விற்பனை செய்து வருகிறோம். தேனில் ரோஜா இதழ்களை சேர்த்து குல்கந்து தயாரித்து விற்கிறோம்.
மாதம் நூறு கிலோ முந்திரி பருப்பு, இருப்பது கிலோ தேன்... குல்கந்து ஐம்பது கிலோ விற்பனையாகிறது. தேன் அடைகளையும் விற்பனை செய்கிறோம். தேன் அடைகளிலிருந்து கிடைக்கும் மெழுகையும் பிரித்து தரச் சொல்லி வாங்கிச் செல்கிறார்கள். எங்கள் தயாரிப்புகளை "விபி ஹனி' என்ற பெயரில் விற்பனை செய்துவருகிறோம். மாத ஊதியத்தைவிட கூடுதலாகச் சம்பாதிக்கிறேன். பலருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கிறேன்.'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com