பூமிக்கடியில் திருவிழா!

காஞ்சிபுரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ஐயங்கார்குளம் கிராமத்தில் சித்திரை பெüர்ணமியன்று நள்ளிரவில் பூமிக்கடியில் திருவிழா  நடைபெற்றது. சில நூற்றாண்டாகவே ஆண்டுதோறும் இந்தத் திருவிழா நடக்கிறது.
பூமிக்கடியில் திருவிழா!


காஞ்சிபுரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ஐயங்கார்குளம் கிராமத்தில் சித்திரை பெüர்ணமியன்று நள்ளிரவில் பூமிக்கடியில் திருவிழா  நடைபெற்றது. சில நூற்றாண்டாகவே ஆண்டுதோறும் இந்தத் திருவிழா நடக்கிறது.

இந்தக் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சுமார் 20 அடி ஆழத்தில்,  ஜோதிட சாஸ்திரப்படி கிணறு  ஒன்று மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் 1584ஆம் ஆண்டு கட்டப்பட்டிருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கிணறை "நடவாவிக்கிணறு'  என்று அழைக்கின்றனர்.

பொதுமக்கள் இறங்கி கிணற்றுக்குள் செல்லத்தக்க வகையில் 27 நட்சத்திரங்களையும் குறிக்கும் வகையில் வரிசையாக 27 படிக்கட்டுகளும், அதற்கடுத்து 9 நவக் கிரகங்களையும் குறிக்கும் வகையில் 9 படிக்கட்டுகளும் ஒன்றன் பின்னர் ஒன்றாக வரிசையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறுகலான இந்த 36 படிக்கட்டுகளிலும் இறங்கி உள்ளே சென்றால் 12 ராசிகளையும் குறிக்கும் வகையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 12 தூண்கள் அமைந்திருக்கின்றன.

இவற்றில் சுவாமிகள், ரிஷிகள், மகான்கள் தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் அழகிய சிற்பங்களாக காட்சியளிக்கின்றனர்.  என்றுமே இக்கிணறு வற்றியதே இல்லை என்கின்றனர் அந்தக் கிராம மக்கள்.

"நடவாவிக்கிணறு'  எனும் 36 படிக்கட்டுகளிலும் இறங்கி உள்ளே சென்று பார்த்தால் அதற்குள் சதுர வடிவக் கிணறும் உள்ளது. இந்தச் சின்னஞ்சிறு கிணற்றுக்குள் பொதுமக்கள் யாரும் இறங்க முடியாதபடி தண்ணீர் நிரம்பியுள்ளது.  வயல் வெளியில் ஜோதிட சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணற்றின் உள்பகுதி முழுவதையும் மேலிருந்து பார்க்கும் வகையில் தடித்த கம்பிகளால் மேற்கூரையாகவும்,பாதுகாப்பானதாகவும் வடிவமைத்திருக்கின்றனர்.

படிக்கட்டுகள், தூண்கள் உள்பட கிணறு முழுவதும் நிரம்பியிருக்கும் தண்ணீர் முழுவதையும் சித்திரை பெüர்ணமிக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மோட்டார் வைத்து முழுவதுமாக வெளியில் எடுத்து விட்டது கோயில் நிர்வாகம். 

கிணற்றுக்குள்ளே செல்லக் கூடிய 36 படிக்கட்டுகள்,12 தூண்கள், சுவரின் உட்புறப் பகுதிகள் முழுவதுமாக எந்தவித புழுக்கள்,பூச்சிகள்,அழுக்குகள்,அசுத்தங்கள் இல்லாதவாறு தண்ணீர் பீய்ச்சியடிக்கும் கருவிகள் மூலமாக சுத்தப்படுத்தினர்.  அதன் பிறகு பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கி சென்று அழகிய தூண்களையும், சுவர்களையும் பயமே இல்லாமல் பார்வையிடும்படி அதிக ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளையும் பொருத்தினர்.

கிணறு முழுவதுமாக சுத்தம் செய்தவுடன், சித்திரை பெüர்ணமியான மே 5ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் கிணற்றுக்குள் சென்று பார்வையிடவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக,  காஞ்சிபுரத்திலிருந்து வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 6 கி.மீ.தொலைவில் உள்ள ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்திருக்கும் நடவாவிக்கிணற்றுக்கு எழுந்தருளினார். சிக்குத்தாடை அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்ஸவர் வரதராஜப் பெருமாளை கோயில் பட்டாச்சாரியார்கள் கைகளில் சுமந்தவாறு குறுகலாக உள்ள கிணற்றின் 36 படிக்கட்டுகளிலும் கொஞ்சம்,கொஞ்சமாக இறக்கி கிணற்றுக்குள் சென்றனர். பெருமாள் கிணற்றுக்குள் முழுவதுமாக இறங்கியதும் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 12 ராசிகளையும் குறிக்கும் 12 தூண்களையும் கிணற்றுக்குள்ளேயே சுற்றி வருகிறார்.4 மூலைகளிலும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதன் பின்னர் கிணற்றுக்குள்ளேயே இருக்கும் ஒரு சிறு அறையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் மீண்டும் கிணற்றுக்கு வெளியே எழுந்தருளினார் வரதராஜப்பெருமாள்.

பெருமாளின் வருகையை முன்னிட்டு கிணற்றை சுற்றியுள்ள உட்புற,வெளிப்புற பகுதிகள் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும்,மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அற்புத வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெருமாள் காஞ்சிபுரத்தில் உள்ள சந்நிதிக்கு திரும்பினார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் பெருவிழா நடைபெறும் அதே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சார்பில்தான் ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை பெüர்ணமியன்று பெருமாள் பூமிக்கடியில் (கிணற்றுக்குள்)இறங்கும்  இந்த அற்புத நிகழ்வும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com