காலண்டர் ஓவியத்தில்  காவியம் படைத்தவர்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை எழுந்தவுடன் காலண்டரில் தேதியை மாற்றும் பழக்கம் இருந்தது.
காலண்டர் ஓவியத்தில்  காவியம் படைத்தவர்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை எழுந்தவுடன் காலண்டரில் தேதியை மாற்றும் பழக்கம் இருந்தது. ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கைக்கு அடக்கமாக கைப்பேசி வந்துவிட்ட பின்னர் காலண்டரை நாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு நாள், நட்சத்திரம், நல்ல நேரம் அனைத்தும் கைப்பேசியிலேயே வந்துவிட்டது. ஆனாலும், பார்த்தால் பசி தீர்ந்துவிடுமா?, அதனை புசித்தால் தான் பசியை ஆற்றுப்படுத்த முடியும். அப்படி பார்த்தால் அனைத்தையும் டிஜிட்டலில் பார்ப்பதை விட, நாளிதழ்கள், கதை, கட்டுரை புத்தகங்களை கைகளில் ஏந்தி படிக்கும் சுகம் அலாதி தான். அதனை உணர்ந்தவர்கள் இன்றும் காலையில் எழுந்தவுடன் காலண்டர்களில் தேதி மாற்றுவது, காபியுடன் நாளிதழ்களை புரட்டுவது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

காலண்டர்களை பொருத்தவரை நாள், கிழமை பற்றிய தகவல்கள் இருந்தாலும், அதன் அட்டையில் பரவசப்படுத்தும் பக்தி ஓவியங்கள் அனைவரின் நினைவில் ஆழப்பதிந்திருக்கின்றன. இத்தகைய காலண்டர் ஓவியக் கலையை வளர்த்தெடுத்தவர்கள் கொண்டையராஜு போன்ற ஓவியக் கலைஞர்கள்தான். கொண்டையராஜு பெயரிலேயே ஓவியப் பள்ளி நடத்தி பாரம்பரிய ஓவியக் கலையை பயிற்று வித்துவரும் அவரது சீடர் முருகபூபதி தனது குருவைப் பற்றி கூறுகிறார்:

ஓவியர் கொண்டையராஜுவை முதன் முதலில் ஆய்வு செய்து வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் கனடாவில் இந்தியப் பண்பாடு குறித்த கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருபவரும், சிவகாசி காலண்டர் ஓவியங்களைச் சேகரித்து கனடா தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருபவருமான மானுடவியல் ஆய்வு அறிஞர் ஸ்டீபன் எஸ். இங்க்லீஸ்.

ஆந்திரத்தைச் சேர்ந்த வைத்தியர் சி.குப்புசாமி ராஜு - அலமேலு மங்கம்மாள் தம்பதிக்கு1899-ஆம் ஆண்டில் நவம்பர் 7-இல் மகனாகப் பிறந்தவர் கொண்டையராஜு. தனது11-ஆவது வயதில் தந்தையை இழந்த அவர், தனது சித்தப்பா பி.ரங்கையராஜுவின் பாதுகாப்பில் வளர்ந்தார். ரங்கையராஜு சென்னையில் சிறந்த ஓவியராகவும், புகைப்பட வல்லுநருமாக திகழ்ந்தார். அதனால், கொண்டையராஜுவுக்கு அவரது தந்தையுடன் முற்றுப்பெற்ற கல்வியை, ஓவிய வடிவத்தில் தொடர, ரங்கையாராஜு முடிவெடுத்து, 1915-ஆம் ஆண்டில் சென்னை அரசினர் ஓவியப்பள்ளியில் சேர்த்தார்.

ஓவியத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கொண்டையராஜு, 1918-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

தந்தையை இழந்த சோகம் அவரை வாட்டியதால் தனிமையையே விரும்பினார்.

இதனால், அவர் 1920-ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் உள்ள ரமண ஆஸ்ரமத்தில் இணைந்து, அங்குள்ள சீடர்களுடன் சேர்ந்து யாசகம் பெற்று குருவுக்கு சமர்ப்பித்து பிரமச்சரியத்தை கடைப்பிடித்தார்.

