விண்வெளி ஆய்வில் தமிழ் இளைஞர்கள்!

விண்வெளித் தொழில்நுட்பத்தில் தனியார் துறையை  ஊக்குவிக்கும் வகையில், 2020-இல் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு,   அங்கீகார மையம் (இன் ஸ்பேஸ்) தொடங்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் தமிழ் இளைஞர்கள்!

விண்வெளித் தொழில்நுட்பத்தில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில், 2020-இல் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம் (இன் ஸ்பேஸ்) தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் தமிழர்கள் கோலோச்சி வருவது வியப்படைய செய்துள்ளது.

இளம் தொழில்முனைவோர், கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. "இன் ஸ்பேஸ்' குஜராத் மாநிலத்துக்கு உட்பட்ட அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. விண்வெளி புத்தாக்க நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, இஸ்ரோ அமைப்புடன் தேவையான வசதிகளை அந்த நிறுவனம் செய்து வருகிறது.

அந்தவகையில், விண்வெளி புத்தாக்க நிறுவனங்களில் குறிப்பிட்டத்தக்க அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் புதிய திட்டங்களில் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அக்னிகூல் நிறுவனம்: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "அக்னில்கூல்' நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொயின் கூறியது:

""செயற்கைக்கோள்களை புவியின் குறுவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் ராக்கெட்களை உற்பத்தி செய்யும் ஆய்வு நடைபெறுகிறது. பி.எஸ்.எல்.வி. , ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்கள் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவிவருகிறது.

அதேவேளையில் 5 கிலோ முதல் 100 கிலோ எடை வரை சிறிய ராக்கெட்களை ஏவும் வகையில் ராக்கெட்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். "அக்னிபான்' என்ற பெயரில் ராக்கெட்களைத் தயாரித்து வருகிறோம். அடுத்த 2 மாதத்தில் ராக்கெட் சோதனையை நடத்த உள்ளோம். 2024-இல் விண்ணில் ராக்கெட்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்.

இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில், சிறிய ராக்கெட்களை ஏவுவதற்கு தனியாக ஏவுதளத்தை நிறுவியுள்ளோம். 2 நிலைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ராக்கெட் செமி கிரையோ தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி கூடத்தில் ஆய்வு, மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விண்வெளி துறையில் கெமிக்கல், செராமிக், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளை படித்து அனைத்து துறை மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. 2017-இல் தொடங்கப்பட்ட அக்னிகூல் நிறுவனம் தற்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் ராக்கெட் தயாரிப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளது'' என்றனர்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' புத்தாக்க நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீமதி கேசன் கூறியது:

""செயற்கைக்கோள் தயாரிப்பில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி அதன் மூலம் எதிர்கால விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு வளர்ப்பதில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

இதுவரை 4 முறை புவிவட்ட பாதையிலும், 3 முறை துணை புவிவட்ட பாதையிலும், 18 முறை பலூன்களில் வைத்து செயற்கைகோளை ஏவியுள்ளோம். அண்மையில் நாடு முழவதும் அரசு பள்ளிகளில் 750 பள்ளி மாணவிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆசாதிசாட்-2 அண்மையில் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

கிரஹா ஸ்பேஸ்: கோவையில் உள்ள கே.சி.டி. தொழில்நுட்ப பூங்காவில் அமைந்துள்ள ஃபோர்ஜ் இன்குபேட்டரில் இயங்கி வரும் கிரஹா ஸ்பேஸ் என்ற புத்தாக்க நிறுவனம் 2020-இல் கோவையைச் சேர்ந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி லோகநாதன், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது.

அவர்கள் கூறியது:

""இன்று வரை கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் செயற்கைக்கோள் படங்களை மட்டுமே வழங்குகின்றன. இத்தகைய செயலிகள் நாஸா, ஏர்பஸ், ஈசா போன்ற பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் உதவியுடன் செயற்கைக்கோள் படங்களை நமக்கு வழங்குகின்றன. இப்புகைப்படங்கள் மூன்று முதல், ஆறு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவையாகவோ, சில ஆண்டுகளுக்கு முந்தையதாகவோ இருக்கலாம்.

