என்றும் நினைவில்..!

கோலாகலமாக ஓர்  திருமணம் அண்மையில் நடைபெற்றபோது,  மணமகளுக்கு மட்டும் உள்ளூர வருத்தம்.
என்றும் நினைவில்..!


கோலாகலமாக ஓர் திருமணம் அண்மையில் நடைபெற்றபோது, மணமகளுக்கு மட்டும் உள்ளூர வருத்தம். உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தும்போது, தன் மீது அன்புமழை பொழிந்து வளர்ந்த அப்பா இல்லையே என்பதுதான். அப்போது, ஓர் அட்டைப் பெட்டி பார்சலை கொண்டு வந்து மணமகனிடம் கொடுத்தார் ஒருவர். ஆனால், மணமகனோ பிரிக்காமலேயே மணமகளிடம் கொடுத்து, மணமகளின் தாயையும் அழைத்தார். இருவரையும் பார்சலை பிரிக்கும்படி மணமகன் சொன்னார். கூடியிருந்த அனைவரது கண்களும் பார்சலையே உற்றுநோக்கின. உள்ளே இருந்தது, மணமகளின் அப்பாவின் மார்பளவு வண்ணச் சிலை. இருவரின் கண்களில்ஆனந்தக் கண்ணீர். மண மேடையிலேயே மேஜை மீது அந்தச் சிலை வைக்கப்பட்டது.

இதுபோல் பலருக்கு இனிய அனுபவங்களை சென்னை கொளத்தூரில் உள்ள "கார்னர் ஸ்டோன்' என்ற நிறுவனம் அளித்துவருகிறது. சுப்பிரமணியன், சரவணன், ஹரிஹரன் ஆகிய மூவரும் இணைந்து நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

ஒருவரது புகைப்படத்தைக் கொடுத்தால் போதும்; அவரது முப்பரிமாண வண்ணச் சிலையை வடிவமைத்து அளிக்கின்றனர். தொடங்கிய சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிலைகளைத் தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து நிறுவன மேலாளர் ரூபிகாவிடம் பேசியபோது:

""பொதுவாக, குடும்பங்களில் பெரியவர்களோ, சிறியவர்களோ மறைந்து விட்டால், அவர்களது நினைவாக, புகைப்படங்களை வீட்டில் மாட்டிவைத்திருப்பதுதான் தமிழர் பண்பாட்டின் அம்சமாகும்.

தற்போது தொழில்நுட்ப யுகம்அல்லவா? மறைந்தவர்களின் புகைப்படமாக அல்லாமல், முப்பரிமாணச் சிலையாக வடித்து வீட்டில் வைத்துகொள்வது என்பது புதுமையானஒன்று. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றவர்கள் செய்யாத புதிய முயற்சியில் இறங்குவது குறித்து எங்கள் நிறுவன உரிமையாளர்கள் மூவரும் யோசித்தனர். அப்போது, முப்பரிமாணசிலைகள் குறித்து அறிந்தனர். இணைய வழியிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷயங்களை அறிந்து செயல்பட்டனர். அவருடன் நாங்களும் இணைந்தோம்.

பரிட்சார்த்த ரீதியாக நாங்கள் செய்தவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முப்பரிமாண (3டி) பிரின்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரது புகைப்படத்தை முப்பரிமாண உருவமாக்குவோம். ஒரு பந்து போன்ற உருவத்தில் துவங்கி, அணு அணுவாக அதன் மீது வேலை செய்து, மனித முகமாக மாற்றுவோம். அதனை குறிப்பிட்டமனிதரது முக ஜாடையை ஏற்றவாறு செதுக்கி சீரமைப்போம்.

இந்த முறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு வார காலஅவகாசம் பிடிக்கும். மிகவும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் என்றால், மூன்று நாள்களிலேயே இந்த வேலையைமுடித்துவிடுவார்கள்.

மாதிரி உருவத்தை கைப்பேசி வாயிலாக, சம்பந்தப்பட்டகுடும்பத்தினருக்கு அனுப்பி, மாற்றங்கள் செய்து ஒப்புதல் பெறுவோம். முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் உதவியோடுசிலை வடிக்கும் பணி தொடங்கும். அதன்பின்னர், சிலையை சுத்தம் செய்தல், பல கட்டங்களில் வர்ணம் பூசுதல் போன்ற பணிகளோடு சிலை அமைக்கும் பணி நிறைவுறும்.

எட்டுஅங்குலம் தொடங்கி ஆறடி வரை சிலைகளைச் செய்ய முடியும். பொதுவாக, மக்கள் மார்பளவு சிலைகளையே அதிகம் விரும்புகின்றனர். நாற்காலியில் அமர்ந்த நிலையில், நின்ற நிலையில் முழு உருவச் சிலைகளையும் செய்துகொடுக்கும்படி சிலர் கேட்பதுண்டு.

ஒரு குடும்பத்தினர் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏராளமான பொருள்செலவில் தங்கள் குடும்பத்துப் பெரியவருக்கு மணிமண்டபம் கட்டினர். அவர்கள், அந்த மணிமண்டபத்தில் வைப்பதற்காக, அந்தப் பெரியவரது சிலைக்குஆர்டர் கொடுத்தனர். மணிமண்டபத் திறப்பு விழா நாளன்று, சிலையைத் திறந்தனர். விழாவில் பங்கேற்றோர், தத்ரூபச் சிலையே
மணிமண்டபத்துக்கு முழுமையை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினர்.

மலேசியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய இளம் வயது மகளை பறிகொடுத்தனர். அவர்கள் கோரியபடி, அந்தச் சிறுமியின் தத்ரூபச் சிலையை அளித்தபோது அவர்கள் நெகிழ்ந்தனர். அவர்கள் கேட்டபடி, சிலையின் தலை, கை, கால்களைஅசைப்பதற்கு ஏற்றபடி உருவாக்கிக் கொடுத்தோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com