சூரிய ஆய்வு தரவுகளின் சுரங்கம்..!

சூரிய ஆய்வு தரவுகளின் சுரங்கம்..!

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் வசிகரித்து வருகிறது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் வசிகரித்து வருகிறது. இயற்கையான சுற்றுச்சூழல், விண்ணை முட்டும் மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள் போன்ற நினைவுகளை மட்டுமே பதிவு செய்து வந்த மலைகளின் இளவரசி, வான் இயற்பியல் ஆய்வுகளுக்கும் தன் பங்களிப்பை 121 ஆண்டுகளாக அளித்துவருகிறது.

2023 ஆம் ஆண்டு செப். 2இல் ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வுத் துறை சாதனை நிகழ்த்தியது. அந்த விண்கலத்திலுள்ள 7 உபகரணங்களில், பிரதானமான விஇஎல்சி (விசிபில் எமிஷன் லைன் கொரோனாகிராப்) என்ற உபகரணம், இந்திய வான் இயற்பியல் ஆய்வுக் கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. அதற்கு, கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தின்(அப்சர்வேட்டரி) சூரியக் கரும்புள்ளிகள் குறித்த 100ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆய்வுத் தரவுகள் பேருதவியாக அமைந்துள்ளன. அந்த உற்றறிவகத்தின் நிலைய விஞ்ஞானி இ.எபினேசர் செல்லச்சாமியுடன் ஓர் சந்திப்பு:

சூரிய உற்றறிவகத்தின் அமைவிட சிறப்பு என்ன?

திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட பழனி மலைத் தொடரில் உயரமான பகுதி இது. கடல் மட்டத்திலிருந்து 2343 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. வழிமண்டல மாசு, தூசுகளால் ஏற்படும் ஒளிச் சிதறலை தவிர்க்கவும், மேகக் கூட்டங்களால் ஏற்படும் சிதறலை தவிர்க்கவும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேய கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் மூலம், வில்லியம் பேட்ரிக் என்ற தனி நபரால் 1786ஆம் ஆண்டு சென்னையில் வானியல் உற்றறிவகம் தொடங்கப்பட்டது. 1899இல் கொடைக்கானலுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட து. விஞ்ஞானி ஜான் எவர்ஷெட் என்பவரால் 1902ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஆய்வு பணிகளை, கொடைக்கானல் சூரிய உற்றறிவகம் 121ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

119 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த சூரிய உற்றறிவகம், சூரிய கரும்புள்ளிகள் குறித்த ஆய்வுகளோடு நின்றுவிடாமல், ஆண்டுதோறும் தலா 80 ஆய்வு மாணவர்களுக்கு (இயற்பியல், கணிதத் துறை) ஆய்வுக் கூடமாகவும், நூற்றாண்டு தரவுகளை பாதுகாக்கும் பொக்கிஷமாகவும், பல்வேறு மொழிகளில் வெளியான பழமையான, வளமான பல அறிவியல் ஆய்வுப் புத்தகங்களின் சுரங்கமாகவும் செயல்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் ஆராய்ச்சிக் கழகத்தின், கொடைக்கானல் சூரிய உற்றறிவகம், திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் உள்ள வைனுபாப்பு உற்றறிவகம், பெங்களுரூ அடுத்துள்ள கௌரிபித்தனூர் ரேடியோ உற்றறிவகம், காஷ்மீர் மாநிலம் ஹான்லே இந்திய வானியல் உற்றறிவகம், கர்நாடக மாநிலம் ஹோசுக்கோட்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கல்வி மையம் ஆகிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கொடைக்கானல் உற்றறிவகத்தில் மட்டுமே கண்ணுரு ஒளி அலை நீளத்தில் சூரிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.



கொடைக்கானல் மையத்தின் சிறப்பம்?

கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தில், ஸ்பெக்ட்ரோ தொலைநோக்கி 1904ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கொடைக்கானல் சுரங்க தொலைநோக்கி(கேடிடி) 1960ஆம் ஆண்டிலும், ஹெச் ஆல்ஃபா தொலைநோக்கி 2014ஆம் ஆண்டிலும், வார்ம் தொலைநோக்கி 2016ஆம் ஆண்டிலும், ரேடியோ தொலைநோக்கி 2018ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன.

ஸ்பெக்ட்ரோ தொலைநோக்கி 6 செ.மீ. விட்டம் கொண்ட குவி ஆடி மூலம் சூரியனின் ஒளிக் கோளத்தில் அனைத்து வகையான கரும்புள்ளிகளிலும் ஏற்படும் சுழற்சி, மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 1904 முதல் தற்போது வரை இந்த தொலைநோக்கி பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கொடைக்கானல் டனல் தொலைநோக்கியில் 62 செ.மீட்டர் விட்டத்திலான மூன்று சமதள எதிரொலிப்பு ஆடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சூரிய கரும்புள்ளிகளின் காந்தபுலம், அவற்றினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஹெச் ஆல்ஃபா தொலைநோக்கியில் 656.28 நானோ மீட்டர் அலை நீளத்தில் சூரியனின் மேற்புற நிறக்கோளம் (அப்பர் கிரோமோஸ்பியர்) ஆய்வு செய்யப்படுகிறது.

