அத்தியாயத்தை முடித்த தியாகு நூலகம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் 63 ஆண்டுகளாக  மக்களின் அறிவுத் தேடலுக்கு உதவியாக இருந்த தனியார் வாடகை நூலகமான "தியாகு நூலகம்'  ஜூன் 30 ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தியது.
அத்தியாயத்தை முடித்த தியாகு நூலகம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் 63 ஆண்டுகளாக  மக்களின் அறிவுத் தேடலுக்கு உதவியாக இருந்த தனியார் வாடகை நூலகமான "தியாகு நூலகம்'  ஜூன் 30 ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தியது.

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த பெருமாள்சாமி முதலியார் என்பவரால், 1960 ஆம் ஆண்டில் எக்ஸலென்ட் புக் சென்டராக தொடங்கப்பட்டது.  வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்த  அவர், கோவையைச் சேர்ந்த புத்தக ஆர்வலர்களுக்காக மும்பையில் இருந்து கூட நூல்களை வரவழைத்து விற்பனை செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் தியாகராஜன் வாடகை நூலகமாக விரிவாக்கி, அறிவுச் சேவையாற்றி வந்தார். 

தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி புத்தகங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டதால் இந்த நூலகத்தின் பயன்பாடு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதுகுறித்து தியாகராஜன் கூறியதாவது:

""எனது தந்தை பெருமாள்சாமி பெட்டிக் கடையில் நூல் விற்பனையைத் தொடங்கினார்.  அவருக்கு பிறகு  பட்டப்படிப்பை முடித்த கையோடு, நான்1980இல் இந்த நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பேற்றேன். 

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, எண்ணற்ற தலைப்புகளிலான தமிழ், ஆங்கில நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கி வைத்திருந்தேன். இங்கு நூல் வாசிப்பதற்காக வரிசையில் நின்ற காலமும் உண்டு.  மதியம் 2 மணி நேர உணவு இடைவேளையின்போது நூலகம் அடைக்கப்பட்டிருக்கும். மீண்டும் வந்து திறக்கும்போது, கொஞ்சம் முன்கூட்டியே வந்திருக்கலாமே, நாங்கள் வெகுநேரமாக காத்திருக்கிறோம் என்றெல்லாம் வாசகர்கள் வேண்டுகோள் வைப்பார்கள்.

இந்த நூலகத்தின் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம் மீண்டும் அதிலேயே முதலீடு செய்து வைத்தேன். கடைசியாக சுமார் 80 ஆயிரம் நூல்கள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாகவே நூல் வாசிப்பு ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. கரோனா தொற்று பல தொழில்களுக்கு மூடுவிழாவை நடத்தியதைப் போலவோ தியாகு நூலகத்துக்கும் முடிவுரை எழுதிற்று.

கரோனாவுக்கு முன்பு தினசரி 50 பேராக இருந்த வாசகர்கள் எண்ணிக்கை, அண்மைக்காலத்தில் மேலும் அருகிப்போனது.  இளம்தலைமுறை வாசகர்கள் இல்லாமல், ஒன்றிரண்டு பழைய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த இந்த நூலகத்துக்கு கடந்த சில மாதங்களாக எனது சொந்த பணத்தில் இருந்துதான் வாடகை செலுத்த நேரிட்டது. "ஒருகட்டத்தில் என்னிடம் இருக்கும் 80 ஆயிரம் நூல்களையும் ஒட்டுமொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள்'  என்று அரசிடம் கோரிக்கை வைத்தேன். அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் சென்றும், எதுவும் நடக்கவில்லை.

இனியும் இதை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்த நான், நூலகம் ஜூலை 1 ஆம் தேதி மூடப்படும் என அறிவித்தேன். கையிருப்பில் இருக்கும் நூல்களை பாதி விலைக்கு விற்பனை செய்ய முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டேன்.  மே 1 முதல் நூல்கள் விற்பனை தொடங்கியது. வாசிப்புக்காக வரிசையில் நின்ற மக்கள், தற்போது நூல்களை வாங்கிச் செல்ல வரிசையில் காத்திருந்தனர்.

ஜூன் 30 ஆம் தேதி வரை சுமார் 65 ஆயிரம் நூல்கள் விற்பனையாகிவிட்டன. நீண்டநாள் வாசகர்களுக்கு பல நூல்களை இலவசமாகவே கொடுத்துவிட்டேன். இன்னும் 15 ஆயிரம் நூல்கள் எஞ்சியுள்ளன. நூல்கள் வைத்திருந்த அலமாரியை கழற்றுவதற்கு சில நாள்களாகும், அதுவரையிலும் விற்பனை செய்வேன்.

ஒரு கட்டத்தில் 5 ஆயிரம் உறுப்பினர்களுடன் இருந்த இந்த நூலகத்தில், சனிக்கிழமைதோறும் வாசகர் சந்திப்பு நடந்துள்ளது.  அந்தச் சந்திப்புகளில் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  நூல்களுடனேயே 43 ஆண்டுகளாக வாழ்ந்துவிட்ட  நான்,  இனி நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்க  உள்ளேன். அதன்பிறகு, அடுத்த தலைமுறைக்கு வாசிப்பை எடுத்துச் செல்ல உதவியாக, குழந்தைகளுக்கான நூல்களைப் பதிப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளேன்'' என்றார்.

படங்கள்: அஜய் ஜோசப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com