கவிதையின் இலக்கணம்

ஸ்ரீகற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 1975-ஆம் ஆண்டு நவ. 30-இல் நடைபெற்ற  முதல் இலக்கிய மாநாட்டில் பேசப்பட்டதில், நாள்குறிப்பில் நான் எழுதி வைத்திருந்தது இப்போது படித்து ரசித்து சுவைத்தது.
கவிதையின் இலக்கணம்

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 1975-ஆம் ஆண்டு நவ. 30-இல் நடைபெற்ற முதல் இலக்கிய மாநாட்டில் பேசப்பட்டதில், நாள்குறிப்பில் நான் எழுதி வைத்திருந்தது இப்போது படித்து ரசித்து சுவைத்தது.

இதில், "கவிதையின் சிறப்பு' எனும் தலைப்பில் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் பேசியதாவது:

"'ஒரு கவிதை, இலக்கண வரம்புகளுக்கெல்லாம் உள்பட்டு சொற்சுவை, பொருள் சுவை, அணி அலங்காரம் ஆகியவை சேர்ந்து நற்கவியாக விளங்கினாலும், சிறப்பான கவிதை என்று சொல்ல முடியாது. அந்தச் சிறப்பான கவிதை வாசகனை அடைந்து, அவன் படித்து ரசித்து சுவைக்கும்போதே அந்தக் கவிதை சிறப்பு அடைந்ததாகச் சொல்ல முடியும். இல்லை என்றால் அது எவ்வளவு அழகான, சிறப்பான கவிதையாக இருந்தாலும் பயன் இல்லை'' என்று பேசி முடித்தபோது, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

"இந்த இலக்கிய முதலாவது மாநாட்டில் நடைபெறும் கவியரங்கத்துக்கு தலைமையேற்று நடத்திக் கொடுக்க, கவிஞர் கண்ணதாசனை அன்புடன் வேண்டுகிறேன். ஆடை கிழிந்து ஒன்றுமில்லாமல், போனாலும் மிஞ்சுவது நூல் மட்டும்தான். எப்போதும் மிஞ்சி, விஞ்சி நிற்பது "நூல்' என்பதால் இந்த நூலை கவிஞருக்கு நினைவுப் பரிசாக அளிக்கிறேன்'' என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் பேசிக் கொண்டே கண்ணதாசனுக்கு நூல் ஒன்றை அளித்தார்.

நூலைப் பெற்றுகொண்ட கவிஞர் கண்ணதாசன் பேசத் தொடங்கினார்:

"கவிதையில் பொருள் உவமையாக, அணியாக, இறைச்சியாக மறைந்திருப்பது போல், கவிஞர்களின் செய்யுள்களிலும் மறைப்பொருள்களாக பல சுட்டல்கள் மறைந்திருக்கும். கவிஞர் எஸ்.டி.சுந்தரம் எதையோ சுட்டிக் காட்டுவதைப்போல், எனக்கு இப்போது ஒரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

நூலின் பெயர் "குடிமகன்'. நானோ "பெருங்குடிமகன்'. எப்படி பொருத்தம்'' என்றபோது மண்டபத்தில் சிரிப்பொலி அடங்க நீண்ட நேரமானது.

தொடர்ந்து, சங்கப் பாடல்களைப் பற்றி கண்ணதாசன் பேசுகையில், ""சங்க இலக்கியங்களும் சரி, சங்கப் பாடல்களும் சரி எளிதில் பொருள்புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. படித்தவர்களே கூட புரிந்துகொண்டு ரசித்து சுவைக்க முடியாத நிலை. மரபிலக்கணக் கோட்பாடே இதற்குக் காரணம். எல்லாத் துறைகளிலும் கவிதையே ஆதிக்கம் செலுத்திய காலம். அதற்காக மறைப்பொருளாகவும் இல்லாமல், உறிச்சி வச்ச பலாச்சுளையைப் போல் இல்லாமலும் இருப்பது கவிதைக்கு அழகு.

கவிதையின் பொருள் அழகு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால், கேரள நன்னாட்டு இளம்பெண்கள் போன்று வெளிப்படையாகவும் இருக்கக் கூடாது.

கன்னடத்து பெண்கள்போல் உடல் முழுவதையும் ஆடையால் மூடிக்கொண்டும் இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டுப் பெண்களைப் போல், உடலில் ஆடை மூடியும், மூடாமலும் இருக்க வேண்டும்'' என்றபோது மண்டபத்தில் இருந்தோர் சிரித்து அடங்கவே நீண்ட நேரமானது.

தொடர்ந்து, "'கவிதையின் பொருள் தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாலும், மலர்ந்தும் மலராத மலரைப் போன்று அமைந்திருப்பின் கவிதை ரசனைக்குரியதாக அமையும்'' என்று முடித்தார்
கண்ணதாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com