களைகட்டிய கேன்டீன் கச்சேரிகள்!

சென்னையில் இசை விழா என்று நடக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதன் உடன்பிறந்த சகோதரியாக கேன்டீன்களும் வந்துவிட்டன. 
களைகட்டிய கேன்டீன் கச்சேரிகள்!


சென்னையில் இசை விழா என்று நடக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதன் உடன்பிறந்த சகோதரியாக கேன்டீன்களும் வந்துவிட்டன.

சபாக்களிலும் அரங்கங்களின் உள்ளே செவிக்கு உணவு என்றால், அரங்கத்துக்கு வெளியில் கேன்டீன்கள் நாவுக்கு சுவையான உணவை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தன.

முன்பெல்லாம், பெரும்பாலான கச்சேரி கேன்டீன்களில் டிபன் ஐட்டங்கள்தான் கிடைக்கும். ஆனால், அண்மைக்காலமாக, முழு வாழையிலைச் சாப்பாடும்
ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றன.

கச்சேரிகளுக்கு ஒரு சுற்று போய் கேன்டீன்காரர்களிடம் பேசினோம்.

இதுகுறித்து மயிலாப்பூரில் வித்யா பாரதி அரங்கில் பார்த்தசாரதி சுவாமி சபாவில் கேன்டீன் நடத்திய அறுசுவை அரசு நடராஜனின் மகன் அறுசுவை ஸ்ரீதர் கூறியதாவது:

""கச்சேரிகள் கேட்க வரும் இசைப் பிரியர்கள் ஒருபக்கம் என்றால், சாப்பிடுவதற்காகவே வந்தவர்கள் பலர். நல்ல சாப்பாடு ஒன்றுதான், திருப்தியோடு போதும்! என்று சொல்ல வைத்து, பாராட்டுகளையும் பெற்றுத் தரும். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று கூறும் எனது தந்தை அறுசுவை நடராஜன் கல்யாணச் சாப்பாட்டை அறிமுகப்படுத்தியவர். இந்த ஆண்டு வழக்கமான இலைச் சாப்பாட்டுக்குப் பதிலாக வித்தியாசமாக தங்க (நிற) தாம்பாளத்தில் பல்வேறு ஐட்டங்களையும் வைத்து சாப்பாடு போட்டோம். குறிப்பாக, கோவைக்காய் பொறியல், பாகற்காய் ரோஸ்ட், கருணை சிப்ஸ், துவையல் போன்றவற்றை மிகவும் ருசித்து சாப்பிட்டார்கள். எங்கள் "ராயல்
சாப்பாட்டுக்கு' நல்ல வரவேற்பு.

சபா கேன்டீன் என்பது சுலபமான காரியமில்லை. சுமார் பதினைந்து, இருபது நாள்களும், அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இரவு பத்து, பதினோரு மணி வரை ரசிகர்கள் வந்துகொண்டிருப்பார்கள். கிச்சன் ஊழியர்களும், இதர பணியாளர்களும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்க வேண்டும். புதுப் புது ஐட்டங்களைக் கொடுக்க வேண்டும். அதேசமயம் பாரம்பரிய ருசியோடும் இருக்கவேண்டும்'' என்று தாம் சந்திக்கும் சவால்களைப் பட்டியலிட்டார் விஜயகுமார்.

""காலை நேரங்களில் இட்லி, வடை, பொங்கல், பூரி, கிச்சடியைத் தவிர தோசை வெரைட்டிகளை பலரும் விரும்பிக் கேட்கும் ஐட்டங்கள். மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற வழக்கமான ஐட்டங்களோடு தட்டு இட்லி, பெசரட்டு, ரவா தோசை, அடைஅவியல், செட்டிநாட்டு ஐட்டங்கள், பணியார வகைகள் போன்றவை சக்கை போடு போட்டன. ரசிகர்கள் மட்டுமல்லாமல், கச்சேரி முடிந்து வீட்டுக்குப் புறப்படும் முன்பாக கேன்டீன் பக்கம் எட்டிப் பார்த்த இசைக் கலைஞர்களுக்கும் அரங்கத்தின் உள்ளேயே கொடுத்து அவர்கள்சாப்பிடும்படியாக மியூசிக் அகாதெமியில்ஏற்பாடு செய்துவிட்டனர். இரவு கச்சேரி முடிந்தபிறகு, கேண்டீனுக்கு வந்து நிதானமாக ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து சாப்பிட்டு மகிழ்ந்த கலைஞர்களும் உண்டு. இன்னும் சிலர் தங்களுக்கு வேண்டியதை பார்சல் வாங்கிக் கொண்டுசென்றனர்'' என்றும்
விஜயகுமார் கூறினார்.

