அறிவோம் சுற்றுலாத் தலம் - ஹம்பி

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட விஜயநகர மாவட்டத்தில் ஹுப்ளி குண்டக்கல் ரயில் மார்க்கத்தில் உள்ள ஹோஸ்பேட் நகரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஹம்பி.
அறிவோம் சுற்றுலாத் தலம் - ஹம்பி


கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட விஜயநகர மாவட்டத்தில் ஹுப்ளி குண்டக்கல் ரயில் மார்க்கத்தில் உள்ள ஹோஸ்பேட் நகரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஹம்பி. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் வரிசையில் ஹம்பியும் இடம்பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஹம்பி உத்ஸவத்தில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். ஜி20 கலாசாரக் கூட்டம் இங்கு நடைபெற்றபோது, உலகத் தலைவர்களிடையே ஹம்பி நீங்கா நினைவுகளாய் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத் துறையும் தேர்வு செய்துள்ளது.

அந்நிய படையெடுப்பிலிருந்து ஹம்பியைக் காக்க, குருதேவர் வித்யாரண்யர் தன்னுடைய சீடர்கள் ஹரிஹரர், புக்கர் உள்ளிட்டோரை அழைத்து புதிய அரசை உருவாக்க கேட்டுக் கொண்டார். அதன்படி, கி.பி.1336இல் ஹம்பியை தலைநகராகக் கொண்டு விஜயநகர ஆட்சியை அவர்கள் ஏற்படுத்தினர்.

இரண்டாம் ஹரிஹரா (கி.பி. 1377 1404) , புருத தேவராயர், (14301460), கிருஷ்ண தேவராயர் (1509 1529), அச்சுதராயர் (15301540) ஆகியோர் விஜயநகர வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள். வடக்கே கிருஷ்ணா நதி வரையும், தெற்கே திருநெல்வேலி வரையும் விஜயநகரப் பேரரசு ஆட்சி செலுத்தியது.

வாதாபியை தலைநகராகக் கொண்ட கீழைசாளுக்கியர் (கி.பி. 56 ஆம் நூற்றாண்டு), ராஷ்டிரகூடர்கள் (கி.பி. 78 ஆம் நூற்றாண்டு), கல்யாணி சாளுக்கியர் (கி.பி. 911 ஆம் நூற்றாண்டு), ஹொய்சளர்கள் (கி.பி. 1113 ஆம் நூற்றாண்டு) , தேவகிரி யாதவர்கள் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு) ஆகிய வம்சத்தினர் ஹம்பி பகுதியில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்தினர். கி.பி.1565 வரை விஜயநகர அரசு நீடித்தது.

தளிக் கோட்டை யுத்தத்தில் விஜயநகரம் வீழ்ந்தது. எனினும் பெனுகொண்டா, சந்திரகிரியை தலைநகராகக் கொண்டு அரவீடு வம்சத்தினா கி.பி. 1665ஆம் ஆண்டு வரை இந்தப் பேரரசின் ஆட்சியை நீடிக்க வைத்தனர். ஆண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாடி, கோலாகலமாய் விளங்கிய ஒரு பேரரசு அந்நியர் படையெடுப்பால் வீழ்ந்தது. விஜயநகரப் பேரரசுக்குப் பின்னால் வந்த அரசுகள் எதுவும் இதனை சீர்படுத்தி பழைய பொலிவை புதுப்பிக்கவில்லை.

விஜயநகரப் பேரரசின் பெருமையை கேள்விப்பட்டு அரேபியா, இத்தாலி, பாரசீகம், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ஃப்ரிஸ்தா (கி.பி. 1378), அப்துல் ரசாக் (கி.பி. 1442), டொமிங்கோ பயாஸ் (கி.பி. 1520), ஃபெர்னோ நூவிஸ் (கி.பி. 1535), இபின் பதூதா (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) துவார்த் பர்போசா (கி.பி.1500 1516), நிக்கோலோ டிகோண்டி உள்ளிட்டோர் இங்கு வந்து சென்றுள்ளனர்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில் ஹம்பியானது ஹம்பதீர்த்தா, விருப்பாட்ஷா தீர்த்தா, பம்பா வரஷேத்ரா என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. சிவனின் இன்னொரு பெயர் பம்பா. கங்கைக் கரையில் காசி தலம் அமைந்திருப்பது மாதிரி, துங்கபத்திரை நதிக்கரையில் ஹம்பி அமைந்துள்ளதால் பக்தர்களால் இது "தட்சிணகாசி' என அழைக்கப்படுகிறது.

விஜயநகரப் பேரரசு மன்னர்களுக்கு ஸ்ரீ விருப்பாட்ஷா நாதரே குல தெய்வமாகும்.

கி.பி.1510இல் ஜனவரி 24இல் கிருஷ்ணதேவராயர் முடிசூடியதைக் கொண்டாடும் வகையில், இரண்டாம் சுற்றிலிருந்து முதல் சுற்றுக்குச் செல்லும் வழியில் "ராயகோபுரம்' என்று அழைக்கப்படும் மூன்று நிலை கோபுரத்தைக் கட்டினார்.

கிருஷ்ணதேவராயரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். ஆண்டாளின் திருப்பாவையை கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் "ஆமுக்த மால்யதா' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்தவுடன் 500 பொற்காசுகளையும், "தனிச்சியம்' என்ற திருஞானசம்பந்தநல்லூர் கிராமத்தையும் தானமாகத் தந்தார். அழகர்கோவிலில் உள்ள தெற்கு கோபுரம் மற்றும் சிற்பக்கலை மேன்மைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் பிரம்மாண்ட தூண்கள் தாங்கிய கல்யாண மண்டபம் ஆகியன இவரால் கட்டப்பட்டவை.

கர்நாடக இசைமேதை புரந்தரதாசரைப் போற்றும் விதமாக, கி.பி.1540இல் துங்கபத்திரை ஆற்றின் கரையில் "புரந்தரதாசர் மண்டபம்' கட்டப்பட்டது. ஆண்டுதோறும் புரந்தரதாசர் விழாவும் இங்கு நடக்கிறது. அந்தக் காலத்தில் விஜயநகரத்தில் நுழைவதற்கு ஏழு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைத்திருந்தனர். இன்றைக்கும் அவை நல்ல நிலைமையில் உள்ளன.

ஒரு பிரம்மாண்ட வளாகத்தில் அருகருகே லட்சுமி நரசிம்மர் கோயிலும், ஜலகண்டேசுவரர் கோயிலும் உள்ளன. கி.பி.1528இல் கிருஷ்ணதேவராயரின் ஆணைப்படி கிருஷ்ணபட்டர் என்ற பூசாரி இந்தக் கோயில்களை கிழக்கு நோக்கியவாறு கட்டினார். அடுத்து சண்டிகேஸ்வரர் கோயிலானது தெற்குச் சுற்றில் ஸ்ரீ செளடேஸ்வரி அம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது. கருவறையில் பெரிய சாளரம் அமைந்துள்ளது. வித்தியாசமான கட்டுமானம், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

விஷ்ணுவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன் அருகே கி.பி. 1545இல் தளவாய் ஜங்கமய்யா என்பவர் வீரபத்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். விஜயநகரத்தில் பெரிய விக்ரமாக 16 அடி உயர சத்ருபயங்கர வீரபத்திரர் மூலவராய் உள்ளார். நித்ய பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அக்காலத்தில் இப்பகுதியில் சதிப் பழக்கம் இருந்ததற்கு கல்வெட்டுகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com