சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை

""வாழ்வதற்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை.  
சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை


""வாழ்வதற்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை.  ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள்  எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான்.

அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவைகளுக்காக அறிவோடு ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைகள்தான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம். சூழ்ச்சியும் வஞ்சகமும் ஒரு போதும் வெல்லாது என இப்படியும் சொல்லலாம்''  ஆழமாகப் பேசத் தொடங்கு
கிறார் தனபாலன் கோவிந்தராஜ். இயக்குநர் ராமின் உதவியாளர்.  தற்போது "பருந்தாகுது ஊர் குருவி' படத்தின் மூலமாக இயக்குநர் ஆகிறார். 

தலைப்பு எதன் குறியீடாக கதைக்குள் இருக்கும்....

அதை மறைத்து இங்கே எதையும் சொல்ல முடியாது. எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை.அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது. கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு. ஒரு காடும், அங்கே இருக்கும் இரு மனிதர்களும்தான் கதை. அந்த காட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும்தான் கதை. உண்மையை கண்டால் பலரும் ஓடி ஒளிகிறோம். ஆனால் விசாரணை என வருகிற போது, போலீஸþக்கு எல்லாம் சவால்தான். என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர்  நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை.  அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம்  கைக் கூடி வருகிறது. அதை சில கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.

 உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதர்களை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். மனிதம் பேசுகிற அதே வேளையில், அதற்காக அவர்கள் கடந்து வந்த தூரம், கொடுத்த  விலை என கதை போகும். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு.

கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...

எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள் இருந்தாலும், எல்லோருமே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம் என சொல்லப் போகிறேன். போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்.. 

இன்னும் பரிச்சயமான முகங்களை வைத்து கதை சொல்லலாமே...

ஓரளவுக்கு எல்லோருமே தெரிந்தவர்கள்தான். பெரிய ஹிட் இல்லை. அதுதான் வருத்தம். விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ இந்த இருவரும்தான் கதையின் முக்கிய புள்ளிகள். மும்பை மாடல் காயத்ரி,  ராட்சசன் வினோத் சாகர், அருள் சங்கர், கோடாங்கி வடிவேல்,  ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தை  தயாரிக்கிறது. அனைவரின் பங்கும் இதில் கை சேர்ந்ததில் மகிழ்ச்சி.  ரெஞ்சித் உண்ணி இசைக்கு பொறுப்பு. அஷ்வின் நோயல்  ஒளிப்பதிவில் அடர்ந்த வனத்தின் மறுபக்கம் உங்களுக்கு தெரியவரும்.  லட்சக்கணக்கான மக்களைச்சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து  உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com