உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலை

தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை பல்வேறு நாட்டுத் தலைவர்களைக் கவர்ந்தது. 
உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலை

தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை பல்வேறு நாட்டுத் தலைவர்களைக் கவர்ந்தது. 

இந்தச் சிலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும்.  

இந்தச் சிலையை தேசிய விருது பெற்ற மறைந்த தேவசேனாபதியின் மகன்கள் தேவ. ராதாகிருஷ்ண ஸ்தபதி, தேவ. ஸ்ரீகண்ட ஸ்தபதி, தேவ. சுவாமிநாத ஸ்தபதி குழுவினர் உருவாக்கினர்.

இதுவே உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலையாகப் போற்றப்படுகிறது.  28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது மிகப் பெரிய சவாலாக இருந்தது என்கிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி. 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

'சோழர் காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் கட்டிய ஸ்தபதிகள் வழியில் வந்த நாங்கள் 34- ஆவது தலைமுறையாக, சிலைகள் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஏற்கெனவே, கேரள மாநிலம் நெய்யாறு அணைக்கு 12 அடி உயரத்தில் நடராஜர் சிலை, வெள்ளக்கோவிலுள்ள கோயிலுக்கு பத்தரை அடியில் இரு குதிரைகள், வேலூரில் உள்ள ஓர் ஆஸ்ரமத்துக்கு 13 அடி உயரத்தில் தங்க ரதம்,  9 அடியில் பெருமாள் சிலை உள்ளிட்டவைகளைசெய்து கொடுத்த அனுபவம் உண்டு.

இந்நிலையில், ஜி 20 மாநாட்டுக்காக 28 அடி உயரத்தில் சிலை வடிவமைக்க வேண்டும் என மத்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையமானது ஒப்பந்தப் புள்ளியை கோரியது. 

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு 5 ஆண்டுகளில் 300 சிலைகள் செய்திருக்க வேண்டும். அதற்கான ஜி.எஸ்.டி. வரியும் செலுத்தியிருக்க வேண்டும். பத்து சிலைகள் பெரிய அளவில் செய்து கொடுத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் இருந்தன. 

இதன்படி, நாங்களும் விண்ணப்பித்தோம். நாங்கள் கொடுத்த பதிவுகளை எல்லாம் ஆய்வு செய்து,  எங்களுக்கு சிலை செய்வதற்கான ஆணையை கடந்த பிப்ரவரி 20-இல் மத்திய அரசு வழங்கியது.

இந்தச் சிலை வடிவம் தஞ்சாவூர் பெரிய கோயில் நடராஜர், கோனேரிராஜபுரம் கோயில் நடராஜர், சிதம்பரம் கோயில் நடராஜர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் நடராஜர் போன்ற சிலைகளுடைய பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

இந்த 28 அடி உயர சிலை வடிவத்தை மெழுகு மாதிரியில் செய்தோம்.  சிலையில் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக, அஸ்ஸாமை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், நடனக் கலைஞருமான சோனல் மான்சிங்,  பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேரில் அடுத்தடுத்து வந்து பார்த்து மெழுகு மாதிரி சிலை உருவத்தைப் பாராட்டி,  அமைப்பில் திருத்தங்களைக் கூறினர். 

அந்தத் திருத்தங்களையும் செய்தவுடன் மெழுகு மாதிரி மீது காவிரி ஆற்று வண்டல் மண்ணை வைத்துக் கட்டினோம். அது, காய்ந்த பிறகு உள்ளே இரும்புக் கம்பிகள் இட்டு, வயல் களிமண்ணை பூசி, அதற்கு பிறகு வார்ப்பை விறகு, ராட்டிகளைப் போட்டு சூடேற்றினோம். இதன் மூலம் உள்ளே உள்ள மெழுகு உருகி, கீழே உள்ள துவாரங்கள் வழியாக வெளியே வந்துவிட்டது. 

