சுமை.. தடை.. உடை..!

டென்னிஸ் ஆட்டத்தில்  சாதனை  நாயகியாக  மின்னிய  சானியா மிர்ஸா தொழில் ரீதியான சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு  பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுமை.. தடை.. உடை..!

டென்னிஸ் ஆட்டத்தில் சாதனை நாயகியாக மின்னிய சானியா மிர்ஸா தொழில் ரீதியான சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேச டென்னிஸ் அரங்கில் "கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தை வென்ற முதல் பெண் வீராங்கனை.

உலக அரங்கில் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக பவனி வந்த சானியா மிர்ஸா, துபையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையருக்கான போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீச்சுடன் ஜோடி சேர்ந்து ஆடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியைசந்தித்தார்.

சானியா திடீரென்று டென்னிஸ் ஆட்டத்திலிருந்து விடைபெறவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னாவுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற சானியா துபை போட்டியில் கலந்து கொண்டு ஆடுவதுதான் எனது இறுதி நிறைவு ஆட்டம்' என்று அறிவித்திருந்தார். இதேபோலவே கண்ணீருடன் பிரியாவிடை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு அக்.30-இல் மகன் இழான் மிர்ஸா மாலிக்கை வயிற்றில் சுமந்தபோதும், பிரசவத்துக்கு பின்னும் சில மாதங்கள் டென்னிஸிலிருந்து சானியா விலகியிருந்தார்.

பெண்களுக்கான டென்னிஸ் அரங்கில் இந்திய பெண்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கும் சானியா தனது 17-ஆம் வயதில் 2003-இல் தொழில்முறை டென்னிஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்.

இருபது ஆண்டுகால டென்னிஸில் களமாடிய சானியா, மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா மூன்று என ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

டபிள்யூ.டி.ஓ. பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்ணும் சானியாதான். 43 முறை இரட்டை வகை இரட்டையர் ஆட்டத்தில் பட்டத்தை வென்றுள்ளார். இந்தச் சாதனை டென்னிஸ் ஆடும் இந்திய வீராங்கனைகளுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

டென்னிஸ் போட்டிக்கு "முற்றும்' சொல்லி முடித்தாலும் சானியா இன்னொரு அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். தனது முப்பத்து ஆறாவது வயதில் கிரிக்கெட் அரங்கில் நுழைகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ்ஸூக்கு வழிகாட்டியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சொந்தமாக டென்னிஸ் பயிற்சி நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

""நிச்சயமாக டென்னிஸிலிருந்து விடை பெறுவது என்னால் தாங்க முடியாத ஒன்றுதான். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற சிந்த வேண்டிய உழைப்பும், அர்ப்பணமும் என்னை இத்தனை நாள் இயக்கியது.

விளையாட்டில் இந்திய பெண்கள் பங்கு பெறுவதற்கு இப்போதும் பல சமூகத் தடைகள் இருக்கின்றன. பல பெற்றோர்கள் அனுமதி தர மாட்டார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆடத் தொடங்கினேன். அப்போது சமூகத்தின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

அரைக்கால் சட்டை அணிந்து சிறார்களுடன் சிறுமிகள் விளையாடுவதை பிடிக்காத அனுமதிக்காத பெற்றோர்கள் அப்போதும் இருந்தனர். பெண்கள் வெயிலில் பயிற்சி செய்தால் கறுப்பாகிவிடுவார்கள் என்ற பயப்படும் பெற்றோர்கள் இப்போதும் உண்டு.

பெண்ணுக்குத் திருமணம் நடத்தணும். திருமணமான சில ஆண்டுகளில் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இப்போதும் உண்டு.

ஒரு பெண் விளையாட்டு அரங்கில் சாதனை நிகழ்த்தும் போது, எதிராளியை மட்டும் தோற்கடிக்கவில்லை. பெண்களுக்கு சுமையாக, தடையாக இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்தும் வெற்றி பெறுகிறார். இவர்களைப் பாராட்ட வேண்டும். சுமை, தடை, அவற்றை உடை என்பதுதான் சாதிக்க நினைக்கும் பெண்ணின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்'' என்றார்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com