ஸ்மார்ட் ஊராட்சி..!

"ஸ்மார்ட்  ஊராட்சி'  என்றும் சொல்லும் அளவுக்குத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது குழிபிறை ஊராட்சி. 
ஸ்மார்ட் ஊராட்சி..!

"ஸ்மார்ட் ஊராட்சி' என்றும் சொல்லும் அளவுக்குத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது குழிபிறை ஊராட்சி.

குளங்கள், கண்மாய்கள், குடிநீர்த் தொட்டிகளைச் சீரமைத்தது, பொதுக்கழிவறைகள் பராமரித்தது, பாதுகாப்புக்கென சி.சி. டி.வி. காமிராக்கள் பொருத்தியது, சாலைகள், பாலங்கள் அமைத்தது என தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஊராட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாகக் காணப்படுகிறது குழிபிறை ஊராட்சி.

திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியானது புதுக்கோட்டை நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். அழகப்பனிடம் பேசியபோது:

""குழிபிறை, குழிபிறைப்பட்டி ஆகிய இரு கிராமங்களில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1,754 'ஆக உள்ளது. மக்கள் தொகை 5,900 பேர். இவர்களில் 2,686 பேர் வாக்காளர்கள்.

2016'ஆம் ஆண்டில் "பசுமை குழிபிறை அறக்கட்டளை‘ என்ற அமைப்பைத் தோற்றுவித்தோம். தொழில், பணிநிமித்தம் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தங்கிவிட்டோரையும் இந்தக் குழுவில் இணைந்தோம். மொத்தம் ரூ. 1.50 கோடி வசூலிக்கப்பட்டது.

இந்த நிதியிலிருந்து 2019'இல் பாப்பான்குளமும், 2022'இல் பொற்றாமரைக் குளமும் சீரமைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்துக்கான மக்கள் பங்களிப்புத் தொகையை இதிலிருந்து அரசுக்கு கொடுக்கிறோம். பாதுகாப்புக்கென 56 சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.

4 பொதுக் கழிவறைகளும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. 7 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தேசியக் கொடி வண்ணம் தீட்டப்பட்டு, சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 2.60 லட்சம் லிட்டர் குடிநீர் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இவற்றுக்காக ஊராட்சியில் அனுமதிக்கப்பட்ட 3 தூய்மைக் காவலர்கள், 4 துப்புரவுப் பணியாளர்களுடன் கூடுதலாகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ. 30 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலைகளும், ரூ. 28 லட்சத்தில் மண் சாலைகளும், ரூ. 14 லட்சத்தில் தார்ச்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

1970-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வள்ளுவர் படிப்பகம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. சாலையின் இரு மருங்கிலும் மழைநீர் வடிகால் கட்டப்பட்டிருக்கிறது.

ஊராட்சியின் மையப் பகுதியிலுள்ள பல்லவன் குளம் ரூ. 7 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலுக்கு அருகேயுள்ள பொற்றாமரைக் குளம் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, 13 கண்மாய்களும், 5 குளங்களும் தூர்வாரி, வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மழை பெய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் தண்ணீர் முழுவதும் அருகேயுள்ள குளத்துக்குச் சென்றுவிடும். இதற்காக சாலைகளின் குறுக்கேயுள்ள 22 சிறு பாலங்கள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளன.

இவற்றைக் கடந்து, ஊராட்சியில் ஆண்டு வரி வருவாய் ரூ. 13 லட்சமாக உயர்த்தினோம். பொதுவாக, வரி வருவாயை உயர்த்த மக்கள் விரும்பமாட்டார்கள். ஆனாலும், மக்களிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். வரி வருவாய் எந்தளவுக்கு உயருகிறதோ அதன் மூன்று மடங்கில் மத்திய அரசின் நிதி கிடைக்கும். அதிலிருந்து ஊராட்சியின் மூலம் மக்களுக்கு நிறைய செய்யலாம். இதுதான் எங்கள் வளர்ச்சியின் தந்திரம்!

ஊராட்சியில் உள்ள மூன்று பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான். எனவே பள்ளிகளுக்கான செலவு நம்முடையதல்ல.

குழிபிறைக்கென தனி துணை மின் நிலையத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்திருக்கிறோம். இவையிரண்டும் அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டமும் இந்த ஊராட்சியில் சிறப்பாகச் செயல்படுகிறது. இதன்வாயிலாக, வருவாயும் ஈட்டப்படுவது சிறப்பு.

நம் ஊரை வளர்ந்த ஊராக மாற்ற வேண்டுமானால் அதற்கென கூடுதல் உழைப்பு முக்கியம். எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் மக்கள் பணி செய்ய வேண்டும். அதைச் செய்தால் பிற ஊராட்சிகளுக்கு நாம் முன்னோடியாக, முன்மாதிரியாக இருக்கலாம்'' என்கிறார் அழகப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com