கதைகளால் விதைப்போம் எதிர்காலத்தை..!

குழந்தைகளுக்கு விருப்பமான வகையிலும், வித்தியாசமான முறையிலும் கதைகளைச் சொல்லி நீதியையும், நெறியையும் வளர்த்தெடுத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மோகன சுந்தரம்.
கதைகளால் விதைப்போம் எதிர்காலத்தை..!


குழந்தைகளுக்கு விருப்பமான வகையிலும், வித்தியாசமான முறையிலும் கதைகளைச் சொல்லி நீதியையும், நெறியையும் வளர்த்தெடுத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மோகன சுந்தரம்.  அவர் "ப்யூப்பா லைஃப்' என்ற அமைப்பைத் தொடங்கி,  அதன் வாயிலாக 8 விதமான முறைகளில் கதைகளைச் சொல்லி வருகிறார்.

அவற்றில் பெரும்பாலானவை திருக்குறள் போதிக்கும் நெறிகளை அடிப்படையாகக் கொண்டவை.  அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்குத் தனித்துவமாஸ் முறையில் கதை சொல்லியிருக்கும் மோகனசுந்தரம், தனது பயணம் குறித்து கூறியதாவது:
""2012-இல் பி.டெக். தகவல் தொழில்நுட்பப் படிப்பை நிறைவு செய்தேன். துறைசார்ந்த பணிக்குச் செல்ல விரும்பவில்லை. கதைகள்தான் நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன. ஏதோ ஒரு கதையை, ஏதோ ஒரு வகையில் நாம் தினம்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்.

எனவே, கதைகளைச் சொல்லி குழந்தைகளின் மனதில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து,  அதற்கான பயணத்தைத் தொடங்கினேன். எனது குழுவினரும் அதற்கு பக்கபலமாக நின்றனர். வழக்கமாக உள்ள வாய் வழி கதை கூறும் முறைக்கு மாற்றாக புதிய கோணத்தில் அதனை செயல்படுத்த விரும்பினோம்.
அதன்படி,  நவீன அரங்க (மாடர்ன் தியேட்டர் பிளே) முறை, விகடக்காரன் (க்ளவுன்) முறை, தெருக் கூத்து (ஸ்ட்ரீட் பிளே), மாயக்குரல் பொம்மை (வென்ட்ரிலாகுசம்), மணல் ஓவியம் (ஸேண்ட் ஆர்ட்), இசை வழி கதை சொல்லல், இடஞ்சுட்டி கதை சொல்லல், கைவினை முறை என 8 வகைகளில் கதைகளை சுவாரஸ்யமாகக் கூறி 
வருகிறோம்.
எனது தோழி போஷி காவியாவுடன் இணைந்து "ப்யூப்பா லைஃ"ப்' என்ற அமைப்பைத் தொடங்கி கட்டணமின்றி அரசுப் பள்ளிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதுவரை ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சில நிகழ்ச்சிகள் சிறப்புக் குழந்தைகளுக்காகவே நடத்தப்பட்டன. ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கும், சில மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் வேறு விதமாக கதைகளைச் சொல்லி கவனத்தை ஈர்க்க வேண்டும்.
ஒருமுறை அவ்வாறு கதைகளைக் கூறிக்கொண்டே குழந்தைகளுடன் உரையாடியபோது பிறவியிலிருந்து சரிவர பேசாத ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் ஆர்வமாக பேச முற்பட்டனர். தங்களது மொழிகளில் கருத்துகளை கூற விழைந்தனர். அவர்களது பெற்றோருக்கு மட்டுமல்லாது எங்களுக்குமே அந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு நடுவிலும், தொடர்ந்து இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தது அந்தத் தருணத்தில்தான்!
அரசு,  தனியார் அமைப்புகள் எங்களை ஊக்குவித்தால் அனைத்து குழந்தைகளுக்கும் இத்தகைய கதை சொல்லல் நிகழ்ச்சிகளை கொண்டுசேர்க்க முடியும். 
குறிப்பாக பள்ளிகளில் கதை வகுப்புகளின்போது நாங்கள் கையாளும் நவீன முறைகளைப் பின்பற்றினால் மாணவர்களின் நெஞ்சத்தில் நெறிகளை எளிதில் வேரூன்ற வைக்கலாம்.
தற்போதைய நவநாகரீக உலகில் கைப்பேசிக்குள்ளும், தொலைக்காட்சிக்குள்ளும் தொலைந்துவிட்ட  சின்னஞ்சிறிய மனங்களை புற உலகுக்குள் பயணிக்க வைக்க வேண்டும்.
வலைதளக் குழிக்குள் வசமாக புதைந்திருக்கும் குழந்தைகளைத் தூக்கிவிட ஓரிரு கரங்கள் மட்டும் போதாது. ஒட்டுமொத்த கரங்களும் ஒரு சேர இணைய வேண்டும். விரைவில் அந்த கனவு வசப்படும்''  என நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறார் மோகனசுந்தரம். 
சந்திராயனையும், மங்கள்யானையும் விண்ணுக்கு அனுப்புவது விஞ்ஞானிகளுக்கு வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால், குழந்தைகளின் உலகத்தில் அப்படியில்லை. நினைத்தவுடனேயே நிலவில் மண் எடுத்து அவர்களால் வீடு கட்ட முடியும். பால்வெளிக்குள்ளேயே படுத்து தூங்க முடியும். பசி கொண்ட வேளையில் மேகங்களைக் கூட மென்று தின்ன முடியும். அறிவியல் கூறுகளை சுக்கு நூறாக உடைத்தெறியும் குழந்தைளின் உலகம் முழுக்க, முழுக்க கதைகளாலும், கற்பனைகளாலும் நெய்யப்பட்டது. 
குழந்தைகளுக்கு எந்த கதையைச் சொன்னாலும், அது அவர்களது மனதில் விதையாகவே விழுகிறது. ஆனால், அது விருட்சமாக எழுகிறதா? என்பதில்தான் கதை சொல்லியவர்களின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.   அந்த வகையில், மோகனசுந்தரத்தின் கதைகளும் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com