கடந்த காலத்தின் காட்சி!

நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக்கால வாழ்விடங்களை வெளிக்கொணர்வதற்கு உதவியாக இருந்துள்ளன.
கடந்த காலத்தின் காட்சி!


நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக்கால வாழ்விடங்களை வெளிக்கொணர்வதற்கு உதவியாக இருந்துள்ளன. இதில், தமிழ்நாட்டின் காவிரி கரையோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வரலாற்று ரீதியிலான உண்மைகளை ஆதாரங்களுடன் கணக்கிட வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. இவற்றுக்கெல்லாம் மகுடமாக அமைந்தது மதுரை வைகை ஆற்று நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு.

2014ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வு பிரிவு (பெங்களூரு) 293 கி.மீ. தொலைவு உள்ள வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு பகுதிகளின் மேற்பரப்பில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள், பாண்டியர் கால கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் உள்ள கீழடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 110 ஏக்கரில் தொல்லியல் சார்ந்த பொருள்கள் புதைந்து இருப்பது அப்போது தெரியவந்தது.

2017ஆம் ஆண்டு வரையில் அங்கு மூன்று கட்டங்களாக, மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன்பின்னர், தமிழக தொல்லியல் துறை மேலும் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவிரி, நொய்யல், தென்பெண்ணை, அமராவதி, பொருநை உள்ளிட்ட ஆற்றங்கரை பகுதிகளில் ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த சான்றாதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் தொடக்க வரலாற்று காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் தொடங்கியது என்றும், இங்கு இரண்டாவது நகரமயமாதல் ஏற்படவில்லை என்றும் கருதப்பட்டு வந்தது.

கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 4 ஆம் கட்ட அகழாய்வின்போது கிடைத்த தொல் பொருள்களை கரிமப் பகுப்பாய்வு செய்தபோது, கீழடி, பண்பாட்டின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும், கி.மு. 1, 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என அறிய முடிந்தது. எனவே தமிழ்ச் சமூகம் சுமார் 2, 600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பது இதன்மூலம் அறியலாம்.

இந்த நிலையில், கீழடியில் கொந்தகை வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில், உலக தரத்திலான நவீன வசதிகளுடன், செட்டிநாடு கலைநுட்பத்துடன் அழகுற அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. இதை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்துவைத்தார்.

வாழும் தலைமுறைக்குக் கடந்த காலத்தை காட்சிப்படுத்தும் கலைக்கூடமாக உள்ளது இந்த அருங்காட்சியகம். காலை 10 முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

அருங்காட்சியக ஆணையர் ஆ. சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமார், தெலங்கானா அரசு முதன்மைச் செயலர் ராமகிருஷ்ணராவ், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ந.ராமசாமி, மத்திய தொல்லியல் துறை திருச்சி பிரிவு இயக்குநர் அருண்ராஜ், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது குடும்பத்தினருடன்இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனனர்.

கோடை விடுமுறை தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்தில் 59 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 56 ஆயிரம் பேரும் பார்வையிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, தேசிய விடுமுறை நாள்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ. 15, வெளிநாட்டினர் எனில் சிறியவர்களுக்கு ரூ. 25, பெரியவர்களுக்கு ரூ. 50, காமிராவுக்கு ரூ. 30, விடியோ காமிராவுக்கு ரூ. 100 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அருங்காட்சியகத்தின் அமைப்பு: மனிதச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக, " வைகையும் கீழடியும்', "நிலமும்நீரும்', "கலம் செய் கோ', "ஆடையும் அணிகலனும்', " கடல் வழி வணிகம்', "வாழ்வும் வளமும்' எனும் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில்...: அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தவுடன் பழமையை விளக்கும் வகையில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள அகழாய்வுத் தளம் நம்மை வரவேற்கிறது. இத்தளத்தில் மதுரையின் தொன்மை வரலாறு, மதுரைக்கு வழங்கும் வேறு பெயர்கள், வைகையாற்றின் சிறப்புகள், சங்க இலக்கியப் பதிவுகள், ஆற்றங்கரை நாகரிகம் என அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொன்மை சார்ந்த வரலாற்றுப் பதிவுகளை இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் குறும்பட திரையரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தளத்தில்...: 2 -ஆவது தளமான "நிலமும், நீரும்' எனும் தளத்தில் ஐவகை நிலங்கள், அங்கு வாழும் மக்கள், தொழில், உணவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பழங்கால மக்கள் தங்கள் வேளாண் பணிக்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய காளைகள் பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. கீழடி அகழாய்வில் கிடைத்த காளையின் எலும்புகள் இத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, காளையின் உருவம், அதன் எலும்புகள் குறித்த ஆய்வு முடிவுகளும் இடம் பெற்றுள்ளன.

