வாழ வைக்கும் வாழை!

மண்ணில் விளையும் தாவரங்களில்,  அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகக் கருதப்படுவது வாழை மரங்கள்தான்.
வாழ வைக்கும் வாழை!

மண்ணில் விளையும் தாவரங்களில், அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகக் கருதப்படுவது வாழை மரங்கள்தான். பெரியோர்கள் பிறரை வாழ்த்தும்போது, "வாழையடி வாழையாக குடும்பம் தழைத்திட வேண்டும்' என்றே கூறுவர்.

அந்த வகையில், சிறப்புமிக்க வாழையில் இருந்து வீட்டு உபயோகப் பொருள்களைத் தயார் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார், நாமக்கல் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த முப்பத்து ஐந்து வயதான இளம்பெண் ப.சுகந்தி.

அவரிடம் பேசியபோது:

""நான் எம்.ஏ. பட்டமும், ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளேன். தனியார் வங்கியின் அறக்கட்டளை பிரிவில் மகளிர், தொழில் மேம்பாட்டு அலுவலராகப் பணியாற்றுகிறேன்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பும், அவர்களது முன்னேற்றத்துக்கான பாதையைஏற்படுத்தித் தர விரும்பினேன்.

அப்போதுதான் தேனி மாவட்டத்தில் வாழைக் கழிவுகளில் இருந்து பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மையம் இருப்பதை அறிந்து, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்றேன்.

ஓராண்டுக்கு முன், மோகனூர் அருகே காட்டூர் கிராமத்தில் வாழைநாரில் இருந்து பல்வேறு பொருள்கள் தயாரிப்பதற்கான இடத்தை தேர்வு செய்தேன். ரூ.10 லட்சத்தில் இயந்திரங்களை கொள்முதல் செய்தேன். 5 பேரைக் கொண்டு பணியைத் தொடங்கினேன். தற்போது 15 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

மோகனூர், பரமத்திவேலூர் வட்டங்களில் வாழைகள் பயிரிடும் விவசாயிகளைச் சந்தித்து வாழைத்தார்கள் வெட்டியவுடன் மீதமாகும் வாழைக்குலைகளை தரத்துக்கு ஏற்றாற்போல் ஒன்றுக்கு ரூ.50 வரையில் கொடுத்து கொள்முதல் செய்கிறேன். அவற்றை வெயிலில் நன்கு காயவைத்து, பட்டுநூல் போன்று இயந்திரங்கள் மூலமாக பிரித்தெடுப்போம்.

தொடர்ந்து, தலையணை, யோகா, டைனிங், வாசல் மேட் உள்பட பல்வேறு வீட்டை அலங்கரிக்கும் பொருள்களைத் தயாரிக்கிறோம். இவை தவிர, வாழைமட்டையில் இருந்து கைவினைப் பொருள்களையும் தயாரிக்கிறோம்.

குறிப்பாக, பூக்கூடைகள், வண்ண மாலைகள், தோல் பைகள், கைப்பைகள், படுக்கை விரிப்பு பாய்கள் போன்றவற்றையும் தயார் செய்கிறோம்.

விழாக்களில் பரிசளிப்புக்காகவும் பலர் வாங்கி செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சித்தோட்டில் உள்ள விற்பனை மையத்துக்கும் வழங்குகிறோம், இதர கண்காட்சிகளிலும் மக்கள் பார்வைக்கு, விற்பனைக்கு வைக்கிறோம். மாதம் ரூ.1 லட்சம் செலவிட்டால், ரூ.1.50 லட்சம் வரையில் வருவாய் ஈட்டலாம். கிடைக்கும் ரூ.50 ஆயிரத்தில், வாடகை, வேலையாள்கள் கூலி, இதர செலவினம் போக ரூ.20 ஆயிரம் வரையில் கிடைக்கும்.

பொருள்கள் தயாரிப்புக்குப் பிறகு வீணாகும் வாழைக் கழிவுகளை கூட உரமாக மாற்றி விற்பனை செய்கிறோம். அடுத்தகட்ட முயற்சியாக, வாழையில் இருந்து பெண்களுக்கான நாப்கின், ஜவுளி வகைகள், ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகள் போன்றவற்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

மன, உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வாறு இயற்கை உணவுகள் நன்மை தருகிறதோ, புற ஆரோக்கியத்திற்கு இயற்கை சார்ந்த சாதனங்களும், பொருள்களும் நன்மை பயக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com