400 ஆண்டு பாரம்பரியம் மாணிக்கமாலை!

தோவாளையில் தயாரிக்கப்படும் "மாணிக்கமாலை'  உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகத் திகழ்கிறது.  
400 ஆண்டு பாரம்பரியம் மாணிக்கமாலை!


தோவாளையில் தயாரிக்கப்படும் "மாணிக்கமாலை' உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மாலை வெள்ளை, சிவப்பு வண்ண அரளிப் பூக்கள், நொச்சி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மற்ற மாலைகள் போல் அல்லாமல் சம்பா வாழை நாரைக் கொண்டு மட்டும்தான் கட்டுகின்றனர். இந்த மாலை கேரளத்தை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலிருந்தே கட்டப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட தோவாளை பூச்சந்தை தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் மிகவும் பிரபலமும், பழமையுமானதாகும்.
தமிழகம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்துக்கும் தோவாளை பூச்சந்தையில் இருந்து பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தின் மிகப் பெரும் பண்டிகையான ஓணம் பண்டிகையில் போடப்படும் அத்தப்பூ கோலத்துக்கு தேவையான பூக்கள் தோவாளை பூச்சந்தையில் இருந்துதான் செல்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக பூக்கள் விற்பனை உள்ளது. பூக்கள் விளைவித்தல், பூக்கள் கட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல நிலைகளில் தோவாளை, ஆரல்வாய்மொழி, ,பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளன.
சிறப்புகள் வாய்ந்த "மாணிக்கமாலை' தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுவரும் தெக்கூரைச் சேர்ந்த முத்தும் பெருமாளிடம் பேசியபோது:


முத்தும்பெருமாள் : தெக்கூர்

'நான் எனது தந்தை மாடசாமி பண்டாரத்திடம் இருந்து மாணிக்கமாலையைக் கட்டும் முறையை கற்றேன். எனது பாட்டி சண்முகத்தம்மாள் மாணிக்கமாலையைக் கட்டி வந்துள்ளார். தற்போது எனது மகள் வனிதாஸ்ரீ 6 ஆவது தலைமுறையாக மாணிக்கமாலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மாணிக்கமாலை தோவாளையில் கிடைக்கும் சிவப்பு, வெள்ளை அரளி, பச்சை நிறத்துக்காக நொச்சி இலைகளைக் கொண்டு வாழை நாரில் கட்டப்படுகிறது. மாணிக்கமாலையில் 1 வரிசை என்பதை 1 பகளம் என்று கூறுவார்கள். அவ்வாறு 3, 5, 7 பகளம் கொண்ட மாணிக்கமாலைகள் தயாரிக்கப்படும்.
தோவாளை பகுதியில் கிடைக்கும் அரளிப்பூக்கள் நன்கு வளையும் தன்மை கொண்டது. இதனால் மாணிக்கமாலைக்கு அரளிப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு மாணிக்கமாலை தயாரிக்க, சுமார் 4 மணி நேரமாகும்.
இந்த மாலை தயாரிப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சொற்பமாகி விட்டது. தற்போது எங்கள் குடும்பத்தையும் சேர்த்து 150 குடும்பங்கள் மட்டுமே இந்த மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
எனது தாத்தா காலம் வரை தினமும் மாணிக்கமாலை தயார் செய்யப்பட்டு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும், திருவனந்தபுரம் அரண்மனைக்கும் அனுப்பப்பட்டு வந்தது. எனது அப்பா காலம் வரை இந்த மாணிக்கமாலை தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டுமே அணிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது, திருமண விழாக்களிலும் இதை பயன்படுத்துகிறார்கள். அன்றாடம் யாரும் பயன்படுத்துவதில்லை என்பதால், வீட்டில் வைத்து இந்தத் தொழிலை செய்துவருகிறோம்'' என்றார்.

வனிதாஸ்ரீ: தெக்கூர்

'திருமணங்களுக்கு மட்டும் அரளிப் பூக்களுக்கு பதில் ரோஜாப்பூக்களைப் பயன்படுத்தி தயாரித்து வருகிறோம். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெறும் மகர சங்கராந்தி, கற்கடவாரபலி உள்ளிட்ட திருவிழாக்களில் மாணிக்கமாலை அதிக அளவில் தேவைப்படும். அதேபோல், பிரம்மோத்ஸ்வத்தின்
போதும் ஆறு அடி உயரத்துக்கு மேல் மாணிக்கமாலையை கடவுளுக்கு அணிவிப்பார்கள்.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோயில், திருநெல்வேலி நம்பிகோயில் உள்ளிட்ட கோயில்களில் திருவிழாக்களின்போது இந்த மாணிக்கமாலை பிரதான இடம் பிடிக்கும்.
மாணிக்க மாலையின் வடிவம், நுட்பமான வேலைப்பாடின் அடிப்படையில் விலையும் இருக்கும்.
சிவன் கோயிலுக்கு, சிவலிங்கம், நந்தி திருமேனிகளை மாலையில் சேர்ப்போம், பெருமாள் கோயிலுக்கு சங்கு, சக்கரம் கொண்டு தயாரிப்போம். திருமணங்களுக்கு மாலை கேட்போர் மாணிக்க மாலையில் மணமக்களின் பெயரை பொறித்துத் தருவோம்.
மாணிக்கமாலை தயாரிப்பது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்துக்கு எங்களை அழைத்து கௌரவித்த மகாராணி தம்புராட்டி 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த நூலில் வீரமார்த்தாண்ட மகாராஜாவுக்கு மாணிக்கமாலை அணிவித்தது குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.
மாமல்லபுரத்தில் 2019 ஆம் ஆண்டில் சீன அதிபரை பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பின்போது, மாணிக்கமாலை கட்டுவது குறித்து நேரில் விளக்கம் அளித்ததை என்னால் வாழ்க்கையில் மறக்கமுடியாததாகும்.
தமிழ்நாடு அரசின் சார்பில், பூம்புகார் கைவினை கழகத்தின் சார்பில் எனக்கு மாநில விருதை அப்போதைய முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி அளித்தார். எனக்கு அடுத்த தலைமுறை கைவினை கலைஞர் விருதும் கிடைத்துள்ளது.
எனது தாய் தமிழரசிக்கு "கலைச்செம்மல்' விருதையும், எனது தந்தை "வாழும் கைவினை பொக்கிஷம்' விருதையும் பெற்றனர்'' என்றார்.

ப.சஞ்சய் காந்தி:
புவிசார் குறியீடு கண்காணிப்பு அலுவலர்

'தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே விண்ணப்பித்தனர். இதுகுறித்து பரிசீலித்து அறிக்கை தருமாறு அரசு தரப்பில் கோரப்பட்டது.
தோவாளை மாணிக்கமாலை என்பது சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்டது. இந்த மாலை ஒரு மனித உடம்பின் அமைப்பை போலவே நடுவில் ஒரு நரம்பை கொண்டும் முடிவில் ஒரு நரம்பால் இணைக்கப்பட்டும் கட்டப்படுகிறது. இந்த மாலை மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்படுகிறது. இந்த மாலை கட்டும் லாவகம் தோவாளையைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கே உரித்தாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் காலத்திலிருந்தே இந்த மாணிக்கமாலை கட்டும் தொழில் இருந்துள்ளது.
எனவே பாரம்பரியம், பழைமை, உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இதை ஆராய்ந்து பார்த்ததில் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன''
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com