பளிச்சிடும் பழைய கிணறுகள்..!

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு மிகவும் அதிகம்.
பளிச்சிடும் பழைய கிணறுகள்..!

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு மிகவும் அதிகம். அந்தப் பகுதி மக்களின் தினசரி சந்திப்பே கிணற்றடியில்தான். ஆழ்துளைக் கிணறுகளின் அபரிமிதப் பெருக்கத்தால், கிணறுகள் இன்று நீர்வற்றி, பயன்பாடின்றி உள்ளன. இந்தக் கிணறுகளை நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில்  மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாகவும், சிறு பூங்காக்களாகவும்  உருமாற்றம் பெறுகின்றன. 

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு'' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது,  "நீர் இல்லாமல் யாருக்கும் உலக வாழ்க்கை அமையாது. அதுபோல் மழை இல்லாவிட்டால் ஒழுக்கமும் நிலைபெறாது' என்பதாகும்.

ஒவ்வொரு உயிர்க்கும் நீர் என்பது அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக உள்ளது.  பல ஆண்டுகளுக்கு முன்னர்,  முன்னோர்கள் கிராமங்கள்தோறும் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் கிணறுகளைத் தோண்டினர். அந்தக் கிணறுகள் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தன.

அப்படிப்பட்ட கிணறுகள், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், குடிநீர் கிடைப்பது அரிதானது. இந்தச் சூழலில் ஆழ்துளைக் கிணறுகளின் பயன்பாடு வீடுகள்தோறும் அதிகரித்ததால், பழங்கால குடிநீர் கிணறுகள் பாழடைந்தன. இவற்றை பராமரிக்கவோ, சீரமைக்கவோ யாரும் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளவில்லை. 

இதன்காரணமாக,  பாழடைந்த கிணறுகளில் மரம், செடி, கொடிகள் முளைத்ததுடன், மண்மேடாக மாறின. திறந்த நிலையில் பயன்பாடில்லாத கிணறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.  ஊருக்கே குடிநீர் வழங்கிய அந்தக் கிணறுகள், தங்கள் அடையாளம் இழந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணறுகளுக்கு புத்துயிர் அளிக்க  மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டியது. அதன்படி மாவட்டத்தில் கைவிடப்பட்ட 163 திறந்த நிலைக் கிணறுகளை கண்டறிந்து, அவற்றை கலைநயத்துடன் புதுப்பிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. 

ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் திறந்தநிலை கிணறுகளைச் சீரமைக்க முடிவெடுத்தது. அதில், ஒவ்வொரு கிணற்றையும் தூர்வாருவது, அதன் சுற்றுப்புறத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டி வைத்து, அந்தப் பகுதிக்கு வரக் கூடிய மழைநீரைச் சுத்திகரிப்பு செய்து, கிணற்றின் உட்பகுதிக்குள் குழாய் வழியாக செல்லும் வகையில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக வடிவமைக்கப்பட்டது.  இந்தக் கிணறுகளில் மேல்புறம் மூடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து முதல்கட்டமாக மறு சீரமைப்பு செய்யப்பட்ட 123 கிணறுகளை, குழந்தைகள், பொது மக்களை கவரும் வகையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தர்ப்பூசணி, பழக்கூடை, ரயில் பெட்டி உட்பட பல்வேறு வடிவங்களில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதுறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:

""விருதுநகரின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. மேகநாத ரெட்டி யின் அறிறுத்தலின்பேரில்,  பயன்பாடற்ற திறந்தநிலை கிணறுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. பின்னர், அவற்றை கலைநயத்துடன் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது 123 திறந்தநிலைக் கிணறுகள் புனரமைக்கப்பட்டு, பல்வேறு கலைநயத்துடன் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தற்போதைய மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலனும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஊக்கம் அளித்து வருகிறார். கைவிடப்பட்ட பழங்கால கிணறுகளை புனரமைத்து, மழை நீர் சேகரிப்பு தொட் டியாக மாற்றுவதால், நிலத்தடி நீர் மட்டும் உயரும். குடிநீரின் உவர்ப்புத் தன்மையும் மாற வாய்ப்புள்ளது. எனவே மீதமுள்ள 40 கிணறுகளையும் சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்''  என்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com