நாட்டியத்தில் கந்த சஷ்டி கவசம்!

கந்த சஷ்டி நாளன்று சென்னை நாரத கான சபா அரங்கமானது கலை ரசிகர்களால் நிரம்பி,  விழாக்கோலம் பூண்டிருந்தது.
நாட்டியத்தில் கந்த சஷ்டி கவசம்!

கந்த சஷ்டி நாளன்று சென்னை நாரத கான சபா அரங்கமானது கலை ரசிகர்களால் நிரம்பி, விழாக்கோலம் பூண்டிருந்தது. வைஜயந்தி மாலா, நல்லி குப்புசாமி செட்டி, நடிகை சச்சு உள்ளிட்டோர் முன்னிலையில், பிரபல பரத நாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநருமான கலைமாமணி ராதிகா சுரஜித் தனது குழுவினருடன் "கந்தா! கடம்பா! கதிர்வேலா!' எனும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியை ரசித்த தனஞ்செயன்- சாந்தா தம்பதியினர், தங்கள் சிஷ்யையான ராதிகா சுரஜித்தை பெரிதும் பாராட்டினர். ராதிகாவுடன் ஓர் சந்திப்பு:

முருகனை மையப் புள்ளியாக வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?

ஏங்கள் குல தெய்வம் திருச்செந்தூர் செந்திலாண்டவர்தான். எனவே, முருகன் மீது எங்களுக்கு அதீத பக்தி உண்டு.

தேவராய சுவாமிகளின் கனவில் முருகன் தோன்றி, அருளியதன்படி 19-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூரில் பாடப்பட்டதுதான் கந்த சஷ்டி கவசம். ஏராளமான வீடுகளில் தினமும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கும்.

மருத்துவ ரீதியான நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும் சக்தி கந்த சஷ்டிக்கு உண்டு. ஒரு கவசம்போல இருந்து மனிதர்களை நோய்களிலிருந்தும், இன்னல்களில் இருந்தும் மனிதர்களைக் காக்கும் சக்தி கந்த சஷ்டி கவசத்துக்கு உண்டு.

கரோனா காலத்தில், பலர் மரணமடைந்தபோது சோகத்தில் கனத்த மனதுடன், நான் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பேன். அப்போதுதான், கந்த சஷ்டி கவசத்தை பிரதானமாக உள்ளடக்கி, முருகன் தொடர்பான நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைக்கும் எண்ணம் தோன்றியது.

எப்படி செயல் வடிவம் கொடுத்தீர்கள்?

"கந்த சஷ்டி கவசம் என்பது ஒரு மந்திரம். அதற்கு எப்படி நாட்டிய வடிவம் கொடுத்து மேடை ஏற்ற முடியும்? அப்படியே செய்தாலும், அது எந்த அளவுக்கு சாதாரண ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ?' என்கிற கேள்விகள் எழுந்தன. இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொடுப்பதாக நான் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் அளித்தபோதிலும் கூட, அதனை எப்படி செயல்படுத்துவது என்பது குழப்பமாகவே இருந்தது. அதற்காக முருகனிடமே பிரார்த்தனை செய்துகொண்டேன் என்பதைவிட, அவரிடமே சரணாகதி அடைந்துவிட்டேன்.
கடந்த மூன்று மாதங்களில் இந்த நாட்டிய நிகழ்ச்சியை, முருகனே என் உடனிருந்து இயக்கியதாக நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நாட்டிய நிகழ்ச்சியை எப்படி வடிவமைத்துக் கொண்டீர்கள்?

மந்திரமான கந்த சஷ்டி கவசத்துக்கு, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில், ரசிக்கும் வகையில் ஓர் ஜனரஞ்சக நாட்டிய வடிவம் கொடுப்பதுதான் சவாலாக இருந்தது. சூலமங்கலம் சகோதரிகள் பாடி, மிகவும் பிரபலமாக இருக்கும் கந்த சஷ்டி கவசத்தைத்தான் நாங்கள் அடித்தளமாக வைத்துகொண்டோம். அதன் மந்திர வரிகளை மீண்டும், மீண்டும் கேட்டு, அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதன் சாரத்தை மட்டும் எடுத்து, அதனை நாட்டியமாக "கோரியோகிரபி' செய்தேன்.

நடனத்துக்கும் அவர்கள் பாடிய ராகம், தாளத்தையே பயன்படுத்திக் கொண்டேன். கவசத்தின் வரிகளுக்கு நடனம் ஆடும்போது, பூதம், பிசாசு, முனிகள் எல்லாம் வருகிறபோது, மேடையில் ஸ்பெஷல் எஃபெக்ட் மூலமாக பூதம், பிசாசுகள் தோன்றும்படி செய்தோம். சுமார் 25 நிமிட நேரத்துக்கு, சஷ்டி கவசத்தை அப்படியே கண்களுகும், காதுகளுக்கும் இனிய விருந்தாகப் படைத்தோம்.

இதைத் தவிர, திருப்புகழ் மூலமாக முருகனுடைய பிறப்பு பற்றிய நாட்டியம், "அறுபடை வீடமர்ந்த ஆறுமுகா!' என்று பாடலுக்கு நாட்டியம், " தில்லானா' ஆகியன நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இறுதியாக வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஊர்வலமும் இடம்பெற்றது. அரங்கத்தில் உள்ளே ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு, மேடை நோக்கிய ஊர்வலம். எல்லாமாகச் சேர்ந்து சுமார் சுமார் 75 நிமிட நிகழ்ச்சிதான் நாடகம்.

இருபது நடனக் கலைஞர்கள் பங்கேற்க, நிகழ்ச்சி சிறப்புமாக நடந்தேறியது. அனைவருக்குமே,"எல்லாம் அவன் செயல்!' என்ற தெய்வீக உணர்வுதான் ஏற்பட்டது. திருச்செந்தூர் முருகனுக்கு பூஜை செய்து, அங்கிருந்து ஆயிரம் பொட்டலம் விபூதி வரவழைத்து, செந்திலாண்டவர் படத்துடன் பார்வையளர்களுக்கும் வழங்கினோம்.

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் இசைவிழா சீசனில் பாரத் கலாசாரிலும், தியாக பிரம்ம கான சபாவிலும் மீண்டும் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?

நிகழ்ச்சி நாளன்று சென்னை மாநகரில் ஆங்காங்கேதான் மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் எங்களைப் பாராட்டு மழையில் நனையச் செய்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com