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட செயற்கைக்கோள்களில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யும் தொழில்நுட்பத்தை வைத்துள்ளன. இதன்மூலம் எதிரிநாடுகளின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ராணுவ கட்டமைப்புகள், நாட்டின் எல்லைகளில் என்ன நடக்கிறது போன்றவற்றை நேரடியாக வேவுபார்க்கின்றன.

கிரஹா ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம், பூமியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் (லோ எர்த் ஆர்பிட் எனப்படும் குறு வட்ட பாதையில்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவி, அவற்றின் மூலமாக, பூமியின் எந்த இடத்தையும் நேரலையாக பார்க்கக் கூடிய வகையில் வீடியோ ஒளிபரப்பு செய்ய முடியும். ராணுவ பயன்பாடு, எல்லைகளை கண்காணித்தல், கட்டமைப்பு மேம்படுத்தல், இந்திய கடல் பரப்புகளை கண்காணித்தல், வெள்ளம், வனப்பகுதிகளில் தீயைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு வீடியோ ஒளிபரப்பு உதவியாக இருக்கும்.

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், ரமேஷ் ஜி20 மாநாட்டில், தொழில்நுட்ப பணிக்குழுவின் கீழ் விண்வெளி தொழில்நுட்பத்தின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் புத்தொழில் மானியம் வழங்கியது. இந்திய அரசும் ஸ்டார்ட்அப் இந்தியா நிதி வழங்கியுள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது'' என்றார்.

ஆர்பிட் எய்ட்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திகுமார், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். இவர் விண்வெளியில் சுற்றுவட்டப் பாதைகளில் வேகமாக சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைக்கும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

200 கிலோ முதல் 1 டன் எடையுள்ள பெரிய அளவு செயற்கைக்கோள்களுக்கு புவி சுற்றுவட்டப் பாதையில் எரிபொருள் நிரப்பி, செயற்கைக்கோள்களின் ஆயுள்காலத்தை நீடிக்கும் திட்டத்தில் தனது குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

வெலான் ஸ்பேஸ்: மதுரையைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவர் வெலான் ஸ்பேஸ் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார். வெலான் ஸ்பேஸ் என்பது மைக்ரோ புவிஈர்ப்பு விசை ஆராய்ச்சி,மேம்பாட்டு சேவைகளை வழங்குகிறது. இதற்காக நானோ கார் அளவில் பூமியில் விண்வெளி ஆய்வுக் கூடத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக பரிசோதனை முயற்சியாக சிறிய ரொட்டி அளவில் ஆய்வுக்கூடத்தை அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வுக்கூடத்தில் பூமியில் புவிஈர்ப்பு விசையால் மேற்கொள்ள முடியாத ஆய்வுகளை, விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் ஆய்வு மேற்கொள்ள முடியும். மருந்து தொடங்கி வைரம், சுற்றுச்சூழலுக்கு சீர்கேடான பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் பாக்டீரியா வளர்ப்பு என பல்வேறு ஆய்வுகளை விரைவாக மேற்கொண்டு, பூமிக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியும்.

இந்த ஆய்வுக்கூடம் முழுவதும் தானியங்கியாக, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயங்கும் வகையில் இருக்கும். பல்வேறு மருந்து நிறுவனங்கள், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளனர்.

பூமியில் உயிர்களை காக்கும் புதிய மருந்துகள், தரவு தகவல் பரிமாற்றம் என பல்வேறு சேவைகளை பெற முடியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பேஸ் டக்: புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிசங்கர் , "ஸ்பேஸ் டக்' எனும் புத்தாக்க நிறுவனத்தைத் தொடங்கி தலைமைச் செயல் அலுவலராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிறுவனம் விண்வெளியில் உள்ள ( செயல்படாத ராக்கெட், செயற்கைக்கோள் பாகங்கள்) குப்பைகளை தேவைப்படும் நிறுவனங்களுக்கு கட்டண அடிப்படையில் அகற்றும் பணி குறித்த ஆய்வு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

விண்வெளி குப்பைகளை அகற்றும் திட்டத்துக்காக, ஸ்பேஸ் எக்ஸ், இஸ்ரோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும், மறுபயன்பாட்டு விண்கலம் மூலம் விண்வெளி குப்பைகளை எடுத்து பூமிக்கு திரும்பும். மீண்டும் விண்வெளிக்குப்புறப்பட்டு குப்பைகளை சேகரிக்கும். இத்திட்டத்துக்கு நிதி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com