எனக்குள் இருந்த கதை சொல்லி!

குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடிக்க வேண்டும். அதற்கான முனைப்புதான் எனக்கு எப்போதும் இருக்கும்.
எனக்குள் இருந்த கதை சொல்லி!

குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடிக்க வேண்டும். அதற்கான முனைப்புதான் எனக்கு எப்போதும் இருக்கும். குடும்ப நேசம், காதல், நல் உணர்வுகள், அன்பு, ஆக்ஷன் என்று அடுத்தடுத்துப் போகும். சினிமா எப்போதும் எதார்த்தத்திலிருந்து விலகிப் போய் விடக் கூடாது என்று நினைப்பேன்.  சினிமா என்பது அப்படியே வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட ஜாடைதான். நல்லதாகவே இதுவரைக்கும் செய்து வந்திருக்கிறேன். என் மீதும், என் பாடல்கள் மீதும் நல் மதிப்புதான் வந்திருக்கிறது. வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி. இதுதான் கற்று தேர்ந்த அனுபவம். கொஞ்சம் கணக்கை இன்னும் நேர் செய்து பயணிக்க வேண்டியுள்ளது. அதுதான்... இதுவரை பாடலாசிரியராக அறியப்பட்ட பிரியன். இப்போது இயக்குநர் ப்ளஸ் ஹீரோ. படத்தின் பெயர் "அரணம்'. 

என்ன, திடீரென்று இயக்குநர், நடிகர் என வந்து விட்டீர்கள்....

சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். குறைவான பாடல்கள் என்றாலும் குறிப்பிடத்தகுந்த பாடல்களை எழுதியிருக்கிறேன். பாடல் வரிகளில் எனக்கென தனி இடம் இருக்கிறது. இருந்தாலும் எனக்குள்ளும் ஒரு கதை சொல்லி தென்பட்டான். அதனால்தான் இந்த முயற்சி.  சினிமா தவிர தேடிப் பிடிக்க மனசு இல்லை. குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை  வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போது இன்னொரு இருக்கை கொடுத்திருக்கிறது காலம். பார்க்கலாம்.... 

என்ன கதை.... 

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர் கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட இன்னொரு மகன் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை  தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை  ஹாரர், க்ரைம்,  த்ரில்லர் வடிவில்  சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறேன். 

என்னதான் சொல்லுங்க.. பாடலாசிரியர் என்கிற இடமே இங்கே பலருக்கு கனவு... அதுவும் நீங்கள் ஹிட் அடிக்கிற கவிஞர்... இருந்தும், ஏன் ஹீரோவாக நடிக்க வேண்டும்.... 

இங்கே வரும் போது என்னிடம் எதுவும் இல்லை. நேர்மையாக உழைப்போம் என்பது மட்டும்தான் மனசு முழுக்க இருந்தது. அந்த உழைப்பு மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். கவிதை, எழுத்து என் உலகம் எப்போதும் தனி. இப்போது இருக்கிற இந்த இடம் கூட நாளைக்கு இல்லாமல் போய் விடலாம். ஆனால், அப்போதும் கூட என் திறமை, உழைப்பு மட்டுமே என்னை முன்னெடுக்கும். இட்லி கடை போட்டால் கூட அதில் நம்பிக்கை வைத்து உழைப்பேன். நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற கேள்வி போகிற இடமெல்லாம் வந்து கொண்டேதான் இருக்கிறது. காலையில் இட்லி சாப்பிட்டேன். மதியமும் நான் ஏன் இட்லி சாப்பிட வேண்டும். அது மாதிரிதான் இதுவும். இந்த இடம் போதும் என்று நினைத்து விட்டால், வாழ்க்கையில் சலிப்பு வந்து விடும். இதுதான் வேலை என எதுவும் இங்கே விதிக்கப்படவில்லை. தொடாத இடங்கள், மீளாத கனவுகள் என ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருக்கிறது. வாழ்க்கை ஒரு தேடல் என்பார்கள். அப்படி தேடிப் பிடித்த இடம் தான் ஹீரோ.இன்னும் கூடுதலாக இதில் இயக்குநர் பொறுப்பு வேறு.  ஒரு வேளை இதில் என் முதல் முயற்சி தோல்வியடைந்து இருந்தால், வேறு மாதிரி யோசித்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லையே. அப்படியென்றால் 
ஏதோ ஒரு இடம் இங்கே காத்திருக்கிறது. அது கண்ணுக்கு தெரிகிறது. நாம் தேடுகிறோமா என்பதுதான் இங்கே முக்கியம். 

நீங்களே இயக்குநர்....

இன்னும் கவனமாக செய்யலாமே. அதுதான். விடாப்பிடியாக பிடிவாதம் கிடையாது. பாடல், ஆக்ஷன், அன்பு என நல்ல இடத்துக்கு வரும் படமாக இது இருக்கும்.  எதுவும் இல்லாமல் வந்தவன் நான். என் பாடல் வரிகளைப் போல் இந்தப் படமும் மக்களுக்கான விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் சந்தோஷம். இந்த படத்தின் திரைக்கதையில் அதிகம் ஈடுபாடு காட்டியதற்கு அதுதான் காரணம். சுவாரஸ்யமாக, அதே நேரத்தில் பொறுப்புள்ள சினிமா எது என்பதில் உங்களுக்கு ஒரு கருத்திருக்கும். எனக்கு ஒரு கருத்திருக்கும். ஆனால், நாம் இரண்டு பேரும் ஒத்துப்போகிற ஓர் இடம் வருமில்லையா? அந்த இடத்தில் "அரணம்' இருக்கும். ஹீரோயின் வர்ஷா உறுத்தாத நடிப்பைத் தந்திருக்கிறார். "ராட்டினம்', "எட்டுத்திக்கும் மதயானை', "சத்ரு' போன்ற படங்களில் கதைநாயகன் லகுபரன் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு புதுமுகம் கீர்த்தனாவுக்கு இன்னொரு முக்கிய இடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com