நிஜத்தைப் போல்..!
By வ.ஜெயபாண்டி, | Published On : 23rd April 2023 12:00 AM | Last Updated : 23rd April 2023 12:00 AM | அ+அ அ- |

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாக தன்னைத் தானே உருவமாக்கியும், தான் நினைத்தது நிறைவேறியதால் அதையே உருவமாக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் தென்னம்பாக்கம் ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை அழகு முத்தைய்யனார் கோயிலில் உள்ளது.
இங்குள்ள மண் உருவங்கள் 30 அடி வரையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரம் வரையில் கட்டணம் பெற்று நேர்த்திக்கடன் உருவங்களை தென்னம்பாக்கம் மண்ணிலேயே செய்துதரப்படுகின்றன.
கோயிலில் சித்திரைத் திருவிழாவே பிரசித்தி பெற்றதாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடன் தினம்தோறும் பக்தர்களால் செலுத்தப்பட்டுவருகிறது.
புதுச்சேரி ஏம்பலம் அருகேயுள்ள தென்னம்பாக்கம் கிராமம் கடலூர் வட்டத்தில் இருந்தாலும், இந்தக் கோயிலில் வழிபடுவது என்னவோ பெருமளவில் புதுச்சேரி பகுதிவாழ் மக்கள்தான்.
கோயில் என்றால் குதிரை எடுப்பு, சுவாமி உலா, அருள்பாலிப்பு, நேர்த்திக்கடன்.. என வழக்கமான வைபவங்களே நினைவுக்கு வரும். ஆனால், தென்னம்பாக்கம் அழகு முத்தைய்யனார் கோயிலைப் பார்த்தால் அதையும் தாண்டிய பூஜைகள், நம்பிக்கையை வெற்றி கொண்ட நேர்த்திக்கடன்கள் என வியப்பூட்டுபவையும் அடங்கியிருப்பதே அதன் தனித்தன்மையாகும்.
கோயில் வளாகம், கண்மாய்க் கரைகள், மரத்தடிகள், நிலத்தடிகள், கிணற்றடிகள், புதர்கள்.. என எங்கெங்கு காணினும் குழந்தைகள், பெரியோர்கள் என நம்மை வரவேற்கும் வகையில் மண் உருவங்கள் நம் மனதை நிறைகின்றன.
"புத்தகத்தை விரித்துவைத்து பாடம் கற்றுத்தர தயாராகும் ஆசிரியர். அவரைச் சுற்றிலும் பள்ளிக் குழந்தைகள், கையில் குழந்தையை ஏந்தியபடி நிற்கும் தம்பதிகள், கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்பை மாட்டியபடி சிரிக்கும் மருத்துவர், லத்தியை கையில் பிடித்தபடி சிரிக்கும் காவலர்கள்...' என அத்தனை பேரையும் பார்க்கும்போது பிரமிக்காமலிருக்கமுடியாது.
மனித உருவங்களுக்கு மத்தியில் ஆடு, மாடு, குதிரை, யானை... என பல தரப்பட்ட விலங்குகளும் மண்ணில் வடிவமைக்கப்பட்டு உயிரூட்டத் தயாராகும் பிரம்மாக்களின் படைப்புகளாகவே காட்சியளிக்கின்றன.
அந்த அசையாத, அதிசய மண்ணுருவக் கூட்டத்தைப் பார்க்கத் தினமும் தென்னம்பாக்கத்துக்கு வருவோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுவதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தக் கோயிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களின் வண்ண, வண்ண உருவங்களையே பார்த்து பரவசமடையலாம்.
முறுக்கிய கருப்பு மீசை, வலது கை முன்பகுதியில் ஏந்திய சூரிகத்தி... எனப் பார்க்க கம்பீரமாக அருள்பாலிக்கிறார் அழகு முத்தைய்யனார் சுவாமி. அவரிடம் எழுதி வைத்த வேண்டுதல் நிறைவேறிய நிலையில்தான் பக்தர்கள் தங்களையும், தாங்கள் நிறைவேற நினைத்தவற்றையும் மண்ணில் உருவங்களாக்கி மலைக்க வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது ஆன்மிகத்தின் மகத்துவத்தை இதைவிட வேறு எங்கு போய்ப் பார்க்க முடியும் என்ற எண்ணமே எழுகிறது.
இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதச் சீட்டில் எழுதி அதை பூஜை தட்டில் வைத்துக் கொடுத்தால்,அய்யனாரின் வலது கை சூரி கத்தியில் அதை பூஜாரிகள் குத்திவிடுகிறார்கள். "சூரிகத்தியில் குத்தப்பட்ட வேண்டுதல் 3 மாதங்களில் அது நிறைவேறும்' என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமன்.
அப்படி வேண்டுதல் நிறைவேறியவுடனே வேண்டுதல் குறித்த பொருளுக்குரிய மண் வடிவங்களை, அய்யனாருக்கு படைக்கும் வகையில் கோயில் வளாகத்துக்குள் வைத்துவிடுகிறார்கள். இப்படி பக்தர்களால் அவ்வப்போது வைக்கப்பட்டுள்ள வேண்டுதல் உருவங்களோ ஆயிரக்கணக்கில் உள்ளன.
"இந்தக் கிராம மக்கள் தொகையைவிட அதிக அளவில் வேண்டுதல் உருவங்கள் உள்ளதாக பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த அமுதன்.
இதுகுறித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களின் நேர்த்திக்கடனை சீட்டுகளில் எழுதித் தரும் தென்னம்பாக்கம் மூர்த்திக்குப்பத்தைச் சேர்ந்த தொன்னூற்று எட்டு வயதான எம்.கோதண்டராமன் கூறியதாவது:
""சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அய்யனார் கோவில் உள்ளது. அதன் பின்னால் இருந்த புளியமரத்தடி பொந்தில்தான் அழகர் எனும் சித்தரும் வாழ்ந்து மக்களுக்கு அருள்வாக்கு அளித்து இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது ஜீவசமாதியும் அய்யனாருக்குப் பின்னால் உள்ளது.
இதை "அழகர்மலைக் கோயில்' என்றும் கூறுவர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை சீட்டில் எழுதி, அதை அய்யனார் கத்தியில் பூசாரி மூலம் சொருகிவிட்டால், நிச்சயம் அந்த வேண்டுதல் நிறைவேறிடும். வேண்டுதல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்டவர்கள் எதற்காக வேண்டினார்களோ, அதையே உருவமாக வடிவமைத்து கோயில் வளாகத்தில் வைக்கவேண்டும்.
ஒருவர் பிள்ளைப் பேறு வேண்டி அது நிறைவேறினால், பிள்ளையுடன் அவரும், மனைவியும் நிற்பது போல மண் உருவம் செய்து வைப்பார். திருமணத்துக்கு வேண்டுதல் வைத்து நிறைவேறினால் தம்பதிகள் உருவம் வைக்கப்படும். இதுபோல, ஆசிரியர், மருத்துவர், காவலர் என பல பணிகளுக்கு இளைஞர்கள் வேண்டுதல் வைத்து அவை நிறைவேறிய காரணத்தாலே அத்தகைய மண் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வீடு கட்டவேண்டும் என நேர்த்திக்கடன் வைத்து, நிறைவேறியதும் வீடு போன்ற உருவத்தையும் வைத்துள்ளனர். சிலர் தங்களது நேர்த்திக்கடனை அடையாளப்படுத்த குறிப்பிட்ட வண்ணங்களையே பயன்படுத்துகின்றனர்.
இங்கே இருக்கும் உருவங்களை வைத்தே நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் அய்யனார் அருளால் எத்தனை பதவிகளையும், பலன்களையும் பெற்றுள்ளனர் என்பதை அறியலாம்'' என்கிறார்.
கோயிலில் பக்தர்களின் நேர்த்திக்கடன் உருவங்களைப் பார்க்கும்போது, "இது பொம்மையல்ல.. பொம்மையல்ல உண்மை' என்ற திரைப்பட பாடல் வரிகளோடு, பக்தர்களின் நம்பிக்கையும், அது செயல்வடிவம் பெறுவதும் உண்மை என்றால் மிகையில்லை.
படங்கள்- கி.ரமேஷ்.