கடலோரத்தில் வாட்டர் ஆப்பிள்..!
By பா.லெனின் | Published On : 23rd April 2023 12:00 AM | Last Updated : 23rd April 2023 12:00 AM | அ+அ அ- |

குளிர் பிரதேசங்களில் வளரக் கூடிய மருத்துவக் குணங்கள் கொண்ட "வாட்டர் ஆப்பிள்' செடியை வெயில் மிகுந்த கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதன்முறையாக சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர்
சாதித்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் வளரக் கூடிய ஆப்பிள், கொய்யாப் பழத்தின் சுவை கலந்த வித்தியாசமான ருசி கொண்டது "வாட்டர் ஆப்பிள்'. ஆறடி வளரக் கூடிய இந்த மரத்தின் தாயகம் இந்தியாவாகும். இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்டது. இந்த மரத்தை சுட்டெரிக்கும் வெயில் கொண்ட கடலோர மாவட்டமான நாகையில் தனது தோட்டத்தில் வளர்த்து அறுவடை செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் சந்திரபோஸ்.
வேளாங்கண்ணி தெற்குபொய்கை நல்லூர் கீழத் தெருவைச் சேர்ந்த விவசாயி முத்தானுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது மகன் சந்திரபோஸ், பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்ட சந்திரபோஸ், அவருக்கு சொந்தமான விளைநிலத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை சோதனை முறையில் மேற்கொண்டுள்ளார். விவசாயத்தில் ரசாயன உரத்தைத் தவிர்த்துவிட்டு, முழுமையாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்துள்ளார்.
இவர் வெளியூருக்கு சுற்றுலா சென்றபோது, மலையில் வளரக் கூடிய "கலாக்காய்' எனப்படும் மரக் கன்றை வாங்கி, தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, கலாக்காய்கள் கொத்து கொத்தாய் காய்க்கத் தொடங்கியுள்ளன. அவை சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.150 வரை விற்பனையானது.
இதில் மகிழ்ச்சி அடைந்த அவர் மலைப் பிரதேசங்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான மரக் கன்றுகளை சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டார். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது, "வாட்டர் ஆப்பிள்' மரக் கன்றுகள் மூன்றை வாங்கி வந்து தனது தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தார். தற்போது, அந்த மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"இதுவரை 100 கிலோவுக்கும் மேலாக அறுவடை செய்துள்ளேன். வாட்டர் ஆப்பிளை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மலைப் பிரதேசங்களில் வளரக்கூடிய ரம்பூட்டான் பழவகை மரக் கன்றுகளை நடவு செய்துள்ளேன். நன்றாக வளர்ந்துள்ள ரம்பூட்டான் மரங்கள் அடுத்த ஆண்டு காய்க்கத் தொடங்கிவிடும். இந்த பழம் கிலோ ஒன்று ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனது தோட்டத்தில் மலேசியா நாட்டில் வளரக் கூடிய மலாயா ஆப்பிள் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் விரைவில் காய் பிடிக்கும். மலைப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய கிராம்பு மரம் நன்றாக வளர்ந்துள்ளது.
துரியன் மர வகைகள், மிளகு செடி ஆகியவையும் சாகுபடி செய்து வருகிறேன். துரியன் பழம் கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மரத்தில் அறுவடை தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும். இந்த மரங்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வேறு பிரத்யேக முறைகளை கையாளுவதில்லை.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மற்ற விவசாயிகளை பணப் பயிர்களை சாகுபடி செய்ய உரிய ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்தால், அதிக வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள், மிளகு, கிராம்பு போன்ற வருவாய் அளிக்கக் கூடிய செடிகள், மரக் கன்றுகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி, மாற்று விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.