ஆட்டோ வாத்தியார்..!

அடர்ந்த வனப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம்,  வாகனங்களில் சென்றாலே அடிவயிறு கலங்கும் வகையில் வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதை, மலைவாழ் மக்களே நிரம்பிய கிராமம்.
ஆட்டோ வாத்தியார்..!

அடர்ந்த வனப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம்,  வாகனங்களில் சென்றாலே அடிவயிறு கலங்கும் வகையில் வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதை, மலைவாழ் மக்களே நிரம்பிய கிராமம், ஆந்திர எல்லையையொட்டிய  பகுதி வேறு.. என்று பல்வேறு சிரமங்கள் இருக்கும் இடத்தில், பணிக்குச் செல்லவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயங்குவர். அங்கு துணிச்சலோடு பணிக்குச் சென்றுள்ள ஆசிரியர் மு.தினகரன்,  மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து கற்பிக்க வைத்து வீட்டுக்குக் கொண்டு விடும் ஆட்டோ டிரைவராகவும் இருக்கிறார். 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரில் இருந்து15 கி.மீ. தொலைவில் உள்ள பாஸ்மார்பெண்டா மலைக் கிராமத்தில் 1962' ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் பயில்கின்றனர். தலைமை  ஆசிரியை திருமலைச்செல்வி உள்பட 4  ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.இங்கு பணியாற்றும் கொத்தப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ,., பி.எட்  பட்டதாரி ஆசிரியர் தினகரன் என்பவர்தான் "டூ இன் ஒன்'  பணியாளர்.

அவரிடம் பேசியபோது:

"கொல்லைமேடு, தாம ஏரி பகுதிகள், பாஸ்மார்பெண்டா கிராமத்திலிருந்து 4 கி.மீ.  தூரத்தில் அமைந்துள்ளன.  அங்கிருந்து 40 மாணவ, மாணவிகள்   விவசாய நிலங்கள், வனப்பகுதி, கரடு முரடான மண் பாதை வழியாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு சரியாக வரமாட்டார்கள். 

காரணம் கேட்டபோது, விஷ ஜந்துக்களான பூச்சிகள் கடித்து விட்டதால் பள்ளிக்கு வர முடியவில்லை என காயமடைந்த கால்களை மாணவர்கள் காண்பிப்பார்கள்.   மன வேதனைக்குள்ளானேன்.

எனது பெற்றோர் விவசாயத் தொழில் செய்து என்னை படிக்க வைத்தனர். அவர்கள் இருவரும் மறைந்து விட்டனர். அவர்கள் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்ததால் நான் ஆசிரியரானேன். 

மலைவாழ் மாணவர்கள் தொடர்ந்து  பயிலும் வகையில் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி, எனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி,  எரிபொருள் நிரப்பி மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறேன்.  

பள்ளி முடிந்தவுடன் அவர்களைத் திரும்பவும் வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன்.  இந்தச் செயல் எனக்கு மனரீதியாக திருப்தியாக உள்ளது.

இதற்காக,   நாள்தோறும் காலை 8  மணிக்கு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் 15  கி.மீ தூரம் பயணித்து பள்ளிக்கு வந்து, ஆட்டோவை ஓட்டிச் சென்று, கொல்லைமேடு, தாம ஏரி கிராமங்களுக்கு 3  முறை சென்று 40' மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகிறேன்.  வழியில் உயர்நிலைப் பள்ளிக்கு வரும்  மாணவர்களையும் அவர் ஆட்டோவில் அழைத்து வருகிறேன். மாலையில் அவர்களைத் திரும்ப அனுப்பிய பின்னரே வீடு திரும்புகிறேன்.

ஆட்டோவின் முகப்பில், " நம் பள்ளி நம் பெருமை, அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாஸ் மார்பெண்டா'  என குறிப்பிட்டு, பள்ளிக்கே அளித்துள்ளேன்.  

எனது சேவையை அறிந்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு,  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பாராட்டியது பெருமையாக இருக்கிறது''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com