வாழ்வின் உற்சாக தருணங்கள்!

நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன.
வாழ்வின் உற்சாக தருணங்கள்!

நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போது வாசிக்கிற உங்களை விட, என்னை விட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிறபோது, சாமானியனாக சிலர் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். பிரச்னை... நம்மை துரத்திக் கொண்டே வரும்... ஓடினாலும் துரத்தும்.... திரும்பி நின்று பார்த்தால் அது ஓடும்.... இந்த பின்னணிதான் முழு கதையும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். மகத்தான வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை.'' அருமையாக பேசுகிறார் இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன். கமல்ஹாசனிடம் "விஸ்வரூபம்', "விஸ்வரூபம் 2' ஆகிய படங்களில் பணியாற்றியவர். இப்போது "சபா நாயகன்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார். 

கல்லூரி வாழ்க்கையின் இன்னொரு பரிணாம கதையா....?

எல்லாமும்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. பள்ளி, கல்லூரி, அதற்கு பின்னான திருமண வாழ்க்கை என மூன்றாக கதை இருக்கும்.  இதுதான் லைன். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள் அந்த மாணவர்கள். அவர்களின் அந்த திக் திக் நிமிடங்கள்தான் திரைக்கதை. வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகள் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகி விட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. கைப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.

கதை களம் எப்படி பயணமாகும்....

ஒரு பள்ளி, கல்லூரியோ அது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... கல்லூரி என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படி இடம். கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி, கல்லூரிதான். ஆனால் அதை மீறிய காதல், பாட்டு, டான்ஸ், ரொமான்ஸ் என ஒரு வாழ்க்கை அங்கே உண்டு.  அதன் பின்னணி.... அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை.

அசோக் செல்வன் எப்படி பொருந்தி வந்திருக்கிறார்....

இதுதான் அசோக் செல்வன் என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது.  எப்போதும் அணுகி பேசலாம். தரமான கதைகளை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்கிறார். மொத்தத்தில் இந்த நிமிஷம் நம்முடையது வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன். கதையில் மூன்று இடங்கள் என்பதால், மூன்று ஹீரோயின்கள்... கார்த்திகா முரளிதரன், சாந்தினி சாவித்ரி, மேகா ஆகாஷ் என மூன்று அழகிகள். கதையின் மீது இருந்த நம்பிக்கைக்காக நடிக்க தயாராகி வந்தார்கள். நல்லதொரு இடம் அனைவருக்கும் காத்திருக்கிறது. அருண்குமார், ஜெய்சீலன், ஸ்ரீராம் என யூ ட்யூபர்ஸ் நிறைய பேரை நடிக்க வைத்திருக்கிறேன். இப்படி எல்லா காட்சிகளிலும் நம்பிக்கையான நடிகர்கள் வலம் வருகிறார்கள். அத்தனை பேரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள்.

மூன்று ஒளிப்பதிவாளர்கள்... என்ன விசேஷம்...

எல்லோருக்கும் பரிச்சயமான பாலசுப்பிரமணியம் சார்தான் முழுப் படத்தையும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் பின் அவரால் இங்கே இயங்கமுடியவில்லை. ஆனால் அவர் பணியாற்றிய பகுதிகள் அவ்வளவு அழகு. அவரே ரசித்து செய்த இடங்கள் உங்களை இன்னும் அழகாக வந்து சேரும். அதன் பின் தினேஷ் புருஷோத்தமன் கதையின் இன்னொரு பகுதியை இயக்கினார். இன்னொரு பகுதிக்கு பாபு ராகவ்... இப்படி கதை தானாகவே இந்த மூவரையும் தேடிக் கொண்டது. கதையில் மூன்று இடங்கள் என்பதால், இப்போது படத்துக்கு மூன்று கலர் கிடைத்து விட்டது. இது தானாக அமைந்த ஒன்று.  நல்ல கதையை, அடையாளம் காட்ட தெரிந்த சக படைப்பாளியாக இவர்களை பார்க்கிறேன். அதுதான் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம். இந்தக் கதையை போலவே, ஆழமான எளிமையான அன்பு அது. அனைவருக்கும் நன்றி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com