ஆங்கிலோ- இந்தியர்கள்

ஆங்கில வம்சாவளியினருக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் பிறந்த குழந்தைகளையே "ஆங்கிலோ இந்தியர்கள்' எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
ஆங்கிலோ- இந்தியர்கள்


ஆங்கில வம்சாவளியினருக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் பிறந்த குழந்தைகளையே "ஆங்கிலோ இந்தியர்கள்' எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
ஆங்கிலேயருக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் இந்திய மக்களோடு கலந்து உருவானதுதான் ஐரோப்பிய- இந்திய முதல் கலப்பாகும்.
ஐரோப்பிய- இந்தியர் தோற்ற வரலாறு கி.பி. 1498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி
வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வந்து இறங்கிய காலத்தில் வேர் கொண்டது. கி.பி. 1500-இல் டையூவின் போர்ச்சுகீசிய ஆளுநராக இருந்த அல்போன்சா டி அல் புகர்க்கி தன்னுடைய படைவீரர்கள், அலுவலர்களை
இந்தியப் பெண்களை மணக்குமாறு ஊக்குவித்தார். உள்ளூர் கிராமத் தலைவர்களின் மகள்களையே மணமுடிக்க ஆணையிட்டார்.
இதன்மூலம் போர்ச்சுக்கீசிய ஆட்சியை அப்பகுதியில் நிலைநிறுத்த அவர் கனவு கண்டார். இக்கலப்பில் பிறந்த குழந்தைகள் "லூசோ- இந்தியர்கள்' என அழைக்கப்பட்டனர்.
லூசோ என்பது போர்ச்சுக்கல்லை குறிக்கும் ஓர் லத்தீன் மொழிச் சொல்லாகும். அதிலிருந்து பிறந்ததுதான் லூசோ. போர்ச்சுக்கீசிய வம்சாவளியினரை லூசோக்கள் என்று அழைப்பது ஐரோப்பிய, அமெரிக்க மரபாகும்.
இந்த நிலையில், போர்ச்சுக்கீசிய அரசு அநாதைப் பெண்களைக் கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பினர். தங்கள் படைவீரர்களை மணந்துகொண்டு வாழ்வதற்காக வந்த அவர்களில் ஒரு பகுதியினர் வசதிமிக்க இந்திய ஆண்களை மணமுடித்தனர். அவர்களுக்கு பிறந்தவர்களும் "லூசோ- இந்தியர்கள்' -ஆகினர்.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியினர் வருகைக்குப் பின்னர் போர்ச்சுக்கீசியர்களின் செல்வாக்கு குறைந்தது. தங்களது தளங்களை அவர்கள் இழந்தவுடன் லூசோ இந்தியர்களின் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினரோடு கலந்தனர்.
தங்கள் போர்ச்சுக்கீசிய வம்சாவளியைத் தொடர்ந்தவர்களாக பெருநகரங்களில் வாழ்கின்ற "லூசோ- இந்தியர்கள்'-களில் ஒரு பகுதியினர் காலப் போக்கில் "ஆங்கிலோ- இந்தியர்கள்' என்றே பொது அடையாளத்தில் கலந்தனர்.
ஆங்கிலோ- இந்தியரின் தோற்ற வரலாறு கி.பி. 1600-இல் ராணி விக்டோரியா கிழக்கு இந்திய கம்பெனிக்கு இந்தியாவில் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கும் சாசனத்தில் கையொப்பமிட்ட நாளில் தொடங்குகிறது. தங்கள் பெண்களைவிட்டுப் பிரிந்த கம்பெனி ஊழியர்கள் அலுப்பூட்டும் வர்த்தக வாழ்க்கையிலிருந்து விடுபட இங்கிருந்த இந்தியப் பெண்களோடு முறைப்படியும், முறையில்லாத படியுமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
கம்பெனியின் வர்த்தக நடவடிக்கைகள் விரிவாக, ஆங்கில ஊழியர்களின் எண்ணிக்கையும் பெருகியது. இவ்வாறாக, "ஆங்கில- இந்திய கலப்புத் தம்பதியினர்' பெருகினர்.
இதையறிந்த கம்பெனி இயக்குநர் குழு கி.பி. 1687-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாளில் ஆங்கிலோ இந்தியக் கலப்பில் பிறந்த குழந்தையின் தாய்க்கு ஒரு பகோடா பணம் (ஐந்து ரூபாய்) உதவித் தொகையை வழங்கினர்.
ஆங்கிலோ- இந்திய ஆண்கள் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாகப் பல போர்களில் பங்கேற்றனர். கம்பெனிக்காகவும் உழைத்தனர். ஆங்கிலோ- இந்தியக் குழந்தைகள் மேல்படிப்புக்காக, பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பியபோது, உயர்ந்த அரசுப் பணிகள் வழங்கப்பட்டன.
கி.பி. 1785-க்குப் பிறகு அடுத்தடுத்து ஆங்கிலேய அரசும், கம்பெனியும் சில ஆணைகளைப் பிறப்பித்து ஆங்கிலோ- இந்தியர்களைத் தரம் பார்த்தது.
