பழம்பெருமை மிக்க பட்டரை பெரும்புதூர்

தமிழ்நாட்டிலேயே மிகவும் தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. 
பழம்பெருமை மிக்க பட்டரை பெரும்புதூர்

தமிழ்நாட்டிலேயே மிகவும் தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. 
மனித வரலாற்றில், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படும் கற்காலத்தில் இந்தப் பகுதியில் மனிதன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. 
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர் தேக்கத்துக்கு அருகில் குடியம்,  அத்திரம்பாக்கம்,  வடமதுரை, நெய்வேலி,  பரிக்குளம் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கற்கருவிகள் மேற்பரப்பு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஓடும் கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு (பழைய பாலாறு) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆறாக விளங்குகிறது.
திருவள்ளூர் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 9 கி.மீ. தொலைவில் பட்டரை பெரும்புதூர் என்ற ஊர் அமைந்துள்ளது.  இங்கு நடைபெற்ற தொல்லியல் மேற்பரப்பு ஆய்வில் தொன்மைச் சிறப்பு மிக்க கற்காலக் கருவிகள், பானை ஓடுகள், மணிகள் போன்றவை கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து இங்கு அகழ்வாராய்ச்சிகள் 201516,  201718 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. பல அரிய வரலாற்றுச் சான்றுகள் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.
ஆய்வில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகளைக் கொண்டு இப்பகுதியில் கற்காலம், நுண் கற்காலம், இரும்பு காலம், தொடர்ச்சியாக வரலாற்றுக் காலம் எனத் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக விளங்குகிறது.
அகழ்வாராய்ச்சிகளில் ஓர் இடத்தின் தொன்மைக்கு அடிப்படைச் சான்றாக விளங்கும் பானை ஓடுகளில் 12 வகையான பானை ஓடுகள் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றது. கறுப்பு,  சிவப்பு பானை ஓடுகள்,  வெள்ளை வண்ணப்பூச்சு பூசப்பெற்ற பானை ஓடுகள்,  குறியீடு உள்ள பானை ஓடுகள், பண்டைய தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், பண்டைய மக்கள் வாழ்ந்த வீடுகளின் கூரை ஓடுகள், செங்கற்கள் போன்றவை கிடைத்துள்ளன.


அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடுமண் பொம்மைகள்,  சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பெற்ற பானைகள், இரும்புப் பொருள்கள், தந்த சீப்பு போன்ற பொருள்கள் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரிக பண்பாட்டுச் சிறப்புக்கு சிறந்த அடையாளமாக விளங்குகிறது. 
இவ்வூரில் உள்ள கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளும் அவை அளிக்கும் செய்திகளும் கவ்வூரின் பழமைக்கு சான்றாக விளங்குகின்றன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்தில் இவ்வூர் "பெருமூர்" என்றும்,  சோழ மன்னர்கள் காலத்தில் சிம்மலாந்தக சதுர்வேதிமங்கலம், இராஜநாராயண சதுர்வேதிமங்கலம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறியமுடிகிறது.
பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் பல அரிய பொருள்கள் கிடைத்தன. அவைகளில் முக்கியமானது கூம்பு வடிவ மண்ஜாடிகள் பல கிடைத்தன. இதுபோன்ற கூம்பு வடிவ மண் ஜாடிகள் காஞ்சிபுரம், திருவேற்காடு, பாலூர், வசவ சமுத்திரம் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இவை ரோமானிய நாட்டுடன் கொண்டிருந்த தொடர்பை எடுத்துக்
கூறும் சான்றாக விளங்குகிறது. எனினும் பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கூம்பு வடிவ மண் ஜாடியில் 20 துளைகள் காணப்படுகின்றன.
இது தனி சிறப்பு உடையதாகும்.  இதுபோன்ற கூம்பு வடிவ மணி ஜாடி கிடைப்பது இதுவே முதன் முறையாகும். இதனை எதற்காக பயன்படுத்தியிருப்பார்கள் என்பது ஆய்வுக்கு உரியதாக விளங்குகிறது. கூம்பு வடிவ ஜாடி கிடைத்த இடத்தின் 
அருகிலேயே உறைகிணறும், அதனை அடுத்து செங்கற்களால் வட்டவடிவமாகக் கட்டப்பட்ட கிணறும் வெளிபடுத்தப்பட்டது மிகவும் முக்கியமான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. 
அகழ்வாராய்ச்சியில் செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு வெளிப்படுத்தப்பட்டதும் இதுவே முதன் முறையாகும். அகழ்வாராய்ச்சியில் கட்டப்பெற்ற செங்கற்கள் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தால் அறிவியல் ஆய்வுக்கும் உள்படுத்தப்பட்டுள்ளது. இவைதவிர, வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த சான்றுகளும் அறிவியல் முறை (கார்பன்14 முறை) கால கணிப்புக்கு  உட்படுத்தப்பட்டு 2500 ஆண்டுகள் தொன்மை உடையதாக அறிய முடிகிறது.
கற்காலத்திலிருந்து வரலாற்றுக்காலம் வரையிலான தொடர்ச்சியாக சான்றுகள் கிடைக்கும் பட்டரைபெரும்புதூரில் இந்த ஆண்டும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com