இருப்பிடம் தேடி..!

3ஆண்டுகளுக்கு முன்பே பேப்பர் பைகள்,கெமிக்கல் இல்லாத சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தேன்.
இருப்பிடம் தேடி..!


''3ஆண்டுகளுக்கு முன்பே பேப்பர் பைகள்,கெமிக்கல் இல்லாத சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தேன். நல்ல வியாபாரம் இருந்தபோது, கரோனா காலம் வந்தது. உற்பத்தி செய்த எந்தப் பொருளையும் வெளியில் எடுத்து சென்று விற்க முடியாததால், நஷ்டம் ஏற்பட்டு முடங்கிப் போனேன்.
பண்டிகைகளுக்குத் தேவையான பலகாரங்களை செய்து விற்று வந்தேன். அந்த நேரத்தில் முதியவர் ஒருவர், ' உடல்நலம் சரியில்லாமல் தனியாக வசித்து வருகிறேன். 3 வேளையும் உணவு சமைத்துத் தர முடியுமா?' என்று கேட்டார். அவருக்கு மட்டும் தினசரி 3 வேளையும் உணவு தயாரித்து கொடுத்து வந்தேன். உணவு சுவையாக இருப்பதாக மேலும் சிலரை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக, உணவு தயாரிப்புத் தொழில் விரிவடைந்து, இன்று 93 பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வெளியூரில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்கள்,அரசு அலுவலர்கள் என பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் முதியோர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவாறு உணவில் உப்பு, காரம், எண்ணெய் ஆகியன குறைவாகச் சேர்த்து உணவு தயாரித்துக் கொடுக்கிறோம்.
முக்கியமாக, ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உணவாக இருக்கும் வகையில் சமைத்து தருகிறோம். தினசரி காலையிலும், இரவிலும் காரட் தோசை, பீட்ரூட் தோசை, பருப்பு அடை,கேழ்வரகு சேமியா, களி, பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட புட்டு வகைகள்,பூரி, பொங்கல்,சிகப்பரிசி கஞ்சி இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 3 இட்லியும் எப்போதும் இருக்கும். மதியம் சாம்பார், ரசம், மோர், நீர்த்தாவரங்களால் செய்யப்பட்ட கூட்டு , பொரியல் இவற்றுடன் சாதமும் இணைந்திருக்கும்.
'என்ன உணவு உங்களைத் தேடி வரும்?' என்ற உணவுப் பட்டியலை முதல் நாள் இரவே வாட்ஸ் ஆஃப் முலம் அனுப்பி வைத்து விடுவோம்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள் ஆகிய இடங்களில் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று குறித்த நேரத்தில் 3 வேளை உணவையும் கொடுத்து விடுவோம். சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவது தான் எங்களது தனிச்சிறப்பு. உணவு மட்டுமின்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கொடுக்கிறோம்.
கல்லூரி மாணவர்கள், வேலை தேடுபவர்கள் பலரும் சமையலர்களாகவும்,டெலிவரிமேன்களாகவும் பகுதி நேரமாகவும்,முழு நேரமாகப் பணியாற்றுகின்றனர்.இவர்களில் யாராவது ஒருவர் எந்த நாளில் வரவில்லையென்றாலும் நான் எனது இருசக்கர வாகனத்தில் எடுத்துகொண்டு சென்று குறித்த நேரத்தில் கொடுத்து விடுவேன். சமையலர் வரவில்லையென்றாலும் நானே சமைப்பதும் உண்டு.
ஓராண்டுக்கு முன்பு குடிநீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் அடுக்கி எடுத்துக் கொண்டு சென்றபோது, குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் என் மீது மோதி கீழே விழுந்ததில் எனது இடது கால் முழுவதுமாக நொறுங்கியது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்த சில நாள்களில் ஒரு சில பகுதிகளுக்கு செல்ல வேண்டிய டெலிவரி மேன்கள் வராததால் நானே பெல்ட் கட்டிக்கொண்டு உணவை எடுத்துச் சென்று கொடுத்து வந்தேன். சைவ உணவு மட்டுமே வழங்குகிறோம்.
'இயற்கை உணவாகவும்,வீட்டுச் சாப்பாடாகவும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கிறது' என்று பலரும் சொல்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலரின் வார்த்தைகள்தான் என்னை இத்தொழிலை தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.யாராக இருந்தாலும், ஒரு சிறு சோற்றுப் பருக்கையை கூட வீணாக்கிவிடக் கூடாது. அது உங்களிடம் வருவதற்கு பல தடைகளைத் தாண்டி வந்திருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com