12  லட்சம் தேங்காய்கள் உடைத்து..!

கெங்கையம்மன் கோயிலில் 15 நாள்கள் திருவிழா,  5 லட்சம் பக்தர்கள், 12 லட்சம் தேங்காய்கள் உடைப்பு... என்று கோலாகலமாகத் திருவிழா நடைபெற்றது என்றால் ஆச்சரியம்தானே!
12  லட்சம் தேங்காய்கள் உடைத்து..!

கெங்கையம்மன் கோயிலில் 15 நாள்கள் திருவிழா, 5 லட்சம் பக்தர்கள், 12 லட்சம் தேங்காய்கள் உடைப்பு... என்று கோலாகலமாகத் திருவிழா நடைபெற்றது என்றால் ஆச்சரியம்தானே!

காரைக்காலில் மாங்கனித் திருவிழா, டெல்டா மாவட்டங்களில் நெல் திருவிழா, கர்நாடகத்தில் தக்காளி திருவிழா.. என்று விளைபொருள்களை மையப்படுத்தியே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன்படியே, தமிழ்நாட்டின் முக்கிய அம்மன் கோயில்களின் ஒன்றான குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் தேங்காய்தான் பிரதானம்.

ஏப்ரல் 30- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் சிரசுப் பெருவிழா தொடங்கியது. 15 நாள்களாகக் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம், தேர்த் திருவிழா, சிரசு திருவிழா, பூப்பல்லக்கு உள்ளிட்ட பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

வழக்கமாக, அம்மன் கோயில்களில் நடைபெறும் நேர்த்திக்கடன்களில் இந்தக் கோயிலில் நடைபெறும் நேர்த்திக் கடன் சிறப்பானது. வேண்டிய வரம் அளித்த அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவது தேங்காய்களை உடைத்துதான். இந்த ஆண்டு நடைபெற்ற அம்மன் சிரசுப் பெருவிழாவில், 12 லட்சம் தேங்காய்களைப் பக்தர்கள் உடைத்தது என்பது ஆச்சரியத்தை அளித்துவிட்டது.

இதுகுறித்து தேங்காய் வியாபாரி ஜி.நயீம் பர்வாஸிடம் கேட்டபோது:

"" 15-நாள்களாக கூழ்வார்க்க, மா விளக்கு படையலிட, அம்மனை வழிபட கோயிலுக்கு வந்தவர்கள் குறைந்தது 2, 3 தேங்காய்களை உடைத்தனர். திருவிழாவன்று கோயிலுக்குள் பல்லாயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்துள்ளனர். சிரசு ஊர்வலத்துக்கு வந்தவர்கள் குறைந்தது ஒரு சிதறுகாயாவது உடைத்துச் சென்றிருப்பார்.

தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்காகவும், புதிய வேண்டுதல்களுக்காகவும், தங்கள் குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகளுக்காகவும் பலர் 101, 201, 501, 1001 என சிதறுகாய்களை உடைத்தனர். இதன் மூலம் கெங்கையம்மன் திருவிழா தொடக்கத்தில் இருந்து பூப்பல்லக்கு வரை 12- லட்சம் தேங்காய்கள் குறைந்தபட்சம் உடைக்கப்பட்டிருக்கும்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் ரூ.9- ஆக இருந்த முதல் தர தேங்காய், வியாபாரம் இல்லாததால் 15- நாள்களுக்கு முன்னர் ரூ.8- ஆக குறைந்து விட்டது. தற்போது பழையபடி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. திருவிழாவால், உள்ளூரில் உள்ள சிறு, நடுத்தர தேங்காய் வியாபாரிகளிடம் தேங்கியிருந்த தேங்காய்கள் முழுவதும் விற்பனையாகிவிட்டன'' என்றார்.

இந்தத் தேங்காய்களைச் சேகரிப்பதற்கெனவே வந்திருந்த ஒடுக்கத்தூர் அருகேயுள்ள நெக்னாமலை, ஆசனாம்பட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது:

""சிதறு தேங்காய்களைச் சேகரிக்க 400 பேர் வந்திருக்கிறோம். நாங்கள் மூட்டைகளாகக் கட்டி வேன்களில் எடுத்துச் சென்று பிரித்துகொள்வோம். காயவைத்து, தேங்காயை செக்கு மிஷின்களில் அரைவை செய்து, ஆண்டுமுழுவதும் சொந்த உபயோகத்துக்கே பயன்படுத்துவோம். சமையல் செய்வது, உடலில் தேய்த்துகொள்வது என்று எல்லாமே தேங்காய் எண்ணெய்தான். பல தலைமுறைகளாக, குடியாத்தம் திருவிழாவுக்கு தேங்காய்களைச் சேகரிப்பதற்கென்று வருகிறோம்.

50ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோர்கள் தேங்காய்களைச் சேகரித்து, மாட்டு வண்டிகளில் ஏற்றி சென்று, மாட்டு ஆலைகளில் அரைவை செய்வர். இப்போது காலம் மாறிவிட்டது'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com