கடற்கரையில் உத்ஸவர்கள் சங்கமம்

மக்கள் தெய்வங்களைத் தேடிச் செல்லும் திருவிழாக்களைப் பார்த்திருக்கிறோம்.
கடற்கரையில் உத்ஸவர்கள் சங்கமம்

மக்கள் தெய்வங்களைத் தேடிச் செல்லும் திருவிழாக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தெய்வங்களே மக்களைத் தேடி வந்து அருள்பாலிக்கும் பெருவிழா,   பாரம்பரியம் மாறாமல் 121 ஆண்டுகளைக் கடந்தும் புதுச்சேரியில் நடைபெற்றுவருகிறது. 

கரையைத் தொட்டுத் தொழும் அலைகள், சிவப்புக் கதிரை நீட்டி வணங்கும் செங்கதிரோன், காற்றோடுபறெது கானம் இசைக்கும் பறவைகள்.. என மனதை மயக்கும் காலை நேரத்தில் கடற்கரையெங்கும் தெய்வங்கள் அணிவகுப்பு.  ஒன்றல்ல; இரண்டல்ல... 120 கோயில்களின் உத்ஸவர் சிலைகள். 

வாணவேடிக்கைகள், மேள தாளங்கள், ராட்டினங்கள், அன்னதானம், நீர், மோர், குளிர்பானங்கள்.. என அனைத்துப் பொருள்களையும் வாங்குவதற்கான சாலையோரக் கடைகள் என வழக்கமான விழாக்களைப் போல் களைகட்டினாலும்,  இத்தனை தெய்வ உத்ஸவ மூர்த்திகளை ஒரே இடத்தில்  எங்குமே தரிசிக்க முடியாது என்கிறார்கள் புதுச்சேரிவாழ் மக்கள்.

வைத்திக்குப்பத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகம் கடல் தீர்த்தவாரியில்தான் இந்தக் கண்கொள்ளாக் காட்சி.  புதுச்சேரி எல்லையிலுள்ள கோயில்களின் உத்ஸவர்கள் மட்டுமின்றி,  மயிலம்,  செஞ்சி, மேல்மலையனூர், பெரியபாளையம் என தமிழகத்திலிருந்தும் ஏராளமான முக்கிய கோயில் உத்ஸவ மூர்த்திகளும் வைத்திக்குப்பம் கடல் தீர்த்தவாரிக்கு வந்து அருள்பாலித்துச் செல்வதுதான் இங்கு சிறப்பு அம்சமாகும்.

கடற்கரையில் வரிசையாக 120 உத்ஸவர்களுக்கும் பந்தல் அமைக்கப்படுகிறது. அதன்பின்னர்,  கடற்கரை மணலில் 20-க்கும் மேற்பட்ட கோயில் உத்ஸவர்கள் எழுந்தருள வைக்கப்படுகின்றனர்.

12 பெருமாள்கள், 50 க்கும் மேற்பட்ட அம்மன்கள், 10-க்கும் மேற்பட்ட விநாயகர்கள், மதுரை வீரன், பச்சைவாழியம்மன் என  எங்கு பார்த்தாலும் தெய்வங்களின் சங்கமமாகவே காட்சியளிக்கிறது, அந்தக் கடற்கரை. அதைக் காண கண்கோடி எனில், தொழுவதற்கு கைகள் ஆயிரம் வேண்டும் என்பதே உண்மை.

மாட்டு வண்டிகள், கை இழுவை வாகனங்கள், பல்லக்குகள், டிராக்டர்கள், மினிவேன்கள், லாரிகள் என காலத்தின் வளர்ச்சியை காட்டும் வகையில் உத்ஸவர்கள் வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்படுகின்றனர். 

""எந்த ஊரிலிருந்து வந்தாலும் அந்த உத்ஸவர்கள் புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் வந்து மக்களுக்கு அருள்பாலித்து செல்வதே வாடிக்கையாகும். கோயிலுக்கு சென்று வழிபடமுடியாத மக்களுக்கும் வாசல் தேடிவந்து அருள்பாலிக்கும் தெய்வங்களை புதுவை மாசி மகத்தில்தான் பார்க்க முடியும்''  என்கிறார் வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த தீனதயாளன்.

வெளியிடங்களில் இருந்து வருவோரை வரவேற்பதைப் போலவே உத்ஸவர்களையும் அனைத்து வீடுகளிலும் வரவேற்க மாக்கோலமிட்டு, பூஜைப் பொருள்களை வைத்து வணங்கி வரவேற்பதையும் வைத்திக்குப்பம் மக்கள் கடைப்பிடித்துவருகிறார்கள்.  குழந்தைகள், பெண்கள், வயதானோர் என குடும்பம் குடும்பமாக லட்சக்கணக்கானோர் வைத்திக்குப்பத்துக்கு வந்து உற்சவர்களை தரிசிப்பதுடன், நேர்த்திக்கடனாக சுவாமி வேடமிட்டும் வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரி இருந்ததால், தற்போதும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் சாதி, மதம், மொழி கடந்து  தீர்த்தவாரிக்கு வந்து செல்கின்றனர்.

புதுச்சேரியில் மிகப் பெரிய விழாக்கள் எனில் கதிர்காமம் செடல் திருவிழாவையும், திருக்காஞ்சி தேர்த்திருவிழாவையும் குறிப்பிடுகிறார்கள். அந்தத் திருவிழாக்களுக்கெல்லாம் மக்கள் சங்கமிப்பது வழக்கம். ஆனால், மாசி மகக் கடல் தீர்த்தவாரியில்தான் தெய்வங்கள் சங்கமித்து அருள்பாலிக்கும் ஆச்சரியம் நிகழ்கிறது. 

படங்கள் கி.ரமேஷ் என்ற ஜெயராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com