சிறுதானியங்கள் சிறந்த உணவு..!

சென்னையைச் சேர்ந்த சிறுதானிய சமையல் வல்லுநர் இந்திரா நாராயணன்,  சிறுதானியங்களைப்  பயன்படுத்தி சமையல்செய்முறை விளக்கங்களை அளித்துவருகிறார்.
சிறுதானியங்கள் சிறந்த உணவு..!

சென்னையைச் சேர்ந்த சிறுதானிய சமையல் வல்லுநர் இந்திராநாராயணன், சிறுதானியங்களைப் பயன்படுத்தி சமையல் செய்முறை விளக்கங்களை அளித்துவருகிறார். சவேரா நட்சத்திர ஹோட்டலில் சிறுதானிய உணவுகளுக்கான ஆலோசகராவும் இருக்கிறார். ஐ.நா. 2023-ஆம் ஆண்டினை "சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக' அறிவித்துள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். அவருடன் ஓர் சந்திப்பு:

உங்களுக்கு சிறுதானியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

2012 -ஆம் ஆண்டில் எனக்கு கண்அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது உடல் மிகவும் பருமனாக இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களைச் சாப்பிட ஆலோசனை கூறினர். கொஞ்சம், கொஞ்சமாகச் செய்து பார்க்கத் துவங்கினேன்.

ஒருகட்டத்தில் தினம் மூன்று வேளையும் சிறுதானிய உணவு வகைகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்தேன். நல்ல பலன் தெரிய ஆரம்பித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கிலோ வரை எனது எடை குறைந்துள்ளதே சிறுதானிய உணவின் சிறப்புக்கு சாட்சி!

சிறுதானிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது எப்படி?

2017-இல் என் கணவர் நாராயணன் மறைந்தது, பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. எதிர்காலமே இருண்டதாக உணர்ந்தேன்.

கரோனா காலத்தின்போது, அமெரிக்காவில் வசிக்கும் என் மகளுடன் தங்கி இருந்தேன். அவள் எனது யதார்த்த நிலைமையை புரியவைத்து, சோகத்தில் இருந்து மீள வேண்டும் என்று சொன்னதுடன், சிறுதானியங்கள் சமையல் குறிப்புகளை நூலாக எழுதி வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தார்.

சில வாரங்களில் முப்பது சிறுதானிய சமையல் குறிப்புகளை எழுதிக் கொடுத்தேன். அவர் அவற்றை நூலாகத் தயாரித்து, அமேசான் கிண்டில் விற்பனைக்கு வழி செய்தார். அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதுவரை 25 ஆயிரம் பிரதிகள் விற்பனைஆகியுள்ளன. சென்னை திரும்பியதும் புதிய உணவு வகைகளைத் தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்தது.

புதிய சமையல் வகைகளை உருவாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

வழக்கமான செய்முறைக் குறிப்புகளுக்குப் பதிலாக, மாறுபட்ட கோணத்தில் யோசித்தேன். உதாரணமாக, மகாராஷ்டிரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி போஹா.

அரிசி அவலில் செய்வார்கள். வழக்கமாக, அதைச் செய்யும்போது கடைசியில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிவது வழக்கம். நான் மாற்றி யோசித்து, அவலை ஊற வைப்பதற்கு ஆரஞ்சு சாற்றைப் பயன்படுத்தினேன். போஹா மிகவும் மாறுபட்ட ஆரஞ்சு சுவையுடன் மிகவும் ருசியாகஇருந்தது.

அடுத்து "ஸ்டிராபெர்ரி' சாற்றைப் பயன்படுத்தி, வேறுருசியில் போஹா செய்து பார்த்தேன். அதுவும் நன்றாக, மாறுபட்ட சுவையுடன் இருந்தது.

அதிக எண்ணிக்கையில் சமையல் குறிப்புகளை எழுதி, வண்ணப் படங்களுடன் நூலாக வெளியிட்டேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாயகி டி.வி.யில் சமையல் செய்முறை விளக்கம் வழங்க வாய்ப்பு கிடைத்தது. இன்ஸ்டாகிராம் மூலமாகவும் சமையல் குறிப்பு களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

சர்வதேச சிறுதானிய ஆண்டில்என்னஆலோசனைகள் வழங்க உள்ளீர்கள்?

சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தவை. அரிசி, கோதுமையில் மாவுச்சத்து அதிகமாக இருக்கும். சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.

சிறுதானியங்கள் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை அல்ல. அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, குறைந்தபட்சம் 5 மணி நேரம் நன்றாகத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்போதுதான்அவற்றின்உட்புறத்தில் இருக்கும் நார்ச்சத்துகள் மலர்ந்து, எளிதில் செரிக்கும் தன்மையைப் பெறும்.

சூப் முதல் இனிப்பு வகைகள் வரை முழுமையான விருந்தில் இடம்பெறும் அனைத்து வகையானவற்றையும் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்க முடியும். செரிமானப் பிரச்னைகள் வரக் கூடும் என்பதால், சில சிறுதானியங்களை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com