நிலவில் பியானோ வாசிக்க வேண்டும்! 

'பியானோவை நிலவுக்கு எடுத்துச் சென்று அங்கு இசைக்க வேண்டும்'' என்கிறார் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்.
நிலவில் பியானோ வாசிக்க வேண்டும்! 

'பியானோவை நிலவுக்கு எடுத்துச் சென்று அங்கு இசைக்க வேண்டும்'' என்கிறார் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்.

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழாவில் கண்களைக் கட்டிக் கொண்டு இரண்டாவது ஸ்பீடில் பியானோவை வாசித்து அரங்கையே அதிர வைத்த இளம் இசைக்கலைஞர், பதின் பருவத்திலேயே வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக அறிமுகமாகப் போகிறவர் என்ற பெருமைக்குரிய லிடியன் நாதஸ்வரத்துடன் ஓர் சந்திப்பு:

நீங்கள் இசைக் கலைஞனாக மாறுவதற்கு காரணம்?

என் தந்தை வர்ஷன் சதீஷ்தான் முதல் குரு. இசைக் கலைஞரான அவர்தான் எனக்கும், என் அக்கா அமிர்தவர்ஷினிக்கும் நல்ல இசையை அடையாளம் காட்டினார். தென்னிந்திய இசை, வட இந்திய இசை, மேற்கத்திய இசை, திரைப்பாடல்கள் கர்நாடக சங்கீதம், வாத்தியக் கருவிகளின் இசை.. என்று பல விஷயங்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

டிரம்ஸ் வாசிப்பை மேனாட் என்பவரிடமும், தபலாவை துளசியிடமும் கற்றேன். ரஷ்யன் பியானோ வாசிப்பை சாட்டர்ஜியிடம் ஒன்றரை ஆண்டுகள் கற்றேன். பின்னர், அகஸ்டின் பால் என்னும் மாஸ்டரிடம் இசையில் தியரி கற்றேன். எட்டாம் வகுப்பு பியானோ தேர்வில் வெற்றிகரமாகத் தேறினேன். மிருதங்கத்தை முருகனிடமும், கஞ்ஜிராவை கணேஷ் குமாரிடமும் கற்றேன்.

பிரபல இசை அமைப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது எப்படி?

தபலா கற்க வேண்டும் என்பதற்காக, கே. எம். மியூசிக் கன்சர்வேட்டரிக்கு என்னை தந்தைஅனுப்பி வைத்தார். அங்கு தபேலாவோடு பியானோவும் கற்றேன். என் வாசிப்பை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் சந்தோஷப்பட்டு, சமூக வலைதளத்தில் பதிந்தார். இது 'வேர்ல்ட் பெஸ்ட்' என்கிற டைட்டிலை பெற்றது. இதன்பின்னர், அவரே ' ஹார்பீஜி', 'ரோலிங் சி கீபோர்ட்' ஆகியவற்றை பரிசளித்தார். 'இந்தியாவின் மியூசிக் அம்பாசிடராக வருவதற்கு நீ தகுதியானவன்' என்று ரஹ்மான் வாழ்த்தியிருக்கிறார்.

இளையராஜாவின் சில பழைய பாடல்களில் ஒரிஜினல் ஆடியோ அவுட் புட் சரியில்லாமல் இருந்தது. கரோனா காலத்தில், என் தந்தை, என் சகோதரி, நான் மூவருமாகச் சேர்ந்து 'ரீ கிரியேட்' செய்து புதுப்பித்தோம். அதைத் தவிர திருவாசகத்தையும் அவ்வாறு செய்திருந்தோம். இதையறிந்த இளையராஜா வீடியோ காலில் வாழ்த்தினார். அவருடைய மாணவனாகச் சேர நான் விருப்பம் தெரிவித்தபோது, 'நீ தான் என்னுடைய முதலும் கடைசியுமான ஒரே மாணவன்' என்றார். நாற்பது ஆண்டு காலமாக அவருடைய ஆல்பத்தில் யாராலும் வாசிக்காத ஒரு பீஸ் இருந்தது. அதை என்னால் வாசிக்க முடியுமா? என்று கேட்டு ஒரு அரங்கத்தில் என்னை வாசிக்க வைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

முதல் மேடை அனுபவம் குறித்து..?

தந்தையின் மேடைகளை சிறு வயதிலேயே கேட்ட அனுபவம் உண்டு. நாளடைவில் நானும் மேடை ஏறி விட்டேன்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்கும் 'பரோஸ்' படத்துக்கு இசையமைப்பாளராக தேர்வானது எப்படி?

'மை டியர் குட்டிச் சாத்தான்' படத்துக்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ், 'பரோஸ்' என்ற 3 டி படத்துக்கும் கதை எழுதுகிறார். அந்த படத்தை மோகன்லால் இயக்குவதாகவும், படத்தின் கதை பதினொரு வயது சிறுமிக்கும், ஒரு பூதத்துக்கும் உண்டான சிறுவர் படமாக இருப்பதால், சிறுவனான நானும் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அமைவது பொருத்தமாக இருக்கும் என்று மோகன்லால் கூறினார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் தந்தை, குறையைச் சுட்டிக் காண்பித்தால்..?

எனது தந்தை சில புதிய யுக்திகளைக் கற்றுத் தருகிறார். தேவையான இடத்தில் அறிவுரை கூறுவார். இதற்காக நான் என்றும் கோபப்பட்டது இல்லை. அவர் வழிகாட்டுதலின் பெயரில்தான் நடக்கிறேன்.

