தேடிச் சென்று உணவு..!

சாலையோரங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று  உணவு வழங்குகின்றனர் ஆம்பூர் உணவு வங்கி அறக்கட்டளையினர்.
தேடிச் சென்று உணவு..!

சாலையோரங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று உணவு வழங்குகின்றனர் ஆம்பூர் உணவு வங்கி அறக்கட்டளையினர்.

ஆதரவற்றவர்களுக்கு தினமும் தேவையான உணவை வழங்க முடிவு செய்து, "ஆம்பூர் உணவு வங்கி அறக்கட்டளை'யை 2018 ஆம் ஆண்டில் பாபு தலைமையிலான குழுவினர் தொடங்கினர். அன்று முதல் இன்று வரையில், ஆம்பூர் நகரம், சுற்றுப்புறக் கிராமங்களில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச் சென்று தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

தொடக்கக் காலத்தில் தினமும் சுமார் 50 பேருக்கு உணவு வழங்கினர். தொடர்முயற்சியால், தற்போது தினமும் 100 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இதோடு, இரவு நேரங்களில் படுப்பதற்கு பாய், குளிர் காலத்துக்குத் தேவையான போர்வைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், வயதானவர்களுக்கு ஊன்றுகோல், புத்தாடைகள் ஆகியவற்றையும் வழங்கி வருகின்றனர்.

நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளையும் சேகரித்து ஆதரவற்றோருக்கும், தேவையானவர்களுக்கும் உணவு வழங்கும் சேவையையும் செய்கின்றனர்.
இதற்காக, 2018ஆம் ஆண்டில் ஆம்பூர், ஒசூர் ஜேசிஐ சங்கங்கள் சார்பில் சாதனையாளர் விருது, 2019ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற விழாவில் அப்துல் கலாம் விருது, மசிகம் கிராம மக்கள்வழங்கிய சாதனையாளர் விருது, 2023ஆம் ஆண்டில் துர்வா அறக்கட்டளை வழங்கிய சிறந்த அன்னதான அறக்கட்டளைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாபு கூறியதாவது:

""எங்களுடைய அன்றாட பணிகளுக்கு இடையே இந்தச் சேவையை செய்து வருகிறோம். திருமண நாள், நினைவு நாள், பிறந்த நாள் போன்ற விழாக்கள் கொண்டாடுவோர், எங்களுடைய உணவு வங்கிக்கு வழங்கும் நன்கொடை மூலம் உணவு தயாரித்து கொண்டு சென்று சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறோம். நன்கொடையாளர் வாயிலாகவும், இயன்ற உதவியை செய்து வருகிறோம்.

கரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியதை மிகவும் பெருமையாக கருதுகிறோம். இதற்காக, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு சிறப்பு அனுமதியை வழங்கி ஆதரவு அளித்தனர்.

மின்னூர் அரசு துணை சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்காக, குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடையாக வழங்கியுள்ளோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com