தேடி வருது கழிப்பறை..!

உலகில் எந்தப் பிரச்னை என்றாலும் அதற்குத் தீர்வாக தனி மனிதர்களின் சிந்தனையில் உதிக்கும் சில கண்டுபிடிப்புகள் அல்லது திட்டங்கள் வரலாற்றில் மிகச் சிறப்பாகப் பதிவாகும்.
தேடி வருது கழிப்பறை..!


உலகில் எந்தப் பிரச்னை என்றாலும் அதற்குத் தீர்வாக தனி மனிதர்களின் சிந்தனையில் உதிக்கும் சில கண்டுபிடிப்புகள் அல்லது திட்டங்கள் வரலாற்றில் மிகச் சிறப்பாகப் பதிவாகும்.  அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த  "ஓட்ஸ் ஸ்டுடியோ'  நிறுவனர் விஸ்வநாதன் ஸ்ரீதர் என்ற இருபத்து ஏழு வயதான கட்டடக் கலைப் பொறியாளருக்கு நடமாடும் பொதுக் கழிப்பறையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் ஓர் சந்திப்பு:

நடமாடும் கழிவறையை உருவாக்கும் எண்ணம் எவ்வாறு தோன்றியது?

இந்தியா போன்ற நாடுகளில் ஆண்கள் சாலையோரங்களில் கூட சுகாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிறுநீர், மலம் கழிக்க முடிகிறது. ஆனால் மகளிருக்கு இது மிகப் பெரிய பிரச்னையாகிறது.   

சில ஆண்டுகளுக்கு முன் நான் எனது நண்பர்களுடன் சென்னை பாரிமுனைக்குச் சென்றிருந்தேன்.  அங்கு  சிறுநீர் கழிக்க நீண்ட நேரம் தேடியும் சுத்தமான கழிவறையைக் கண்டறிய முடியவில்லை. அருகே இருந்த வங்கியின் கிளை அலுவலகத்துக்குள் நாங்கள் சென்று  இயற்கை உபாதையைத் தணித்துக் கொண்டோம்.

இதற்குரிய தீர்வாக ஏன் நடமாடும் கழிவறையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கக் கூடாது என நினைத்து,  ஒன்றரை ஆண்டுகளாக முயன்றோம்.

அடுத்து என்ன செய்தீர்கள்?

கழிவறை தொடர்பாக,  2 ஆண்டுகளில் சுமார் 150 பேரிடம் ஆய்வு நடத்தினோம். அனைவருமே திட்டத்துக்கு மிகுந்த வரவேற்புத் தெரிவித்தனர்.


தமிழக அரசு, மத்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கடந்த 3 மாதங்களாக இதற்கான முயற்சியை  எனது தலைமையில் 4 பேர்  தீவிரமாக இயங்கினோம்.

ஜி 20 நாடுகளுக்குத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதையடுத்து,  கடந்த மார்ச் 13, 14-ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.  மத்திய வீட்டு வசதி - நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியின் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், நான் பங்கேற்றேன்.

நடமாடும் பொதுக் கழிப்பறை திட்டம் குறித்தும்,  அதனால் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகள் மேம்படுவதையும் வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தேன்.  அறிமுக நிலையிலேயே அனைவரின் வரவேற்பையும் பெற்று கவனத்தை ஈர்த்தது இத்திட்டம்.

இதை எப்படி பயன்படுத்தலாம்?

சைக்கிளில் வரும் கழிவறையை ஒருவர் மட்டும்  உபயோகப்படுத்த முடியும். இன்னும் சற்றுப் பெரிய வாகனத்தில் சுமார் 5 கழிவறையை வடிவமைக்க முடியும்.  ஓட்ஸ், ஒலா, யூபெர் போன்ற வாகனங்களுக்கான செயலிகளில் ஆர்டர் செய்யும்போது அவை நம்மைத் தேடி வருகின்றன. உணவுப் பொருள்களை ஆர்டர் செய்தால் அவையும் வருகின்றன. அதுபோலவே, கழிவறையும் செயல்படும்.

இதற்கென தனி செயலியை உருவாக்க உள்ளோம். செயலியைத் தொடர்பு கொண்டால் அந்த இடத்துக்கு நடமாடும் கழிப்பறை வாகனம் செல்லும். 

முதல் கட்டமாக சென்னை மாநகரில் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்.  கண்டிப்பாக இப்போதுள்ள பொதுக்கழிப்பறை போல எங்களின் நடமாடும் வாகனம்  இருக்காது. மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com