வேட்டைக்காடாக மாற்றி விட்ட அதிகாரம் !

நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான விஷயங்களும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருப்பதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம்.
வேட்டைக்காடாக மாற்றி விட்ட அதிகாரம் !

நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான விஷயங்களும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருப்பதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம். சினிமாவிற்கும், எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் வேறு மாதிரியாகக் களம் இறங்கி செய்கிற கதை. உண்மை ஒன்றுதான். அதை கோபமாகவும் சொல்லலாம், கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். நான் இதில் உணர்வு பூர்வமாக, கிராம மண்ணின் அசல் தன்மை சார்ந்து சொல்கிறேன். அன்புதான் ஆகப் பெரிய அடையாளம். அது ஒரு விளையாட்டு, அதை விளையாடுகிறவர்களின் கனவுகளுக்கு இடையில் வைத்து சொல்கிறேன். நான் வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துக் கொண்டு வருகிற ஆள் இல்லை. அதனால் அனைவருக்குமான படமாக 'நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு' இருக்கும்.'' பக்குவத்துடன் பேசுகிறார் இயக்குநர் ஹரி உத்ரா. தொடர் கடின உழைப்பு மூலம் தனித்துத் தெரிகிறவர்.

விளையாட்டை களமாகக் கொண்ட கதை.... என்ன எதிர்பார்க்கலாம்?

எனக்கு தெரிந்தது, புரிந்தது எல்லாம் மக்களை மட்டும்தான். நம்மிடம் புழங்குகிற நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கோபதாபம், வஞ்சகம், பகை, துரோகம், காதல், அன்பு இதைத்தான் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். கால்பந்து விளையாட்டு, அதை விளையாடுகிறவர்களின் கனவு, அதைச் சுற்றி இருக்கிற உணர்வுகளின் பின்னலை சொல்லப் போகிற கதை. காலடி மண் தொடங்கி, கண்ணிமை ரோமம் வரைக்கும் போய் சேருகிற விளையாட்டு கால்பந்து.

அதை கனவாக வைத்து ஆடுகிற இளைஞர்கள், அந்த சாதனைத் துடிப்பை கையில் பொத்தி எடுத்துப் போகிற ஒரு பயிற்சியாளர் அதற்கு இடைஞ்சலாக வருகிற சிலர் என்று பரபரப்பு கூட்டி வந்திருக்கிறேன். உயிரையும், உணர்வையும் எரிபொருளாக வைத்து செதுக்கிய படம். எதையோ தேடுகிற போது யதேச்சையாக குடும்ப ஆல்பம் கண்ணுல படும் பாருங்க. 'அட' என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு, நிம்மதியாக அதைப் புரட்டிப் பார்ப்போம். அப்ப கலவையாக உணர்வுகள் கலந்துகட்டி சந்தோஷமா, வருத்தமா, கோபமா, சமயங்களில் ஆனந்தக்கண்ணீர் முட்டுமே. அப்படியும் இருக்கும். இங்கே மனிதனாக இருக்கிறதை விட, பணக்காரனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் என புரிந்து கொண்டேன். உலகமயமாக்கல் வந்த பின் நல்ல கல்விக்கும், விளையாட்டுக்கும் பணம் தான் ஆதாரம் என்று ஆகி விட்டது. ஆழ்ந்துப் பார்த்தால் உலகத்தை வேட்டைக்காடாக மாற்றி விட்டது அதிகாரம்.

கால்பந்து இங்கே அதிகம் கவனம் ஈர்க்காத விளையாட்டு....

ஆனால், அனைவருக்குமான விளையாட்டு. கால்பந்தை தொழிலாகக் கையில் எடுத்த ஒவ்வொருவருமே அது அடையாளம் தரும் என்ற நம்பிக்கையில் எடுத்தவர்கள்தான். ஒரு நல்ல பயிற்சியாளர் கிடைத்து, கோப்பை வென்றுவிட்டால் எல்லாம் சரி என்பது போல் இங்கே பேச முடியாது. உண்மை நிலை என்ன தெரியுமா? கடந்த ஆண்டு தேசிய பட்டம் வென்று வந்த பிறகு, அந்தத் தமிழக சாம்பியன்கள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா, 'கோப்பை கிடைச்சிருச்சு. வேலை கிடைக்குமா' என்பதுதான்.அவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அது ஏன் தெரியுமா? கொடுப்பதற்கான அரசாணைகள் இப்போதுதான் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெறும் கோப்பை அவர்களுக்கு இங்கு எதையும் மாற்றிவிடப் போவதில்லை. இங்கே வந்த சினிமாக்கள் யாவும் ஒரு வெற்றியைப் பற்றித்தான் பேசியிருக்கின்றன. அதன் பின்னால் உள்ள அரசியலை பேசியதே இல்லை. ஒரு விளையாட்டைப் பற்றிப் பேசும் போது, அதன் உண்மை நிலையைப் பேசுவது அவசியம். ஏனெனில், இங்கு எல்லா விளையாட்டுகளும் ஒரே படி நிலையில் இல்லை. 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சென்டிமெண்ட் சீன். தியேட்டரில் இருப்பவர்களை அழ வைக்கவேண்டும் என்றெல்லாம் நான் கதை எழுதவில்லை. அரசியல், ஆட்சி, அதிகாரம் எல்லா இடங்களில் தனது கை வரிசையைக் காட்டி விடுகிறது. அதை விளையாட்டு பின்னணியில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான்.