தண்ணீருக்குள் பந்தை மூழ்கடித்தாலும் அது வெளிவந்தே தீரும் என்பதைப் போல ரமண ஆஸ்ரமத்தில் நடந்த ஒரு சம்பவம் கொண்டையராஜுவின் ஓவியத் திறமையை உலகறிய செய்ய தூண்டியது. பகவான் ரமண ரிஷிகளின் படத்தை பெரியளவில் ஒரு பக்தர் வரைந்து கொண்டு வந்தார். அதனை ரமண மகரிஷி வாங்கி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் படத்தில் சில குறைபாடுகள் இருக்கிறது என கூறினார்.

சீடர்களுடன் அமர்ந்திருந்த கொண்டையராஜு, "ஸ்வாமிகள் அனுமதி கொடுத்தால் ஓவியத்தில் உள்ள குறையைச் சரிசெய்கிறேன்' என்றார். அவரைக் கூர்ந்து பார்த்த பகவான் ரமண மகரிஷி, படத்தை அவரிடம் வழங்கினார். அனைவரின் ஆர்வமும் கொண்டையராஜுவின் பக்கமே இருந்தது. சிறிது நேரம் சென்றது. படத்தைத் திருத்திக் கொண்டு வந்து வழங்கினார் கொண்டையராஜு. அதனைப் பார்த்த ரமண மகரிஷி, ஓவியத்தைப் பார்த்து, "உனக்குள் இவ்வளவு திறமை இருக்கிறதா?' என கேட்டு, "உன்னால் கலை உலகம் பயனடைய வேண்டும்' என்று அன்பு கட்டளையிட்டு ஆசிர்வதித்து ஆஸ்ரமத்திலிருந்து அனுப்பி வைத்தார்.

நாடக சபாக்களில்...

அப்போது திருவண்ணாமலையில் ஒரு நிதிக்காக வழக்குரைஞர்களும், அதிகாரிகளும் சேர்ந்து ஒரு நாடக சபாவை நடத்தி வந்தனர். அவர்களுக்கு திரை ஓவியங்கள் வரை வேண்டும் என ஆஸ்ரமத்தோடு தொடர்பில் இருந்த நகர்மன்றத் தலைவர் ராமசாமி ஐயர், கொண்டையராஜுவை அழைத்துச் சென்றார். அப்போது தான் டி.டி.சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீமீனலோசனி பாலசற்குண சபா விழுப்புரத்தில் நாடகங்கள் நடத்தி வந்தனர். சங்கரதாஸ் சுவாமிகளும், சபா உரிமையாளர் டி.என்.பழனியப்ப பிள்ளையும், கொண்டையராஜுவை சபாவிலேயே ஓவியராக அமர்த்தினர்.

சீடர்களுக்காக ஸ்டூடியோ

தமிழகத்தின் பல ஊர்களுக்கும், இலங்கைக்கும் பயணித்த அந்த நாடக கம்பெனி நலிவடைந்தது. அப்போது கொண்டையராஜுவின் சீடர்கள் அவரை கோவில்பட்டிக்கு வந்துவிடும்படி அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று, 1942-ஆம் ஆண்டு கொண்டையராஜு கோவில்பட்டிக்கு வந்தார். அவரை நம்பிவந்த சீடர்களுக்காக, "தேவி ஆர்ட் ஸ்டூடியோ' என்ற கலைக்கூடத்தை நிறுவினார். அதனை அவரது சீடர்கள் குருகுலமாகவே கருதினர். அங்கிருந்தபடியே, உள்ளூர் கோயில் அம்மன்களை வரைந்து வெளியிட்டு வந்தார் கொண்டையராஜு. ஓவியர் ராஜா ரவிவர்மா போல், கொண்டையராஜுவும் இந்து தெய்வங்களின் அழகிய ஓவியங்களை வரைந்தார். மிகவும் தத்ரூபமாக இருந்ததால், கொண்டையராஜுவின் கடவுளர் ஓவியங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. கொண்டையராஜுவிடம் டி.எஸ். சுப்பையா, ராமலிங்கம், டி.எஸ். மீனாட்சி சுந்தரம், டி.எஸ். அருணாசலம், செண்பகராமன் சீனிவாசன் ஆகியோர் சீடர்களாக இருந்தனர்.

தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

சிவகாசி அச்சகத்தார் முதலில் கொண்டையராஜுவைத் தொடர்புகொண்டபோது, விருதுநகர் அம்பாள் காபி நிறுவனத்துக்காக முதலில் தயாரானது மீனாட்சி திருக்கல்யாணம். கொண்டையராஜுவின் பெயரில் வரையப்பட்டிருந்தாலும் வரைந்தவர் ராமலிங்கம். அவருடைய சீடர்கள் தங்களுடைய படங்களுக்கு அவருடைய பெயரை முதலில் எழுதி, பிறகு தங்களுடைய பெயரை இணைப்பதை மரபாக வைத்திருந்தனர். ஓவியர் கே. மாதவன் சமூகக் காட்சிகளையும் தமிழர் பண்பாட்டையும் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்து அச்சிட்டார்.

குறிப்பிட்ட சில நிறுவனங்கள் காலண்டருக்கென தனி தெய்வங்கள், கோயில் தெய்வங்களை வெளியிட்டுவந்தன. பெங்களூரு கணேஷ் பீடி நிறுவனம் பிள்ளையாரின் திருவிளையாடல் காட்சிகளையும், பெங்களூரு எம்.ஜி.பிரதர் லாரி நிறுவனம் ராகவேந்தர் படங்களையும், நல்லி சில்க்ஸ் பெண் சக்தி தெய்வங்களையும், மேட்டூர் கெமிக்கல்ஸ் நிறுவனம் கோயில்களுக்குச் சென்று வரலாற்று விவரங்களுடன் அந்த ஊர் தெய்வங்களையும், ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் நிறுவனம் அனுமன் படத்தையும், கிரைப் வாட்டர் நிறுவனம் கிருஷ்ணன் உருவங்களைத் தாங்கி காலண்டர் படங்களையும் வெளியிட்டுவந்தன.

காலண்டர் யுகத்தின் ஆரம்பத்தில் அதிகம் காணப்பட்ட முருகன் இடத்தை, பிள்ளையார் பிடித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து செல்வத்தின் கடவுளாகப் பார்க்கப்படும் லட்சுமி பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டார். திருப்பதி வேங்கடாசலபதி, தீபாவளி பூஜை படங்கள், முருகன், மதுரை மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்கள் போன்றவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

பின்வந்த காலங்களில் அந்தந்த ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட தலைவர்கள், சம்பவங்களை வைத்து காலண்டர்கள் வெளிவந்தன.

பொதுவாக, காலண்டர் ஓவியங்கள் ரசனைக்காக இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அம்சமாக இருந்து வந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் காலண்டரின் வேலை குறைந்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும், அதனையும் விஞ்சி இன்றும் வீடுகளில் விநாயகர், முருகன், லட்சுமி, வேங்கடாசலபதி உள்ளிட்ட கடவுளர்களின் படங்களைத் தாங்கிய காலண்டர்கள் காட்சியளிக்கின்றன.

இதுவே ஓவியர் கொண்டையராஜுவுக்கும், கோவில்பட்டி ஓவியர்களின் ஓவியத்துக்கும் சான்றாக இருக்கிறது.

சிலையும், நினைவிடமும்...

"கொண்டையராஜு கோவில்பட்டிக்கு தனது சீடர்களுக்காகவே வந்தார். அவருக்கு இளையரசனேந்தல் ஜமீன்தார் கிருஷ்ணன் கோயில் தெற்கு ரதவீதியில் உள்ள ஓரிடத்தை கொடுத்தார். அதிலிருந்த படியே தான் எங்களுக்கு வாழ்வளித்தார். அவரது கடைசி காலத்தில் அவருக்கு எல்லாமுமாக இருந்து கவனித்துக் கொண்டேன். இதனை நான் எனது குருவுக்கு செய்யும் கடமையாக தான் எண்ணினேன். 1976-ஆம் ஆண்டு ஜூலை 27-இல் அவர் காலமானார். அவர் கோவில்பட்டியில் சுமார் 35 ஆண்டுகள் வசித்தார். எனது குருநாதர் கொண்டையா ராஜு வாழ்ந்து மறைந்த இடத்தில் அவருக்கு ஒரு சிலையும், நினைவிடமும் அமைக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அந்த எண்ணம் இதுவரை ஈடேறவில்லை. ஆனாலும் எனது முயற்சியில் இருந்து பின் வாங்கவில்லை. எனது குருநாதர் வளர்த்த கலை எங்களுடன் நின்றுவிடக்கூடாது என்பதற்காக தான் அவரது பெயரிலேயே ஓவியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறேன்' என்றார் கொண்டையராஜுவின் கடைசி சீடரும், கொண்டையராஜு ஓவியப் பயிற்சிப் பள்ளியின் நிறுவனருமான முருகபூபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com