அன்றும் இன்றும் "ஆட்டோ'தான்!

ஊராட்சி மன்ற உறுப்பினராகிவிட்டாலே வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்வோர் இருக்கும் இன்றைய சூழ்நிலையில்,   சிதம்பரம் நகர்மன்றத் துணைத்  தலைவரான முத்துக்குமரன் ஆட்டோ  ஒட்டிதான் வாழ்க்கையை நகர்த்துகிறார்.
அன்றும் இன்றும் "ஆட்டோ'தான்!

ஊராட்சி மன்ற உறுப்பினராகிவிட்டாலே வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்வோர் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவரானமுத்துக்குமரன் ஆட்டோ ஒட்டிதான் வாழ்க்கையை நகர்த்துகிறார்.

கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் நகர்மன்றத்தின் 33-ஆவது வார்டு உறுப்பினராக இரு ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், துணைத் தலைவராகவும் தேர்வானார். தற்போது நாற்பத்து இரண்டு வயதாகும் இவர், 19 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

என்னை ஆட்டோ ஓட்டுநராகவே மக்களுக்குத் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெற்றி பெற்றேன்.

கடந்த முறை நகர்மன்றத் தலைவராக எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தார். தற்போது துணைத் தலைவர் பதவி எங்கள் கட்சிக்குக் கிடைத்ததால், பதவிக்கு வந்தேன்.

கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் எம்எல்ஏவாக இருந்தபோது, தொகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செய்துகொடுத்தேன்.

கட்சியில் மாவட்டக் குழு உறுப்பினராகவும், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவராகவும் பதவி வகித்துவருகிறேன்.

கரோனா காலத்துக்கு முன்னரே மக்களுக்காகப் பணிபுரிந்துள்ளேன். பல நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவியிருக்கிறேன். மக்களின் பொது பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ளேன். இதனால், சாதி பேதமின்றி மக்கள் என்னைத் தேர்வு செய்தனர்.

இன்றைக்கும் தினமும் காலையில் வார்டுக்குப் போய் குழாய்களில் தண்ணீர் வருகிறதா?, குப்பைகள் அகற்றப்படுகின்றனவா? என்று பார்ப்பேன். மாலை வேளைகளில் தெருக்களில் மின் விளக்குகள் எரிகிறதா என்று பார்த்துவிட்டு வருவேன். எரியாத விளக்குகளை மறுநாள் மாற்றச் சொல்வேன்.

எனது வார்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று மாராமத்து வேலைகளை கேட்டறிந்து, அதை செய்து முடிப்பேன்.

லஞ்சம் பெற ஆரம்பித்தால் பத்தோடு பதினொன்றாக மாறி விடுவோம். இந்த ஆளும் அப்படித்தான் என்று மக்கள் என்னை மதிக்க மாட்டார்கள். பதவியைப் பயன்படுத்தி முடிந்த சேவைகளை மக்களுக்கு செய்யத்தான் என்னை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்துவது இல்லை. நான் வெற்றி பெற்ற பிறகு குறிப்பிட்ட சிலரால் பல பிரச்னைகள் எழுந்தன.

என்னை பதவியை இழக்கச் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் நடக்கின்றன. அவர்களுக்கு ஏமாற்றம் தரும்விதத்தில் எனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளேன்.

ரேஷன் கடைக்கு சென்றால் வரிசையில் நின்றுதான் பொருள்களை வாங்குவேன். வார்டில் நடக்கும் ஒப்பந்தப் பணிகளை மேற்பார்வை செய்யும் போது, மக்கள் குறை செல்லாதபடி சிறப்பாக வேலைகளை முடிக்கச் சொல்வேன்.

நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிக்காக, கிடைக்கும் ஊதியமான பத்தாயிரம் ரூபாயில் கட்சிக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துவிடுவேன். வார்டு பணிகளுக்காக எனது ஆட்டோவைப் பயன்படுத்துவேன். அதற்கான பெட்ரோல் செலவு மிச்சமிருக்கும் ஐந்தாயிரத்தில் எடுத்துக் கொள்வேன்.

நகர்மன்ற வேலைகள் முடித்தவுடன் காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டுநராகிவிடுவேன். தினமும் ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.

நகர்மன்றத் துணைத் தலைவரானவுடன் எனது ஆட்டோவில் சவாரி செய்ய பலரும் தயங்குவார்கள். "ஆட்டோ ஒட்டித்தான் நான் பிழைக்கிறேன். நீங்க வரலைன்னா எனக்கு வருமானம் குறையும். ஆட்டோல ஏறுங்க?' என்று வற்புறுத்தி ஏறச் சொல்வேன்.

சிலர் என்னுடன் "செல்ஃபி' எடுத்துக் கொள்வார்கள். எனது மகள் வேளாண்மைப் படிப்பையும், மகன் பொறியியல் பட்டப்படிப்பையும் படிக்கின்றனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com