மயக்கும் மாங்கனித்  திருவிழா!

ஒரு கனியை கருப்பொருளாக வைத்து, அதனை ஆன்மிகத்துடன் இணைந்து விழா நடத்தப்படுகிறது என்றால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில்தான்! ஆம்!  மாங்கனித் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
மயக்கும் மாங்கனித்  திருவிழா!

ஒரு கனியை கருப்பொருளாக வைத்து, அதனை ஆன்மிகத்துடன் இணைந்து விழா நடத்தப்படுகிறது என்றால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில்தான்! ஆம்!  மாங்கனித் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

தாய்லாந்தில் பைனாப்பிள் திருவிழா, ஜெர்மனியில் பம்ப்கின் திருவிழா, கனடாவில் கிரான்பெரி திருவிழா, ஆம்ஸ்டெர்டாமில் ஆரஞ்சுத் திருவிழா, இங்கிலாந்தில் ஸ்டிராபெரி திருவிழா, பிரான்சிஸ் எலுமிச்சை.. என்று பல கனிகளை மையமாக வைத்து திருவிழாக்களை நடத்துகின்றனர்.  மக்களின் குதூகலத்துக்கும், பழங்களின் வியாபார அபிவிருத்தி நோக்கத்துக்காகவுமே இவை நடத்தப்படுகின்றன.  ஆனால் மாங்கனியும் ஆன்மிகமும் கலந்ததாக திருவிழா என்பது காரைக்காலில் மட்டுமே!

பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயேர்கள் என காலனி ஆதிக்கத்தினரின் வசம் காரைக்கால் நகரமானது நீண்ட காலம்  இருந்தாலும், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பல சிவ  தலங்கள் இன்றும் புகழுடன் தழைத்து நிற்கின்றன. 

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் 63 நாயன்மார்களில் "புனிதவதியார்'  என்னும் காரைக்கால் அம்மையார் தொடர்புடன் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.  இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் விதமாக,  மாங்கனிகள் வீசும் நிகழ்வு கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படுகிறது.

விழா ஏன்? புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையார் சிவ பக்தர். கணவர் (பரமதத்தர்)  தமது வீட்டுக்கு அனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை வீட்டுக்குவந்த சிவனடியாருக்கு உணவில் வைத்துவிட்டு, கணவர் வந்து மாங்கனியை கோரியபோது,  சிவனை நோக்கி வேண்டியதன் விளைவாக கிடைத்த கனியால், தனது மனைவி இறைவனுக்கு ஒப்பானவர் என கருதி கணவர் குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.

மறுமணம் புரிந்துகொண்டு குழந்தையுடன் இருந்த பரமதத்தர் இருக்குமிடத்தை அறிந்து அம்மையார் நேரில் பார்க்கச் சென்றபோது, தமது 2ஆவது மனைவி, குழந்தையுடன்  புனிதவதியார் பாதம் பணிந்ததால், கணவரே தம் பாதம் வீழ்ந்ததை ஏற்க முடியாது, பேய் உருவத்தை இறைவனிடம் அம்மையார் வேண்டிப் பெற்று,  கைலாயத்துக்குச் செல்ல முடிவெடுத்து, இறைவன் வீற்றிருக்கும் இடத்தை காலால் நடத்தலாகாது என தலைக்கீழாகச் சென்றடைந்தார். தாயும், தந்தையுமில்லா சிவன், "அம்மையே வருக!' என்றாராம். இவ்வாறு பல பெருமைகள் பெற்ற அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியே இத்திருவிழா காரைக்காலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.

விழா சிறப்பு: காரைக்கால் பாரதியார் சாலையில்  நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய  கீற்றுக் கொட்டகையில்  அம்மையார் வழிபாட்டுத் தலம் இருந்துவந்துள்ளது. சிறிய அளவிலேயே உற்சவம் நடத்தப்பட்டுவந்துள்ளது. மலைப்பெருமாள் பிள்ளை என்பவர் திருப்பணி செய்யத் தேவையான ரூ.1 லட்சத்தை அளித்ததன் மூலம் கோயில் கட்டப்பட்டு 1929ஆம் ஆண்டு ஜூன் 17இல் குடமுழுக்கு நடைபெற்றது.  அப்போது முதல் அம்மையாரின்  வாழ்க்கை வரலாற்றை விளக்கி  ஜூன் 20, 21  ஆகிய தேதிகளில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.

ஆட்சியாளர்களின் ஆதரவு அதிக அளவில் இல்லாத காலத்திலேயே மாங்கனித் திருவிழா எளிய முறையில் நடைபெறத் தொடங்கியுள்ளது. காலப்போக்கில் விழா நாள்கள் அதிகரிக்கப்பட்டு,  களைகட்டும் திருவிழாவாக மாறியுள்ளது.

இத்திருவிழா கடந்த ஜூன் 30  தொடங்கி ஜூலை 3ஆம் தேதியுடன் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.

அம்மையார் இல்லத்துக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் செல்வதை விளக்கும் வகையில் பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர்  புறப்படுவதும், சப்பரம் நகர்ந்தவுடன் பக்தர்களை நோக்கி கட்டடங்களில்  இருந்தவாறு  மாங்கனிகள் வீசுவதும் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

திருமணமாக வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பிரார்த்தனை செய்தோர் பிடித்துச் சென்று சாப்பிடுவதும், பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் அவர்களே வந்து  மாங்கனிகள் வீசுவதுமாக இத்திருவிழா விரிவடைந்துவிட்டது. சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் காணும் நோக்கிலும் பக்தர்கள் மிகுதியாக வரத் தொடங்கிவிட்டனர்.

மாங்கனி வரத்து :  மாங்கனி வீசுவதற்காகவும், பிச்சாண்டவருக்கு படையலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதால் காரைக்கால் திருவிழாவில் ஏறக்குறைய 10 டன் மாங்கனிகள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அளவு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஒட்டுப்பழம் படையலுக்கும், வீசுவதற்கு நாட்டுப்பழம் என்கிற நீலம் வகையும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ருமானி, கீரி உள்ளிட்டவையும் வீட்டுப் படையலுக்கு மக்கள் வாங்கிச் செல்வதால் பல்வேறு வகை கனிகளை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைத்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com