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

நாட்டு நடப்பு, உலக நடப்பு விஷயங்களில் அறிய விரும்புவேன். சாப்பிடும்போது கூட, நான் எதையாவது ஆராய்ந்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்வேன். எனக்கு, மோட்டிவேஷனல் ஸ்பீச், ஸ்பேஸ், மியூசிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் பிடிக்கும்.

மறக்க முடியாத தருணம்...?

2017-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு எனது பதிமூன்று வயதாக இருக்கும்போது சென்றேன். அந்தச் சமயம் அங்கு 'டெட்' இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்த ஜூலியட் பிளேக் என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னுடைய நண்பரான ' ஜாஸ் பவுண்டேஷன் ஆஃப் அமெரிக்கா'வின் வைஸ் பிரசிடென்ட்டான 'மைக்கேல் நோவோக்ராட்ஸ்' என்பவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தார். அன்றைய தினம் வாசித்த இரண்டு பியானோ இசைக்கலைஞர்களோடு என்னையும் சேர்த்துக் கொண்டனர். இசை நிகழ்ச்சி முடிந்தவுடன், பலரும் சந்தோஷப்பட்டனர். பின்னர், விழாவுக்கு அழைத்தவர், உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள ஸ்டெயின்வே பியானோவை பரிசாக அனுப்பி வைத்தார். அதுவே என் வாழ்வில் ஒரு புது மாற்றத்தைதையே ஏற்படுத்தியது.

சாதிக்க விரும்புவது என்ன?

சாதிக்க வேண்டும் என்று நான் எந்த குறிக்கோளும் வைத்துக் கொள்ளவில்லை. 'கலைக்கு விலை கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம். நாம் முழு முயற்சியோடும், தெய்வப் பக்தியோடும் செய்யும் செயல்கள் எல்லாமே சாதனையாகவே மாறும். அதனால் பணத்துக்காக வழக்கத்துக்கு மாறான ஒன்றைச் செய்து சாதிக்க வேண்டும் என்று அவசியமில்லை' என்பார் என் தந்தை. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் உண்டு. என் பியானோவை நிலவுக்கு எடுத்துச் சென்று அங்கு இசைக்க வேண்டும்'' என்றார்.

லிடியன் குறித்து தந்தை வர்ஷன் சதீஷ் வாசிப்பது ரொம்ப ஆச்சரியம்தான். எனக்கே எப்படி வாசிக்கிறான் என்பது மிகுந்த ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதை எல்லாம் விட கண்களைக் கட்டிக் கொண்டு அவன் வாசிப்பது என்பது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவன் கடவுளிடமிருந்து நேரடியாக ஆசிர்வாதம் பெற்று வந்த குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடே கொண்டாட வேண்டிய இசைக் கலைஞன் அவன்.

உங்கள் மகனுக்கு அபூர்வமான பெயரை சூட்ட காரணம் என்ன?

கல்யாணி ராகத்தின் மேற்கத்திய பெயர்தான் 'லிடியன்'. ' நாதஸ்வரம்' என்பது ஒரு அசுர வாத்தியம். நல்ல காரியங்களுக்கு மட்டுமே இந்தத் துளைக் கருவியான நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது. நாதஸ்வரத்தை 'கிங் ஆஃப் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்' என்று கூறுவார்கள். உலக நாடுகளில் என் மகன் சிறந்த இசைக் கலைஞனாக வருவான் என்கிற நம்பிக்கை ஆரம்பத்திலேயே இருந்தது. அதனால் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தெரியும்படியாக 'லிடியன்' என்கிற பெயரையும், இந்தியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொள்வதற்காக 'நாதஸ்வரம்' என்கிற பெயரையும் சேர்த்து பெயரிட்டோம்.

உங்கள் மகனுக்கு இசை ஆர்வம் இருக்கிறது என்பதை எப்படி அறிந்தீர்கள்?

அவன் பிறந்த பதினைந்து நாள்களிலேயே இசை ஒலிப்பதைக் கேட்டவுடன் சிரிப்பது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். நான்கு மாதங்களில் பாடல்கள் ஒலித்தால், அந்தத்தாளத்துக்கேற்ப கை, கால் விரல்களை அசைப்பான். அப்பொழுதுதான் எங்களுக்கு அவன் இயற்கையிலேயே இசைஞானத்தோடு பிறந்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

உங்கள் மகனையும், மகளையும் பள்ளிப்படிப்பை தொடர வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டீர்களே?

ஆமாம். என் குழந்தைகள் காலை நேரத்தில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் ரிலாக்ஸ்டாக எழுந்தால், சுறுசுறுப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தான். என் மகள் ஆறாம் வகுப்பு வரை படித்தாள்.
இது விஷயமாக ஆரம்பத்தில் குடும்பத்தில் சில பேச்சுகள் இருந்தன. நாளடைவில் பழகிப் போய் நார்மல் ஆகிவிட்டது. தமிழ் ஆர்வத்தால் வீட்டிலேயே திருக்குறள் பொருளுடன் கற்றுக் கொடுக்கப்பட்டது. இன்றுவரை அவர்கள் படிக்கவில்லை என்று எனக்கோ, என் மனைவிக்கோ, என் குழந்தைகளுக்கோ எந்த ஒரு வருத்தமும் இருந்ததில்லை. வீட்டில் முழு நேரம் ஹோம் ஸ்கூல் மாதிரி மியூஸிக் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com