நட்பும் பிரிவும்..!

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உள்பட்ட  அமேதியைச் சேர்ந்த  முஹம்மத் ஆரிப்புக்கும்.   "சாரஸ் கொங்கா'  இன   கொக்குக்கும் இடையேயான நட்பும், பிரிவும்தான் ஹைலைட்!
நட்பும் பிரிவும்..!
Updated on
1 min read


உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உள்பட்ட அமேதியைச் சேர்ந்த முஹம்மத் ஆரிப்புக்கும். "சாரஸ் கொங்கா' இன கொக்குக்கும் இடையேயான நட்பும், பிரிவும்தான் ஹைலைட்!

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது வயலில் அடிபட்டு காலில் ரத்தக் காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்த அந்தக் கொக்கைக் கண்டார். அதை தனது வீட்டுக்குத் தூக்கிக் கொண்டுவந்து சிகிச்சையை அளித்து, கவனித்துக் கொண்டார்.

நேரத்துக்கு உணவும் தண்ணீரும் அளித்து ஆரிப் பராமரித்து வந்தார். அவ்வப்போது கொக்கைக் கட்டிப்பிடித்து வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து, "மகனே' என்று அழைக்கவும் ஆரம்பித்தார். கொக்கை தனது வீட்டுக்குள் கட்டிப் போடாமல் சுதந்திரமாகவே பறக்கவிட்டார்.

இதனால், கொக்குக்கு ஆரிப்பையும் அவரது குடும்பத்தினரையும் பிடித்துப் போனது. காயம் குணமாகி, பறக்க முடிந்தபோதும் கொக்கு எங்கும் பறந்து செல்லவில்லை. ஆரிப்பின் செல்லப் பிள்ளையாக, நிழலாகத் தொடர்ந்தது.

இவர் வயலுக்குப் போகும்போதும் கூட வரும். வேலை நிமித்தம் வெளியூருக்கு பைக்கில் பயணிக்கும்போது, தலைக்கு மேல் பறந்து பின் தொடரும். கிராம மக்கள் இந்த அதிசய காட்சியைக் கண்டு வியந்தனர். இது சமூக ஊடகங்களிலும் வைரலானது.

ஆரிப்-கொக்கு நட்புக்கு ஒரு வயது ஆகும்போதுதான் "கொக்கு பறந்தவாறே ஆரிப்பை பின்தொடரும்' காணொளியே இருவரும் பிரிய காரணமாகவும் அமைந்துவிட்டது.

"சரணாலயத்தில் வளர வேண்டிய அரிய வகை கொக்கை வீட்டில் வைத்து எப்படி வளர்க்கலாம்' என்று உ.பி. அரசின் வனத் துறையினர் வழக்குப் பதிந்தனர். பின்னர், அந்தக் கொக்கை கான்பூர் மிருகக்காட்சி சாலையில் ஒரு கொட்டகையில் விட்டனர். இது நடந்து சில வாரங்களாகியது.

ஆரிப்பும் கொக்கைப் பிரிந்ததால், சரியாகத் தூங்க முடியாமல் தவித்தார். கடைசியில் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மன்றாடி அனுமதியைப் பெற்று, சந்தித்தார்.

கொட்டகை அருகில் செல்ல, ஆரிப்பை அடையாளம் கண்டு கொண்ட கொக்கு தனது பறந்து விரிந்த இறக்கைகளை விரித்து சந்தோஷத்தில் மிதந்தது.

விதம்விதமான ஒலி எழுப்பிக் கொண்டு கொட்டகைக்குள் பறந்து, சுற்றி, ஆனந்த தாண்டவம் ஆடியது.

தன்னை ஆரிப் வருடிக் கொடுப்பார் என்று கொக்கு நினைத்தது. வனத்துறையினரின் உத்தரவின்படி, மூன்று அடி தூரத்தில் அழாத குறையாக நெகிழ்ச்சியுடன் நின்றிருந்தார் ஆரிப்.

ஜோடியாக வாழும் பழக்கம் உள்ள இந்தக் கொக்கு ஒரு கணம் கூட தங்கள் கூட்டாளியிடமிருந்து பிரிந்து நிற்காது. ஆனால் எந்தச் சூழ்நிலையில் இந்தக் கொக்கு காயம் அடைந்தது; அதன் கூட்டாளிக்கு என்ன நேர்ந்தது என்பது புதிராகவே உள்ளது.

"கௌதம புத்தர் சித்தார்த்தனாக இருந்தபோது. சாரஸ் கொங்கா இன கொக்கு ஒன்றின் உயிரைக் காப்பாற்றி வளர்த்தார். பறக்கும் பறவைகளில் மிக உயரமானது இந்தக் கொக்கு. கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் (ஆறு அடி) உயரம் கொண்டது. சாம்பல் நிற உடல், சிவப்புத் தலை இந்த கொக்கின் சிறப்பு அம்சங்கள்' என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com