கொலு பொம்மைப் பாட்டி!

புதுச்சேரியில் எண்பத்து எட்டு வயதான ஓர் பெண்மணியை அனைவரும் "கொலுப்பொம்மை பாட்டி' என்றே அழைக்கிறார்கள். அதென்ன இந்தப் பாட்டிக்கு இப்படியொரு பெயர்.
கொலு பொம்மைப் பாட்டி!

புதுச்சேரியில் எண்பத்து எட்டு வயதான ஓர் பெண்மணியை அனைவரும் "கொலுப்பொம்மை பாட்டி' என்றே அழைக்கிறார்கள். அதென்ன இந்தப் பாட்டிக்கு இப்படியொரு பெயர்.

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில்வசிக்கும் சாமுண்டீஸ்வரியிடம் பேசியபோது:

'எனது பூர்வீகம் காஞ்சிபுரம். அப்பா களிமண் பொம்மைகள் செய்து விற்கும் தொழிலாளி. எனக்கு பத்து வயதாகும் போதே களிமண்ணில் பிள்ளையார் பொம்மை செய்யத் தொடங்கினேன்.

கோயில்களில் வைப்பதற்கான பொம்மைகளைச் செய்த நிலையில், கொலு பிரபலமாகி அதற்கான தெய்வாம்சம் மிக்க பொம்மைகளை செய்யத் தொடங்கினேன். அதனடிப்படையில் பள்ளிக்குக் கூட போகாமல் பொம்மைத் தொழிலில் ஐக்கியமாகிவிட்டேன்.

கிளி, மயில், மான் என இயற்கை சார்ந்த களிமண் பொம்மைகளைச் செய்து அப்பாவுக்கு உதவினேன். தனியாக இருக்கும்போது, நான் செய்த பொம்மைகளையே தோழிகளாக்கி பேசிக்கொள்வேன்.

கல்யாணத்துக்கு பிறகும் கணவர் வைத்திலிங்கமும் கொலு உள்ளிட்ட விழாக்களுக்கான பொம்மைகளைச் செய்து விற்கும் தொழில் செய்ததால் எனக்கு வசதியாகப் போய்விட்டது. கணவருக்கு உதவியாக பல உருவப் பொம்மைகள் செய்து உதவினேன். அதன்படியே எனது பத்து வயதில் தொடங்கிய பொம்மைகளுடனான தொடர்பு இந்த வயதிலும் நீடிக்கிறது.

இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளைச் செய்திருந்தாலும், எனக்குப் பிடித்தவர் பிள்ளையார்தான். சரஸ்வதி, லட்சுமி, மாரியம்மாள் என பெண் தெய்வப் பொம்மைகளளையே மக்கள் அதிகம் விரும்பினர். அதற்கடுத்து மகாபாரதம், கம்பராமாயணம் போன்ற இதிகாச கதாபாத்திரங்களை விளக்கும் வகையில் பொம்மைகளைக் குழு போல செய்து கொலுவுக்குத் தந்து வருகிறோம். கிருஷ்ண லீலையை மையமாக வைத்து பலரும் பொம்மைகள் கேட்டுவருகிறார்கள்.

எனது கணவர் வைத்திலிங்கம் காற்றில் தலையசைக்கும் பொம்மைகள் செய்வதில் புகழ் பெற்றுவிளங்கினார். கேரள கதகளி ஆடும் கலைஞர்கள் பொம்மைகளைக் காற்றில் ஆடும் வகையில் அமைப்பார். அது தமிழகம், கர்நாடகம் என பல மாநிலங்களிலும் மக்களால் விரும்பி வாங்கப்பட்டு, பிரபலமாகியுள்ளது.

புதுச்சேரியின் தனித்துவமான பொம்மையாகவும் தலையாட்டும் பொம்மைகள் உள்ளன. தற்போது கிரிக்கெட் குழு, கபடிக் குழு என சாமானியப் பொம்மைகளை மக்கள் கொலுவில் வைப்பதற்காகக் கேட்கிறார்கள். கோயில் நேர்த்திக்கடனுக்காகவும் , ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் என மனித உருவங்களை செய்து தருகிறேன்.

குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குழந்தைக்கு பாலூட்டும் தாய் பொம்மையைக் கூட கேட்கிறார்கள்.

ஆனால், இளந்தலைமுறையினர் பொம்மை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மகன் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
மருமகளும் பொம்மைகள் செய்கிறார். ஆனால், பேரன், பேத்திகளுக்கு பொம்மையில் ஆர்வமில்லை.

முதியோர் உதவித் தொகை பணம் வருகிறது. அதனால் வயிற்றுபசி தீர்கிறது. மகனும் பேரன் பேத்திகளும் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த வயதில் இப்படி கஷ்டப்பட்டு பொம்மைகளை செய்து சிரமப்படணுமா என்றும் கேட்கிறார்கள். நான் பிழைப்புக்காக மட்டும் பொம்மைகளை செய்து விற்கவில்லை. பொம்மைகளே எனது பிள்ளைகள்தான். அவைகள் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. எனது மூச்சு நிற்கும் வரை இந்தப் பொம்மைகளை என்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது'' என்கிறார் சாமுண்டீஸ்வரி.

படம்: கி.ரமேஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com