மூன்றாவது தளத்தில்..: ஆற்றங்கரையோரம் இனக்குழுக்களாகத் தங்கி வேளாண் பணிகளில் ஈடுபட்டபோது, உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருள்களை சமைத்து உண்பதற்கும், மீதமுள்ள பொருளைப் பாதுகாப்பதற்கும் பழங்கால மக்கள் மண்பாண்டப் பொருள்களை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். அதன்படி, கீழடியில் கிடைத்த மண்பாண்ட பொருள்களை 3 ஆவது தளமான "கலம் செய் கோ'தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நான்காவது தளத்தில்...: "ஆடையும், அணிகலனும்' எனும் 4 தளத்தில் (கீழ்தளம்) இரும்பு காலத்தின் வரலாறு, நெசவுத் தொழில் குறித்த பதிவுகள், அதற்கு பயன்படுத்தப்பட்ட தக்களிகள், கிண்ணங்கள், சுடுமண் அச்சுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேல்தளத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மணிகள், சூதுபவளம், படிகம், நீல நிறக்கண்ணாடி மணிகள், அகேட் மணிகள், மாவுக்கல் மணிகள், செவ்வந்திக்கல் மணிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாவது தளத்தில்...: கீழடியில் வசித்த மக்கள் நாட்டின் பிற பகுதிகள், வெளிநாடுகளுடன் கடல் கடந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன.

அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாக கிடைக்கும் அகேட், சூதுபவளம், ரோம நாட்டு பானைகளான ரெளலட்டட், அரிடைன் போன்ற மண்பாண்டங்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. அவற்றை 5 ஆவது தளமான "கடல் வழி வணிகம்' எனும் தளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த கட்டட மேல்தளத்தில் எடைக் கற்கள், வெள்ளி முத்திரை நாணயங்கள், சங்க கால பாண்டியர்களின் செப்புக் காசுகள், சுடுமண் முத்திரைகள், தங்க நாணயம், ரோமனிய செப்புக் காசுகள், சோழர் நாணயங்கள், ஆங்கிலேயே மற்றும் சுல்தான் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறாவது தளத்தில்...: தொழில், ஆடை, அணிகலன், வணிகம் ஆகியவற்றில் படிநிலை வளர்ச்சி பெற்ற பண்டைய கால மனிதச் சமூகத்தினர் விளையாட்டு, பொழுதுபோக்கு, எழுத்தறிவு ஆகியவற்றையும் பெற்றிருந்தனர். அதன்படி, கீழடியில் கிடைத்த கருப்பு, சிவப்பு நிற மண்பாண்டம், செவ்வண்ணப் பூச்சு மண்பாண்டங்கள், இரும்பு பொருள்கள், சுடுமண் விளக்குகள், தந்தத்திலான சீப்பு, மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் மணிகள், செப்பு பொருள்கள், தங்க அணிகலன்கள், தந்தம், சுடுமண்ணால் ஆன ஆட்டக் காய்கள், பகடைக் காய்கள், விளையாட்டுப் பொருள்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் சக்கரங்கள் ஆகியன "வாழ்வும்வளமும்' எனும் 6 ஆவது தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதே கட்டட மேல்தளத்தில் குறியீடுகள், தமிழி எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இறந்த நபர்களை பழமையான மரபின்படி, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் அடக்கம் செய்த முதுமக்கள் தாழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவைதவிர, தொல்லியல் சார்ந்த பகுதிகளை காணும் வகையில் முப்பரிமாணக் காட்சிக் கூடம், ஒவ்வொரு தளத்திலும் தலைப்புக்கு ஏற்றவாறு, அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருள்கள், அவற்றின் வரலாறு, அதனை மக்கள் பயன்படுத்திய முறை குறித்து விளக்கும் வகையில் திரையிட்டு காண்பிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com