"கடந்த ஆண்டில் முழுஅளவில் கச்சேரிகள் நடைபெறவில்லை. ஆனாலும்,மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் கேன்டீன் நடத்தினோம். தொற்று பயம் காரணமாக, பலர் சாப்பாடு, டிபன் ஐட்டங்களை பார்சல் வாங்கிச் சென்றார்கள். இந்த ஆண்டு ஏராளமானவர்கள் நேரில் வந்து சுடச்சுட எல்லாவற்றையும் சாப்பிட்டது எனக்கு பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது'' என்றார் சாஸ்தா கேட்டரிங் வெங்கடேசன். அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 12 ஆண்டுகளுக்கும் மேல் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்துவிட்டு, தந்தை வழியில் கேட்டரிங் பிசினசுக்குவந்த இவர், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் கேன்டீன் நடத்தியதுடன், கலாஷேத்திராவின் கலைவிழாவில் மாலை நேரத்தில் மட்டும் செயல்படும் கேன்டீனை நடத்தினார் இந்த சீசனில்!

மியூசிக் அகாதெமியில் கேன்டீன் நடத்திய வி.ஆர்.கேட்டரிங் விஜயகுமார் பேசுகையில், ""குழந்தைகளையும்அழைத்துக் கொண்டுகுடும்பத்துடன் வருகிறார்கள். அதனால், உணவு ஐட்டங்களில் நிறைய வெரைட்டியை எதிர்பார்க்கிறார்கள். இதற்கு முன்பாக 2008-இல் மியூசிக் அகாதெமியில் கேன்டீன் போட்டோம். அத்துடன் ஒப்பிடும்போது, விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது'' என்றார்.

"இந்த ஆண்டு கேண்டீனில் என்ன ஸ்பெஷல்?' என்று கேட்டதற்கு சாஸ்தாலயா வெங்கடேசனின் மனைவி நிர்மலா, ""சிறுதானியங்களில் செய்த தோசை வெரைட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. றறகொத்து பரோட்டா பலருக்கும் பிடித்தது. மாலை வேளைகளில் தினமும் வெற்றிலை பஜ்ஜி போட்டோம். பலரும். "அட! வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறோம்! அதென்ன புதுசாய் வெற்றிலை பஜ்ஜி?' என்று கேட்டுவிட்டு விரும்பி சாப்பிட்டனர்'' என்றார்.

""ஸ்வீட், பச்சடியோடு தலைவாழையிலையில் பரிமாறப்படும் கல்யாணச் சாப்பாட்டை சாப்பிடுவதற்கு வருகிறவர்கள், கூட்டம் அதிகமாக இருப்பதால், காத்திருக்கும்படி ஆகிறது'' என்றனர் வெங்கடேசனும், விஜயகுமாரும்.

""மாறுதலுக்காக, சித்ரான்ன வகைகளுடன் ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியன கொண்ட மினி லஞ்ச் கொடுத்தோம். அதையும் மக்கள் விரும்பி சாப்பிட்டார்கள்''என்கிறார் நாரத கான சபாவில் கேன்டீன் நடத்திய சாஸ்தாலயா கேட்டரிங் ரமேஷ்.

ஸ்டிராபெரி கேசரி, இஞ்சி கேசரி, லிச்சிபாசந்தி, கோவா ஜாங்கிரி, அசோகா அல்வா, கொழுக்கட்டை வகைகள் போன்றவை இந்த சீசனின் விரும்பி சாப்பிடப்பட்ட இனிப்பு வகைகள்! தங்களுக்குக் கச்சேரி இல்லாத நாள்களில் கேன்டீனுக்கு குடும்பத்துடன் வந்து, வேண்டியதை ருசித்துச் சாப்பிட்ட கலைஞர்களில் சிக்கில் குரு சரண் உள்ளிட்ட சிலர் அடக்கம். கிரிக்கெட்டர் அஸ்வின் ரவிசந்திரன், இயக்குநர் வஸந்த் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கச்சேரிகளில் தென்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com