கடவுள் சிற்பங்கள் செய்கூலி மட்டும் போதும்!

கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் கடவுள் சிற்பங்களை இஸ்லாமியர் வடிவமைத்துவருகிறார்.
கடவுள் சிற்பங்கள் செய்கூலி மட்டும் போதும்!

கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் கடவுள் சிற்பங்களை இஸ்லாமியர் வடிவமைத்துவருகிறார்.

விஜய கிராமணி தெருவில் இமாம் சாப் என்பவர் சாலையோரம் அமர்ந்து, பித்தளை, அலுமினியப்பாத்திரங்களை உருக்கி உருமாற்றி கடவுள் சிலைகளாகவடிவமைத்துக் கொடுத்து வருகிறார்.

வீடுகளில் பயன்பாடில்லாமல் இருக்கும் பித்தளைப் பாத்திரங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை வாங்கிய அதே இடத்தில் தீயில் உருக்கித் தேவைப்படும் சிலைகளுக்கான அச்சில் ஊற்றி, அழகிய சிலைகளாக உருவாக்கி கொடுத்து வருகிறார். இதற்கு ஒரு தொகையை கூலியாகப் பெற்றுக் கொள்கிறார்.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட பிதர் மாவட்டம் மங்கள்கி நகரைச் சேர்ந்த படே சாகிப்பின் மகனான இமாம் சாப், காஞ்சிபுரம் அருகே வெண்பாக்கம் என்ற கிராமத்தில் ஒரு தற்காலிக குடியிருப்பு அமைத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து இமாம் சாப் கூறியதாவது:

""எனது 9-ஆம் வயதிலேயே என் தந்தையிடம் இந்தத் தொழிலை கற்றுக் கொண்டேன். வீடுகளில் பயன்பாடில்லாமல் இருக்கும் பித்தளைப் பாத்திரங்களைப் பெற்று அதனை உருமாற்றி கொடுக்கிறேன். சுவாமி சிலைகள், தலைவர்களது சிலைகள் என எங்களிடம் 150-க்கும் மேற்பட்ட அச்சுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

பித்தளைப் பாத்திரங்களை தீயில் உருக்கி அந்தத் திரவத்தை தேவைப்படும் அச்சில் ஊற்றி அவர்கள் கேட்ட சிலைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம். இதேபோல் பயன்பாடில்லாமல் இருக்கும் அலுமினியப் பாத்திரங்களிலும் செய்து கொடுக்கிறோம்.

பெரும்பாலும் விநாயகர், முருகன், சிவன், மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட சுவாமி சிலைகளைத் தான் பலரும் கேட்கிறார்கள். ஒரு நாளில் சிறிய சிலைகளாக இருந்தால் இருபது, பெரிய சிலைகளாக இருந்தால் பத்து எண்ணிக்கையிலும் செய்து விடுவோம். சிறிய சிலை செய்ய 30 நிமிடமும், பெரிய சிலைகளை செய்ய ஒரு மணி நேரமும் ஆகிறது.

பித்தளைப் பாத்திரங்களை தீயில் உருக்கி உருமாற்ற அதிக நேரமாகிறது. அலுமினியம் விரைவில் உருகி திரவமாக மாறி விடும். சிறிய சிலைகளுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரையும், பெரிய சிலைகளுக்கு ரூ.400 முதல் ரூ.1500 வரையும் கூலியாக பெற்றுக் கொள்கிறோம்.

பயனில்லாமல் வீடுகளில் இருக்கும் பித்தளை, அலுமினியப் பாத்திரங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை உருமாற்றி கொடுப்பதை தவிர நாங்கள் எப்போதும் சிலைகளை புதிதாகத் தயாரித்து விற்பதே இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

தமிழ்நாட்டில் இத்தொழிலை செய்ய வந்து சுமார் 15 ஆண்டுகளாவது இருக்கும். சென்னை,சேலம்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களுக்கும் சென்று ஏதேனும் ஒரு சாலையோரத்தில் அமர்ந்து இத்தொழிலை செய்து வருகிறோம். ஒரு தெருவில் குறைந்தபட்சம் 15 நாள்கள் வரை முகாமிட்டு பணிகளை செய்வோம். பின்னர் வேறு தெருவுக்கு மாறிச் சென்று விடுவோம்.சிலையின் அழகிய வடிவமைப்பை பார்த்து பலரும் மகிழ்ந்து எங்களுக்கு பேசிய தொகையைவிட கூடுதலாக கூலி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பேசிய தொகையைவிட கூடுதலாக கொடுத்தால் வாங்கவே மாட்டோம்.

செய்கூலி மட்டும் போதும் என்று சொல்லி விடுவோம். பாத்திரங்களாக கொடுத்து அதை அவர்கள் கேட்ட சுவாமி சிலையாக செய்து அதை அவர்கள் வாங்கிப் பார்க்கும் போது அவர்களது முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.

பெரும்பாலும் எந்த இடத்தில் பாத்திரங்களை உருமாற்றுவதற்காகப் பெறுகிறோமோ அதே இடத்துக்கு அருகில் அமர்ந்து அவர்கள் கண் முன்பாகவே சிலைகளை செய்து கொடுத்து விடுவோம். பாத்திரங்களை உருக்கும்போது, சாலையோரங்களாக இருப்பதால் தீக்குழம்பும்,திரவமும் தெரித்து விடாமல் இருக்க அதன் மீது மூடி போட்டு பாதுகாப்பாகவும்,சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறும் உருக்குவோம்.

எந்தத் தொழிலை செய்தாலும் அதை சிறப்பாகவும், நேர்மையாகவும், நேசித்தும் செய்ய வேண்டும்''என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com