தேநீர்க் கடைக்காரரின் 'மொய் விருந்து'!

'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்;  நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்'  என்ற வாசகங்கள்,  முன்பெல்லாம் பொது நிதி வசூல் செய்யும் துண்டு அறிக்கைகளில் பிரபலம்.  
தேநீர்க் கடைக்காரரின் 'மொய் விருந்து'!

'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்;  நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்'  என்ற வாசகங்கள்,  முன்பெல்லாம் பொது நிதி வசூல் செய்யும் துண்டு அறிக்கைகளில் பிரபலம்.  இப்போதெல்லாம் அரசியலாக இருந்தாலும், சேவையாக இருந்தாலும் 'மொத்தமாக சிலரிடம்  வாங்கி',   'சிறப்பாக' நடத்தி முடிப்பது நடைமுறையாகிவிட்டது. 
ஆனால், சிறுகச் சிறுக சேகரித்து ஒரு சேவையைச் செய்வதில் திருப்தி அதிகமாக இருக்கும்.  அவ்வாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 
அந்த வகையில் புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் தேநீர்க் கடை நடத்தும் எஸ். சிவகுமார், தன்னால் முடிந்த எளிய சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். 
சுற்றுச்சூழல் மீது சிவகுமார் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பார். சுமார் 25 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கியிருப்பார். இந்தப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் 'பசுமை சாம்பியன்' விருதும்  அண்மையில் வழங்கப்பட்டது.
 அவரிடம் பேசியபோது:
'தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில்  மொய் விருந்து பிரபலம். 
இந்தப் பகுதிகளில் வழக்கமான வீட்டு விசேஷங்களில் மொய் வைக்கும் முறையே பிரபலம். 
உறவினர்களை அழைத்து நல்ல அசைவ விருந்து வைத்து, அவர்களிடமிருந்து மொய் பெற்று, அதிலிருந்து லட்சக்கணக்கில் திரளும் நிதியைக் கொண்டு தொழிலை வளப்படுத்திக் கொள்வார்கள்.  மொய் வைத்தவர்கள் மொய் விருந்து நடத்தும்போது இவர்கள் திருப்பிச் செய்ய வேண்டும். இது, ஏறத்தாழ 'வட்டியில்லா சமூகக் கடன் முறை' ஆகும்.
நான் மூன்றாவது முறையாக மொய் விருந்தை நடத்தியிருக்கிறேன்.  எனது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுப்பேன்.  வருவார்கள். தேநீர் அருந்துவார்கள். தேநீர்க் கட்டணத்துக்குப் பதிலாக நிதியை அளித்துச் செல்வார்கள்.
கடந்த (நவ. 5) நடத்தப்பட்ட மொய் விருந்தில் வைக்கப்பட்ட உண்டியலில் கிடைத்த தொகை ரூ. 36,638.  'ஜிபே'  போன்ற இணைய வழியில் கிடைத்த தொகை ரூ. 5,109. மொத்தம் மொய் வசூல் ரூ. 41,747.
ஏற்கெனவே வம்பன் நான்கு சாலைச் சந்திப்பில் தேநீர்க் கடையை நான் வைத்திருந்தபோது, இரு முறை மொய் விருந்தை நடத்தியிருக்கிறேன். ஒரு முறை ரூ. 22 ஆயிரம் வந்தது. ஒரு முறை ரூ. 17,150 வந்துள்ளது.
தொடக்கத்தில் வம்பன் பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வந்த போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு உணவு கொடுத்து உதவினேன். எனது கடையில் வழக்கமாக வாடிக்கையாளர்களின் கடன் கணக்கில் இருந்த ரூ. 25 ஆயிரத்தை தள்ளுபடி செய்தேன். 
அதன்பிறகு கரோனா பொது முடக்கக் காலத்திலும் அதேபோல உணவு வழங்கல், நிலவேம்புக் குடிநீர் போன்றவற்றை மக்களுக்கு கொடுத்தேன்.
அதன்பிறகு, 'மொய் விருந்து' நடத்தத் தொடங்கினேன். கடந்த இருமுறை நடத்தப்பட்ட மொய் விருந்துகளில் கிடைத்த தொகையை தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு முறை அனுப்பினேன். அடுத்த முறை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா பொது நிவாரண நிதிக்காக வழங்கினேன்.
இந்த முறை வசூலாகியுள்ள 
ரூ. 41,747-க்கு ஆட்டுக் குட்டிகள், பசு, காளைக் கன்றுகள் வாங்கி, கிராமப் பகுதியில் உள்ள ஏழை, எளியோருக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com