விளையாட்டு களத்துக்குக் காட்சி அமைப்புகளை விட வி. எப். எக்ஸ் தொழில்நுட்பம் அவசியமானது....

அதை உணர்ந்திருக்கிறேன். விளையாட்டைச் சார்ந்த ஒரு படம் எடுக்கும்போது, ப்ரீ புரொடக்ஷனில் அத்தனை உழைப்பு தேவை. அதைக் கொட்டியிருக்கிறோம். ஆய்வுகள் வேண்டும். அப்போதுதான் அந்த படைப்பு உண்மையாக இருக்கும். பொதுவாக விளையாட்டு களம் இங்கே சினிமாவானால், காட்சிகளில் குறைதான் இருக்கும். அதை உணர்ந்து வேலை பார்த்து வருகிறோம். இன்னும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்பதற்காகத்தான் இவ்வளவு கடின உழைப்பு.

சின்ன சின்ன விஷயத்தில்கூட அத்தனை குளறுபடிகள். எத்தனை எத்தனை லாஜிக் காமெடிகள்.கால்பந்தின் இன்னொரு முக்கியமான விதி, ரெகுலேஷன் டைம், எக்ஸ்ட்ரா டைம் போன்றவை. களத்தில் எந்த வீரர்கள் நின்றார்களோ அவர்கள் மட்டுமே பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பங்கெடுக்க முடியும். பெஞ்சிலேயே அமர்ந்திருந்தவர்கள், களத்திலிருந்து வெளியேறியவர்கள் அதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறேன். எந்தவொரு கதையுமே, அந்தப் பயிற்சியாளர் எப்படியான தாக்கம் ஏற்படுத்துகிறார், ஆட்ட நுணுக்கங்களில் என்ன மாற்றம் செய்கிறார் என்பது போன்ற காட்சிகள் இல்லாமல் இருக்காது. 'இறுதிச் சுற்று', 'தங்கல்', 'கனா' போன்ற அனைத்திலுமே அவை இடம்பெற்றிருக்கும். இங்கு ஒரு பயிற்சியாளர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கரின் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்க மாட்டார். பார்க்கத்தான் போறீங்க...

நடிகர்கள் இன்னும் பரிச்சயமான முகங்களாக இருந்திருக்கலாம்....

இங்கே வெற்றிதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். நமக்கு எல்லாமே சினிமாதான். என் கைகளில் திட்டம், ஃபார்முலா இதுதான் இருக்கும். எனக்குப் பயணிக்க வேண்டும். அவ்வளவுதான். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். அப்படித்தான் என் கதைகளும். நான் பார்க்கிற காட்சிகளில், சம்பவங்களில் எது என்னை தொடுகிறதோ, அதுதான் என் கதை. யானை மாலை போடுகிற கதைதான் சினிமா. அதற்காகக் காத்திருக்க வேண்டும். யானை வருகிற அந்த கூட்டத்தில் நின்று கொண்டே இருக்க வேண்டும். விலகி போய் விட்டால், வேறு யாருக்காவது அந்த மாலை விழுந்து விடும். அந்த மாலைக்காகக் காத்திருக்கிறேன். மற்றபடி இதிலும் நம்பிக்கையானவர்கள்தான் இருக்கிறார்கள். ஷரத் புதுமுகம், அருவி மதன், கஞ்சா கருப்பு, அயிரா, சோனா இப்படி கலவையான முகங்கள். எல்லோரும் தகுதியானவர்கள். இந்த சின்ன கனவுக்கு இவர்கள்தான் உத்வேகம். விளையாட்டு களத்துக்கு இசை ரொம்பவே முக்கியம். அதைத் திறம்படச் செய்து கொடுத்திருக்கிறார் ஏ.ஜெ. அலி மிர்சாக். இப்படி எல்லோருக்கும் நன்றிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com