இரு கைகளால் ஒரே நேரத்தில் எழுத...

இரு கைகளால் ஒரே நேரத்தில் எழுத...

வலது கையால்  எழுதுதல்  சாதாரண விஷயம்.  இடது கையால் எழுதுகிறவர்களைப் பார்த்து  ஆச்சரியப்படுவோம்.  


வலது கையால் எழுதுதல் சாதாரண விஷயம். இடது கையால் எழுதுகிறவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். ஆனால் ஒரே நேரத்தில் இரு கைகளால் "நண்பன்' எனும் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் மாதிரி எழுதுவது அபூர்வம்தான்.
ஒரே நேரத்தில் வலது, இடது கைகளால் பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதுவதைச் சரளமாகச் சொல்லித் தரும் வித்தியாசமான பள்ளி நாட்டிலேயே ஒன்றேயொன்று இருக்கிறது. மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட சிங்க்ரோவ்லி மாவட்டத்தில் உள்ள புதேலா கிராமத்தில் சுமார் நூறு மாணவ, மாணவிகளுடன் "வீணா வாதினி' எனும் இந்தப் பள்ளி செயல்படுகிறது.
வலது கையால் ஆங்கிலச் சொற்களை எழுதும்போது, இடது கையால் சரளமாக ஹிந்தி சொற்களை எழுதுகின்றனர். இப்படி ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், உருது, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் ஏதாவது இரண்டு மொழிகளில் இரண்டு கைகளால் ஒரே சமயத்தில் எழுதி அசத்துகின்றனர். இந்த ஐந்து மொழிகளும் மாணவர்களுக்கு இதர பாடங்களுடன் பயிற்றுவிக்கப்படுகிறது. 1999இல் தொடங்கப்பட்ட பள்ளியில் இதுவரை சுமார் 480 மாணவர்கள் இதுபோன்ற திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிறுவனரும் முதல்வருமான பிரங்கட் பிரசாத் ஷர்மா கூறியதாவது:
'நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்ஸி, விஞ்ஞானி ஆல்பெர்ட் ஈன்ஸ்டைன், அமெரிக்க முன்னாள் அதிபர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் திறமை உள்ளவர்கள். இவர்களின் தனித்திறமையால் கவரப்பட்ட நான், அந்தத் திறமையை மாணவர்களுக்குக் கற்றுத் தர முடிவு செய்து, இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். பள்ளியில் இந்தத் தனித்தன்மையான பயிற்சியுடன், யோகா, தியானமும் கற்றுத் தரப்படுகிறது.
எழுத்துப் பயிற்சியை மரங்களின் நிழலில் தரையில் அமரச் செய்து கற்றுத் தருகிறோம். கிட்டத்தட்ட குருகுலம் மாதிரியான சூழல் பள்ளியில் நிலவும்.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு நிமிடத்தில் 250 சொற்கள் வரை மொழிபெயர்க்கும் திறமையும் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு உண்டு. இந்தத் திறமைக்கும் மூளைக்கும் அதிகத் தொடர்பு உண்டு.
மனித மூளை இரண்டு பகுதிகளைக் கொண்டது. மூளையின் ஒரு பகுதியை மட்டுமே மனிதர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால், இரு பகுதிகளையும் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் இரண்டு மொழிகளில் எழுதும் பயிற்சியை நானும், இதர 7 ஆசிரியர்களும் வழங்குகிறோம்.
தேர்வு நாளில் 3 மணி நேரத்தில் 2 ஆயிரம் சொற்களை எழுதுவதற்கே பல மாணவர்கள் சிரமப்படுவார்கள். அதனால் பலரும் சில கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் இந்த முறையில், 3 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் சொற்களை எழுதலாம்.
தேர்வு நேரம் முடியும் முன்பே தேர்வை எழுதி முடித்துவிடலாம். இந்தப் பயிற்சி பெற வயது ஒரு தடை கிடையாது. படித்ததை நினைவில் பசுமரத்தாணி போல எளிதாக நிறுத்திக் கொள்ள முடியும். சிறு வயதில் பல மொழிகளை எழுதப்
படிக்கத் தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரிப் படிப்பு முடிந்து போட்டித் தேர்வுகளிலும் பிரகாசிக்கலாம். இந்தப் பள்ளியின் சிறப்புகளைக் கேள்விப்பட்ட பல வெளிநாட்டு கல்வி வல்லுநர்கள் பள்ளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர்'' என்றார்.
சாதனை நிகழ்த்தி வரும் இந்த அதிசய பள்ளியின் நிறுவனர் பிரசாத் ஷர்மாவின் கன்னத்தில் புற்றுநோய் தாக்கியுள்ள நிலையில், அதற்கான சிகிச்சை பெற்றுவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com