அழகிய ஆன்மிகப் பூங்கா..!

திருநள்ளாறு சனிப் பகவான் கோயிலை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிகப் பூங்கா  பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது.
அழகிய ஆன்மிகப் பூங்கா..!

திருநள்ளாறு சனிப் பகவான் கோயிலை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிகப் பூங்கா பக்தர்களைப் பெரிதும்
கவர்ந்துவருகிறது.

காரைக்காலில் உள்ள திருநள்ளாற்றில் உள்ள மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், அம்பிகை ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு அருள்பாலிக்கும் தலமானது பல நூற்றாண்டுகள் பழையானதாகும்.

இந்தத் தலம் மிகுதியான பக்தர்களை ஈர்க்கக் கூடிய நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் கோயில் நகரமாக புதுவை அரசு அறிவித்தது. இதையடுத்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து
வருகிறது.

குறிப்பாக, பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல வரிசை வளாகம் (கியூ காம்ப்ளக்ஸ்), நளன் தீர்த்தக்குளம் மேம்பாடு, குளக்கரையில் வணிக மையம், தகவல் மையம் உள்ளிட்டவற்றுடன் கூடிய உணவகம், நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவட்டச் சாலை அமைப்பு, தங்கும் விடுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, கோயிலுக்கு வருவோர் மன அமைதிக்குப் பயன்படக்கூடிய வகையில் 21,897 சதுர அடியில் ரூ.7.77 கோடி மதிப்பில் ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் நவக்கிரகத் தலங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்தனியாக கோபுர அமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடைமேடை, குளம் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலிகைச் செடிகள் வளர்ப்பு உள்ளிட்ட மரம் வளர்ப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பக்தர்கள் தியானத்தில் ஈடுபடும் வகையில் ஒளி, ஒலி அமைப்புடன் தியானக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் சுற்றிவரக்கூடியதாகவும், மன அமைதிக்கான மையமாகவும் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவினுள் சிவன் உருவச் சிலை அமைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
நவக்கிரகக் கோபுர அமைப்பினுள் அந்தந்த கிரக மூர்த்திகளைக் குறிப்பிடும் வகையில், ஏதேனும் ஒரு அம்சம் அமைக்கப்படவுள்ளது. தியானக்கூடத்தில் ஒளி, ஒலி வசதிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் ஆன்மிகப் பூங்கா அங்கு வரக்கூடியவர்களின் ஆன்மிக உணர்வை மேம்படுத்தும் விதமாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டு படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும், பிற நாள்களில் மாலை 4 முதல் இரவு வரையும் பூங்கா திறக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் நடைபயிற்சிக்கான தளமாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
எஞ்சிய பணிகளும் நிறைவடைந்துவிட்டால், காரைக்கால் மாவட்டத்தில் மக்களுக்கு மன அமைதிக்கும், ஆன்மிக சுற்றுலா வருவோரை வெகுவாக மகிழ்விக்கும் மையமாகவும் இப்பூங்கா இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com