விழிப்புணர்வு மருத்துவர்!

சர்க்கரை நோயாளிகளே எங்களிடம் வராதீர்கள்.  உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள் என்று கோவையைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் எஸ்.வேலுமணி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
விழிப்புணர்வு மருத்துவர்!


சர்க்கரை நோயாளிகளே "எங்களிடம் வராதீர்கள். உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள்' என்று கோவையைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் எஸ்.வேலுமணி (72) விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

உலகில் பரவலாகக் காணப்படும் நோய்களில் முதன்மையானதாக நீரிழிவு (சர்க்கரை) நோய் உள்ளது. இந்த நிலையில், சர்க்கரை நோய் பாதிப்புகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து "கட்டுப்படுத்துங்கள், வெல்லுங்கள் நீரிழிவு நோயை' என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வேலுமணி எழுதி வெளியிட்டுள்ளார். இதேபோல, அவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் கோவை, புலியகுளம் அப்பாசாமி லே-அவுட்டில் 1982- ஆம் ஆண்டு முதல் "ஓம் சக்தி' மருத்துவமனையை நடத்தி வருகிறார். தனது மனைவியும் மருத்துவருமான ஜெயலட்சுமியுடன் சேர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி, உடற்பயிற்சி, இயற்கை உணவுகள், சிறுதானியங்களின் அவசியம், ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் குறித்து எடுத்துரைக்கின்றனர் இந்த மருத்துவத் தம்பதி.

இதுதொடர்பாக மருத்துவர் எஸ்.வேலுமணி கூறியதாவது:

வயதானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே வரும் நோயாக நீரிழிவு நோய் இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் உழைப்பின்மை, அதீத உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. சிறு வயதிலே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் இதுவே காரணம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது உணவுப் பழக்கத்தில் அரிசி உணவு குறைவாகத்தான் இருந்தது. கேழ்வரகு, சோளம், கம்பு, குதிரைவாலி, தினை போன்ற சிறுதானியங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கியதுடன் செரிமானத்தை தாமதப்படுத்தியது. இதனால் உடல் உழைப்பும் அவசியமானது. ஆனால், அரிசி பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக சிறு தானியங்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொண்டனர். தற்போது அரிசியிலுள்ள சத்துகள் நீக்கப்பட்டு வெள்ளை நிறத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசியை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மைதா மூலம் உற்பத்தி செய்யப்படும் பரோட்டா, பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. நார் சத்துள்ள பொருள்களைக் குறைத்துக் கொண்டு நாக்கின் சுவையை மட்டுமே கருத்தில் கொண்டு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்துள்ளது.

கவனிக்கப்படாமல் விடும் நீரிழிவு நோயால் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல் போன்றவையும்ஏற்படுகின்றன.

எனவே, நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான வாழ்க்கை முறை (நேரத்தில் தூங்கி நேரத்தில் விழித்தல்), நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். நமது முன்னோரில் யாருக்காவது நீரிழிவு நோய் பாதிப்பு இருந்திருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மேற்கண்ட வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றும்போது நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதை 10 முதல் 20 ஆண்டுகள் வரை தள்ளிப்போட முடியும். அதேபோல நீரிழிவினால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்க முடியும். அனைவரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இயற்கையை நேசித்து, இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி, அளவாக உண்டு நோயற்ற வாழ்வை வாழலாம்'' என்றார்.

படம் : வீ.பேச்சிக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com