அதன் பிறகு பிரம்மாண்ட வார்ப்பை 3 நாள்களுக்கு சூடேற்றினோம். பின்னர், 21 டன் அஷ்ட தாதுவை உருக்கியபோது, இறுதியாக 18 டன் கிடைத்தது. அதை மெழுகு இருந்த இடத்தில் ஊற்றி வார்ப்படத்தை முடித்தோம்.

சவால்கள்?: இந்தச் சிலையை உருவாக்கும்போது பல சவால்களை எதிர்கொண்டோம். சிறிய சிலைகளை வழக்கம்போல செய்துவிடுவோம். பெரிய சிலையைச் செய்யும்போது எடையும் அதிகமாக இருந்தது. வார்ப்படத்தில் மேல்புறத்தில் மண் கட்டியதுபோல, கீழ்பாகத்திலும் கட்டுவதற்காகப் புரட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். அதைத் திருப்பும்போதும் உடைந்துவிடும் என்கிற அச்சம் ஏற்பட்டது. இதனால், 3 பொக்களின் இயந்திரங்களைப் பயன்படுத்தி மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டு திருப்பிப் போட்டோம். அந்த நேரத்தில் வார்ப்பு உடைந்திருந்தால், ஒட்டுமொத்த திட்டமும் வீணாகியிருக்கும்.

இதேபோல, வார்ப்படத்துக்கு வழக்கமாக 60 கிலோ மூசையை வைத்துதான் உருக்குவோம். ஆனால், 21 டன் (21 ஆயிரம் கிலோ) அஷ்ட தாதுவை உருக்குவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும், 6 உலைகளைப் பயன்படுத்தி 1,100 பாரன்ஹீட்டில் சூடேற்றி 21 டன் அஷ்ட தாதுவையும் உருக்கினோம். இதற்கு 2 நாள்களாயிற்று. உருகிய உலோகங்கள் சிலை முழுவதும் சரியாகப் பாய்ந்ததால், இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. எவ்வளவோ சிலைகளை செய்யலாம். ஆனால், வார்ப்படத்தைப் படைப்பது என்பது மிகவும் கடினம். 

அஷ்ட தாது என்றால் என்ன?: 

பொதுவாக, வீட்டில் வைக்கப்படும் சிலைக்கு தங்கம், வெள்ளி, ஈயம் ஆகிய 3 உலோகங்களில்தான் செய்வோம். பூஜைக்கான சிலையில் செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய பஞ்ச உலோகங்களில் செய்யப்படும்.  மத்திய அரசு அலுவலர்கள் அஷ்ட தாதுவில்தான் சிலை வேண்டும் எனக் கேட்டனர். அஷ்ட தாது என்பது செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம்,  பாதரசம், இரும்பு ஆகிய 8 உலோகங்களில் செய்யப்படுவதாகும்.  இவற்றில் வெள்ளீயம், பாதரசம், இரும்பு ஆகியவற்றைச் சேர்த்தாலே, அந்த உலோகம் மிகவும் கடினமாகிவிடும். அதைச் செதுக்குவதும் மிகக் கடினமான வேலையாக இருக்கும். என்றாலும், அஷ்ட தாதுவில் செய்தால் பல நூற்றாண்டுகளுக்கு உறுதியாக இருக்கும். 

எனவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, அஷ்ட தாதுவில் இந்தச் சிலையை 6 மாதங்களில் செய்து முடித்தோம்.

பின்னர், லாரி மூலம் இச்சிலை தில்லிக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.  25 கலைஞர்களை தில்லிக்கு அழைத்துச் சென்று தில்லி பிரகதி மைதானத்தில் மெருகூட்டல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் செய்து, நிர்மாணித்தோம். இப்பணியை நாங்கள் மட்டுமல்லாமல், சதாசிவம், கெளரிசங்கர், சந்தோஷ்குமார், சிற்பி ராகவன் உள்பட 30 கலைஞர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com