ஆலஞ்சேரியில் அவ்வையார் திருவிழா!

சங்க காலப் புலவர் அவ்வையாருக்கு ஆலஞ்சேரியில் கோயில் கட்டி திருவிழா நடத்தி வருகின்றனர் கிராம மக்கள்.  ஆண்டுதோறும் 3 நாள்கள் நடைபெறும் திருவிழா வியக்க வைக்கிறது.
ஆலஞ்சேரியில் அவ்வையார் திருவிழா!

சங்க காலப் புலவர் அவ்வையாருக்கு ஆலஞ்சேரியில் கோயில் கட்டி திருவிழா நடத்தி வருகின்றனர் கிராம மக்கள்.  ஆண்டுதோறும் 3 நாள்கள் நடைபெறும் திருவிழா வியக்க வைக்கிறது.

மனித வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மகத்தான தத்துவங்களைப் பாடல்கள் மூலம் வாரி வழங்கிய இவர் எழுதிய "ஆத்திச்சூடி' இன்றைய சிறார்களும் எளிதில் புரிந்து கொள்ளும் சொற்றொடர்களால் அமைந்திருக்கிறது. 

இப்படி பெருமைக்குரிய அவ்வையாருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட  உத்தரமேரூர் அருகேயுள்ள தோட்ட நாவல் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலஞ்சேரி எனும் குக்கிராமத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.  

"1961-ஆம் ஆண்டு ஜூன் 21-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஓ.வி.அழகேசன் தலைமையில்,  முதல்வராக இருந்த காமராஜரால் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  உத்தரமேரூர் எம்எல்ஏ நரசிம்ம பல்லவன் தலைமையில்,  ஒன்றியப் பெருந்தலைவர் கே.பி.ஜானகிராமனால் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது' என்ற விவரங்கள் கோயில் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

கோயிலுக்குள் அவ்வையார் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பலகையில், "வாழ்க தமிழ், வளர்க அவ்வையின் புகழ்'  என்றும் "எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பும் இல்லை'  என்றும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.  தமிழ்க் கடவுள் முருகன், "சுட்ட பழம் வேண்டுமா,சுடாத பழம் வேண்டுமா'  என்று கேட்டு அவ்வையை வியக்க வைத்த படம் ஒன்றும் கோயிலில் உள்ளது.

அரச மரத்தடியில் அவ்வையார் சிலையும்,அதற்கு அருகிலேயே திறந்தவெளியில் மேற்கூரையுடன் உள்ள ஒரு இடத்தில் பட்டுச்சேலை அணிந்திருந்தவாறு ஒரு அவ்வையார் சிலையும் உள்ளன. இவையிரண்டும் சிமென்ட் கலவைகளால் செய்யப்பட்டிருந்தன.  இக்கோயிலில் தான் ஆலஞ்சேரி கிராம மக்கள் 3 நாள்கள் திருவிழாவாக நடத்தி வருகின்றனராம்.

இதுகுறித்து தோட்ட நாவல் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வேந்தன் கூறியதாவது:

""தமிழ்நாட்டிலேயே அவ்வையாருக்குக் கோயில் கட்டியிருப்பது ஆலஞ்சேரி கிராமமாகத்தான் இருக்கும். காரைக்காலிலிருந்து நடந்து வரும்போது எங்கள் கிராமத்தில் உள்ள அரச மரத்தடியில் தங்கியுள்ளார். களைப்பால் குடிக்க தண்ணீர் கேட்டபோது, கிராம மக்கள்  கூழ் கொடுத்திருக்கின்றனர். அப்போது அவ்வையுடன் ஒரு நாயும் கூடவே நடந்து வந்திருந்துள்ளது. அதிகமான தாகத்திலும் அவ்வை 

முதலில் கூழை நாய்க்கு கொடுத்து விட்டு பின்னரே அவர் அருந்தியிருக்கிறார்.
ஆலஞ்சேரியில் அரசு மரத்தடியில் 3 நாள்கள் தங்கி இருந்து விட்டு (அந்தக்காலத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால்) பின்னர் உத்தரமேரூருக்கு நடந்து சென்றதாக எங்கள் முன்னோர்கள் வழிவழியாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் 3 நாள்கள் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அந்த நாள்களில் யாரும் விவசாயப் பணிகளுக்கு கூட செல்வதில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சித்திரை மாதம் அக்கினி நட்சத்திர நாட்களின் போது, திருவிழா நடத்தப்படுகிறது.

முதல் நாள் கொடியேற்றம், 2-ஆவது நாள் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், 3-ஆவது நாள் மதியம் கூழ் ஊற்றும் நிகழ்வும் நடைபெறும்.

அவ்வைக்குச் செய்யப்பட்ட கூழை முதலில் தெரு நாய்களுக்கு ஊற்றுவோம். அதன் பின்னரே அவ்வையாருக்கு படைக்கிறோம். பிரசாதமாக கூழ் வழங்குவோம்.

உத்ஸவர் அவ்வையாரின் சிலையை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் வைத்து தேரோட்டமும் நடைபெறும். அப்போது, "தமிழ் வாழ்க.. 

அவ்வையார்  புகழ் வாழ்க!' என்று உரக்க கோஷமிட்டு தேரை இழுத்து செல்வோம்.  இரவு நாடகம் நடத்தப்படுவதோடு விழா நிறைவு பெறுகிறது.

இளைய சமுதாயத்தினர் அவ்வையாரை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், தமிழின் மீது பற்று ஏற்படவும் விழா நடைபெறுகிறது.

கோயில் இருக்கும் இடத்தை சுற்றிலும் யாரும் கடப்பாரையோ, மண் வெட்டியோ பயன்படுத்த மாட்டோம்.  அவ்வையார் கால்  பட்ட இடங்களாக இருப்பதால் அந்த இடங்களைக் கூட நாங்கள் இன்றும் காயப்படுத்துவதில்லை. 

குழந்தைகள் வரம் வேண்டுவோர்க்கு குழந்தை செல்வங்களை தந்தருளும்
தாயாகவும் அவ்வையார் அருள்புரிந்து வருகிறார்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com