நாட்டின் முதல் மணல் சிற்பங்கள்!

மணல் சிற்பம் என்றாலே ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட  புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவர்.
நாட்டின் முதல் மணல் சிற்பங்கள்!

மணல் சிற்பம் என்றாலே ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவர். ஆனால், நாட்டிலேயே முதன் முதலாக மணல் சிற்பத்தை அறிமுகப்படுத்தியது புதுச்சேரிதான்.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரி இருந்தபோது, அரசு அதிகாரி ஒருவர் வீராம்பட்டிணத்தில் மணல் சிற்பத்தை சிலர் வடிவமைத்ததைக் கண்டதாகவும், அவர் மூலம் ஒடிஸ்ஸா, மேற்கு வங்க எல்லைகளுக்கு இடையே உள்ள 'சந்தன்நகர்' எனும் இடத்தில் அறிமுகமாகியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதி பல்கலைக்கூடத்தைச் சேர்ந்த நுண் கலைத் துறை பேராசிரியர்கள் வே.பிரபாகரன், வீ.மாமலைவாசகன், எம்.சேகர் ஆகியோர் மணல் சிற்பத்தில் மிகச் சிறந்த கலைஞர்களாகவும், வருங்காலத் தலைமுறைக்கு கற்பிப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மூலம் 1999- ஆம் ஆண்டிலேயே சுண்ணாம்பாறு கடற்கரையில் 50 அடி அகலத்தில் பிரமாண்டமான பத்துக்கும் மேற்பட்ட பொது மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்த ஒடிஸ்ஸா புரி ஓவியக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், புரி கடற்கரையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படியே ஓவியக் கல்லூரி மாணவரான சுதர்சன் பட்நாயக்மணல் சிற்பத்தைத் தொடர்ச்சியாக வடிவமைத்து தனிப்பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அரியாங்குப்பத்தில் உள்ள பாரதி பல்கலைக்கூடத்தின் நுண் கலைத்துறை தலைவர் வே.பிரபாகரனிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் சிதம்பரம். விவசாயக் குடும்பம். சிறுவயதில் களிமண் சிற்பங்களை வடிவமைத்து விளையாடும்போதே சிற்பக்கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்ததும், கும்பகோணம் சிற்பக் கலைக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றேன். முதுகலைப் பட்டத்தை உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அப்போது, அடிக்கடி கங்கை நதிக்கரைக்குச் செல்லும்போதுதான் கரை மணலில் சிற்பங்களை வடிமைத்து ரசிப்பேன். அதன்பின்னர், புதுச்சேரி பாரதி பல்கலைக் கூடத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவுடன் மணல் சிற்பத்தை வடிவமைத்து மக்களிடையே சமூக ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

1999-ஆம் ஆண்டு புதுச்சேரி சுண்ணாம்பாறு கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடல் சுற்றுச்சூழல் குறித்த மணல் சிற்பத்தை உடன் பணிபுரியும் பேராசிரியர்கள் , மாணவ, மாணவியரின் உதவியுடன் வடிவமைத்தேன். கடற்கரை மணலில் கடல் தேவதை, கடல் கன்னி, எகிப்து பிரமிடு உள்ளிட்ட 10 வடிவங்களை அமைத்தேன். அவற்றுக்கு மக்களிடையேயும், கலைசிற்ப மையங்களின் ஆசிரியர்களிடையேயும் வரவேற்பும் கிடைத்தது. அப்போது ஒடிஸ்ஸாவிலிருந்தும் ஒரு விரிவுரையாளர் வந்திருந்தார். அதை அவர் பார்த்துச் சென்ற பிறகே, ஒடிஸ்ஸாவில் மணல் சிற்ப வடிவமைப்பு நடைபெற்றது. ஆகவே, ஒடிஸ்ஸாவுக்கு முன்னோடியாக புதுச்சேரி கடற்கரையில்தான் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது.

புதுச்சேரி மணல் சிற்பத்தை அறிந்த திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு 'சென்னை 600028' என்ற திரைப்படத்தில் அந்தச் சிற்பங்களை வைத்து பாடலைப் படமாக்கியுள்ளார். அன்றிலிருந்து இதுவரையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களை வடிவமைத்துள்ளோம்.

சமூக விழிப்புணர்வுள்ள சிற்பங்களே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, ஆரோவில் வடிவம், உலகக் கால்பந்து கோப்பை, ஈபிள் டவர், ஜி 20 மாநாடு என பல வரலாற்று நிகழ்வுகளையும் மணல் சிற்பங்களாக வடிவமைத்து மக்களது பாராட்டுகளைப் பெற்றுள்ளோம்.

புதுச்சேரியில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் புதுவையின் சின்னமான ஆயி மண்டப மணல் சிற்பத்தையும், உலகைக் காக்கும் கைகள் வடிவ மணல் சிற்பத்தையும் ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஜவாஹர்லால் நேரு உள்ளிட்டோரின் உருவங்களையும் அவரவர் நினைவு நாளில் வடிவமைத்தது மனநிறைவாகவுள்ளது.
ஒரு மணல் சிற்பத்தை உருவாக்க குறைந்தது 6 மணி நேரமாகும். மிக நுண்ணிய கலைவேலைப்பாடுகளுடன் மணல் சிற்பத்தை உருவாக்கமுடியும். மனதை ஒருநிலைப்படுத்துதல், சிந்தனையை குவித்து மிக நுண்ணிய பார்வையுடன் செயல்பட்டாலே சிறந்த மணல் சிற்பத்தை உருவாக்க முடியும். ஆகவே மணல் சிற்ப வடிவமைப்பு என்பது மன வளம் நிறைந்த கலையாகும்.

காரைக்கால் கடற்கரையிலும் ஆண்டு தோறும் சுற்றுலாத் துறையின் உலக சுற்றுலா விழாவுக்காக மணல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறோம். புதுவை அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளேன். பல கலைக் கல்லூரிகள், கலைக்கூடங்களின் பாடத் திட்ட குழுவிலும் இடம் பெற்றுள்ளதும் எனக்கு மன நிறைவை அளிக்கிறது'' என்றார்.

படங்கள்: கி.ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com