சூரியனில் மேற்புற அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியவும், மேற்புற, உள்புற அடுக்குகளுக்கு இடையிலான தொடர்பைக் கண்டறியவும் இந்த தொலைநோக்கி பயன்படுகிறது.

வார்ம் தொலைநோக்கி 393.3 மற்றும் 430.5 நானோ மீட்டர் அலை நீளங்களில் சூரியனின் கீழ்ப்புற நிறக் கோளம் (லோயர் தேராமோஸ்பியர்) , ஒளிக் கோளம்(ஃபோட்டோஸ்பியர்) ஆய்வு செய்யப்படுகிறது. கீழ்ப்புற நிறக்கோளம், ஒளிக் கோளத்தை ஒரே நேரத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வசதி உள்ளது. சூரிய கரும்புள்ளிகளின் அன்றாட மாற்றம், சுழற்சி குறித்த தகவல்கள் இந்த தொலைநோக்கி மூலம் தரவுகளாகப் பதிவு செய்யப்படுகிறது.

ரேடியோ தொலைநோக்கி மூலம் சூரியனிலிருந்து வரக் கூடிய ரேடியோ அலைகள் ஆய்வு செய்யப்படுகிறது. சூரியப் புயலுக்கு காரணமான அதிக ஆற்றல் கொண்ட துகள்கள் சூரியனுக்கு அருகே எப்படி பயணிக்கின்றன என்பது இதன் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

சூரியக் கரும்புள்ளிகளின் சுழற்சி என்றால் என்ன?

சூரியனில் பல கோளங்கள் இருந்தாலும், ஒளிக்கோளம், நிறக்கோளம், வெளிக்கோளம் என 3 கோளங்கள் மட்டுமே பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. சூரிய கரும்புள்ளிகளின் தொகுப்பு வளர்ச்சி, தேய்வு நிகழ்வுகள்,(அதாவது சூரிய கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து குறையும் நிகழ்வு) சராசரியாக 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இதுவே சூரியக் கரும்புள்ளிகளின் சுழற்சி எனப்படுகிறது.

முதல் 5.5 ஆண்டுகளில் அதிகரித்து, அடுத்த 5.5 ஆண்டுகளில் சூரியக் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இந்த 11 ஆண்டுகளில் சூரியனின் வட தென் துருவ மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் மாற்றம் அடைகிறது.

சூரியனின் மையக் கோட்டுப் பகுதி(இக்குவேட்டார்) 25 நாள்களாகவும், துருவப் பகுதி 35 நாள்களிலும் சுழற்சி அடைகிறது. இதனை சூரியனின் மாறுப்பட்ட சுழற்சி என்கிறோம்.

ஆய்வுகளின் பயன் என்ன?

பூமியை நோக்கி வரும் சூரியனின் வெளிக்கோள நிறை உமிழ்வுகளால்(கொரனல் மாஸ் எஜக்ஷன்), பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதனால் முன்னறிவிப்பு செய்து செயற்கைக் கோள்களைப் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மேலும் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும் துருவப் பேரொளி ஏற்படுவதைக் கண்டறியவும் இந்த தரவுகள் பயன்படுகின்றன. விண்வெளிக் கால நிலை போன்ற ஆய்வுகளுக்கும், சூரிய கரும்புள்ளி ஆய்வுகள் பயன்படுகின்றன.

எதிர்கால இலக்கு என்ன?

தானியங்கி ஆடிகளை(அடாப்டிக் ஆப்டிக்ஸ்) இந்த உற்றறிவகத்திலுள்ள தொலைநோக்கிகளில் பொருத்துவதற்கான நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தெளிவான புகைப்படங்கள் எடுப்பதற்கு தானியங்கி ஆடிகள் பயன்படும், அதன் மூலம் சூரிய கரும்புள்ளிகளின் பரப்பளவு, காந்த விசை ஆகியவற்றை துல்லிமான அளவிட முடியும்.

வால்நட்சத்திரங்களின் ராஜா

1904-இல் இருந்து பெறப்பட்ட சூரியப் புகைப்பட தரவுகள் அனைத்தும் எண்ம தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வால் நட்சத்திரங்களின் ராஜா என அழைக்கப்படும் ஹெலேஸ் வால்நட்சத்திரம் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்படும். அந்த வகையில் 1910, 1986ஆம் ஆண்டுகளில் தெரிந்த ஹெலேஸ் வால்நட்சத்திரத்தை, கொடைக்கானல் உற்றறிவகத்திலுல்ள தொலைநோக்கிகள் மூலமாக படம் பிடிக்கப்பட்டன.

படங்கள் ம.ஆரோக்கியசுவாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com