"கொல்கத்தா பள்ளியில் படித்த மாணவர்கள் பிரிட்டனுக்கு உயர்கல்விக்குச் செல்லத் தடையும் விதிக்கப்பட்டது. கம்பெனியின் சிவில், ராணுவப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. ராணுவத்தில் பேண்டு வாசிப்பவர்கள், குழல் ஊதுபவர்கள், டிரம் அடிப்பவர்கள் போன்ற பணிகளில் மட்டுமே நியமிக்கப்பட்டனர்' என்ற மூன்று முக்கிய ஆணைகள் நேரடியாக ஆங்கிலோ- இந்தியர்களைப் பாதித்தது.
இந்தக் காலகட்டத்தில் ஹைத்தியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முலொட்டா இன மக்கள் நடத்தியகலகம் இத்தகைய கலப்பின மக்கள் குறித்த எச்சரிக்கை உணர்வை ஆங்கிலேயர்களுக்கு ஏற்படுத்தியது.
தொடர்ந்து வருகை புரிந்த ஆங்கிலேயப் படைவீரர்கள் இந்தியப் பெண்களை மணக்க வேண்டிய நிலை குறைந்தது. ஆங்கிலோ- இந்திய பெண்களே திருமண வயதை எட்டிவிட்டதால், புதிய கலப்புகள் தேவையில்லாதது என்றாகிவிட்டது. தவிர, கைவிடப்பட்ட ஆங்கிலோ- இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே போனது. அவர்களுக்காக காப்பகங்கள் திறக்கப்பட்டன. இந்த வகையில் தொடங்கப்பட்ட ஓர் காப்பகமே பிற்காலத்தில் "செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இந்திய பள்ளி' என்று மாற்றப்பட்டது. இந்தப் பள்ளியில் படித்த ஆங்கிலோ-இந்தியக் குழந்தைகள் நடுத்தர வர்க்கப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். சில பள்ளிகளிலும் ஆங்கிலோ- இந்தியப் பள்ளிகள் எனத் தொடங்கப்பட்டு, இன்றும் அவை நடைபெற்றுவருகின்றன.
1857-இல் புரட்சி நடைபெற்றபோது, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ஆங்கிலோ- இந்தியர்கள் விசுவாசமாக நடந்தனர். இதையடுத்து, அவர்கள் ராணுவத்திலும், காவல் துறையிலும் உயர்பதவிகளில் பணி அமர்த்தப்பட்டனர். 1854-க்குப் பின்னர் அவர்கள் ரயில்வே துறையின் முதுகெலும்பாகவே அவர்கள் திகழ்ந்தனர்.
ஆங்கிலேய- இந்திய ஓட்டுநர்கள் சரியான நேரத்துக்கு ரயிலை கொண்டு சேர்த்தனர்.
ஆங்கிலம்தான் ஆட்சி மொழி என்ற ஆணை ஆங்கிலோ- இந்தியர்களுக்கு பல வகை வாய்ப்புகளை அள்ளித் தந்தது. சென்னையில் நியூடவுன் பகுதியில் அவர்களின் குடியிருப்பு அமைந்தது. பெரியமேடு என்று தற்போது அழைக்கப்படுகிறது)
இவர்களுக்கென ஓர் அமைப்பு தேவை என்று குரல் கொடுத்த, டி.எஸ்.ஒயிட் என்பவரின் பெயரிலேயே எழும்பூரில் "ஒயிட் ஹால்' நிறுவப்பட்டது. இந்தியாவின் வரலாற்றுத் திருப்புமுனைகளில் ஆங்கிலோ- இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். உக்கிரமாக எழுந்த விடுதலைப் போராட்டமும் அதற்கு ஊடாக எழுந்த இந்திய படித்த மேல்தட்டு வர்க்கமும் அது முன்வைத்த உத்தியோகங்களில் இடம் கேட்ட கோரிக்கைகளும் நிறைவேறின.
மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள் (1909) , மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தங்கள் (1915), இந்தியச் சட்டம் (1935) ஆகியன இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை அளித்தன. அதுவரை நடுத்தர வர்க்கப் பணிகளில் ஏகபோகமாக இருந்த ஆங்கிலோ- இந்தியர்கள் உடனடியாகப் பாதிக்கப்பட்டனர்.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் இந்தியாவில் இருப்பதா? அல்லது நாட்டை விட்டு செல்வதா? என்ற நெருக்கடியும் அவர்களுக்கு ஏற்பட்டது. பெரும்பாலானோர் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது இந்தியாவில் ஒரு சிறுபான்மை இனமாக அவர்கள் வாழ்கின்றனர்.
1947-க்கு முன் 5 லட்சமாக இருந்த அவர்களின் மக்கள் தொகை இருந்தது. இப்போது லட்சம் பேர் என்ற அளவில்தான் குறைந்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 334-வது பிரிவுக்கான 23-ஆவது திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் அவர்களுக்கான ஓரிடம் 2020-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்டு வந்தது.
காந்திஜியாக நடித்த பென்கிங்ஸ்லி, ஓலிம்பிக் வீரர் செபாஸ்டின் கோ, தமிழ்நடிகை மாதுரிதேவி போன்றோர் ஆங்கிலோ- இந்தியர்கள்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com