இளைஞர்களுக்கு ஒரு உத்வேக சினிமா!

இளைஞர்களிடம் பெரும் மாற்றத்தை  இந்தப் படம்  உருவாக்கும். இந்த சமூகத்தில் நடந்துக் கொண்டு இருக்கிற எல்லா நடப்புகளையும் இது விவாதிக்கும்.
இளைஞர்களுக்கு ஒரு உத்வேக சினிமா!

"இளைஞர்களிடம் பெரும் மாற்றத்தை  இந்தப் படம்  உருவாக்கும். இந்த சமூகத்தில் நடந்துக் கொண்டு இருக்கிற எல்லா நடப்புகளையும் இது விவாதிக்கும். நடந்து வந்த பாதையை, கடந்துபோனதை, பார்த்தும் பார்க்காமல் போனதை, பார்க்க மறந்து போனதை எல்லாம் சேர்த்தே பேசியிருக்கிறோம். வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் நடக்கிற கதை. சாதியின் அம்சங்கள் குறித்தும் சார்ந்தும் இருக்கிற கதைக்கரு. அதிலிருந்து மனித உணர்வுகள், மதிப்பீடுகள் என்று வெளியே கொண்டு வந்திருக்கிறேன். மனிதர்களை பிரித்து வைக்கிற  சாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையை விவாதித்தோம். அதில் சினிமாவுக்கு ஏற்ற சங்கதிகள் நுழைத்து வைத்திருக்கிறோம். இங்கே இருக்கிற அத்தனை பேருமே இந்தக் கதையை இனம் காண முடியும்.''  நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் துரை கே முருகன். சீரன் படத்தின் இயக்குநர். எம். ராஜேஷின் உதவியாளராக இருந்து கதை சொல்ல வருகிறார்.

சாதிய கட்டமைப்புகள் இன்னும் ஊடுருவியிருப்பதை படம் பிடிக்கிற கதையா...

மனிதர்களைச் சார்ந்து மட்டுமே நம்மால் வாழ முடியாது. மாடு, ஆடு, நாய், பூனை என்று பல ஜீவராசிகளோடு இணைந்ததுதான் மனித வாழ்வு. ஜீவராசிகளின்மீது பெரும் காதல் கொண்டவர்களாகவும் அன்பு கொண்டவர்களாகவும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். பல நேரங்களில் அவற்றுடன் பேசுகிறார்கள். மனிதனுக்கும் அவனின் வளர்ப்புப் பிராணிக்கும் இடையில் இருக்கிற சங்கேத மொழி யாராலும் புரிந்து கொள்ள முடியாதது. பல தருணங்களில் பிள்ளைகளால் கைவிடப்படுகின்ற முதியோர்கள் அல்லது குடும்பத்தில் நிராகரிக்கப்படுகின்ற மனிதர்களுக்கு இந்த வளர்ப்புப் பிராணிகளே பெருந்துணையாக இருக்கின்றன. ஆனால் மனித காதல் என வருகிறபோது சக ஆணை, பெண்ணை நேசிக்கிறபோது வருகிற பிரச்னை பெரிது. சமூகம் ஏற்று கொள்ள மறுத்து ஆணவக் கொலை வரை செல்கிற மன நிலை வந்து விடுகிறது. இதன் ஊடாக கதையை வடிவமைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் இந்தப் படத்தின் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் வாழ்க்கையில் அவர் பார்த்து வளர்ந்த கதை. 

அது என்ன கதை... 

நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர் ஜேம்ஸ் கார்த்திக். அவரின் அப்பா - அம்மா இருவருக்கும் காதல். ஊரும், சாதிய கட்டமைப்புகளும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இருவரும் எல்லாவற்றையும் எதிர்த்து வாழத் தொடங்குகிறார்கள். அவரின் பிள்ளை வளர்ந்து சமூகத்தில் பெரிய நிலைக்கு வரும் போது கூட, சமூகத்தின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. இதுதான் அவரின் கதை. அதை சினிமாவுக்கு தக்கவாறு மாற்றி படைத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு ஒரு உத்வேக கதை. 

சமரசங்கள் இல்லாமல் இந்த கதைக்கு முழு வடிவம் கொடுத்திருக்க முடியாது....

நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம்.  நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம்.  வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான்.  ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம். நானே தயாரிப்பாளர் என்பதால் பிரச்னை இல்லை.

எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம் என்றார் வினோபா பாவே.  அது எத்தனை பெரிய உண்மை.

இனியா, சோனியா அகர்வால், அருந்ததி நாயர் என எல்லோருமே தெரிந்த முகங்கள்...

நிறைய திட்டங்கள் இருந்தன. பட்ஜெட் பற்றி கவலை இல்லை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக். அவரின் கதை. அவரின் தயாரிப்பு என்பதால் அத்தனை சுதந்திரம்.  நடிகர்களை விட இந்தக் கதையின் தன்மையை புரிந்தவர்கள் துணைக்கு வேண்டும். அவர்களை மட்டுமே வைத்துக் கொண்டோம். இனியாவுக்கு எல்லா சென்டர்களிலும் நல்ல பெயர். அதை விட நடிக்கத் தெரிந்தவர். இதில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் வருகிறார். சோனியா அகர்வால் எப்போதுமே கிளாஸிக். அருந்ததி நாயருக்கும் நல்லப் பெயர் உண்டு. படத்தின் வியாபாரத்தை விட கதையின் வீச்சு எல்லாப் பக்கங்களிலும் சென்று சேர வேண்டும். அதனால்தான் இந்த கடும் உழைப்பு. ஆடுகளம் நரேன், ஆர்யன், சென்றாயன் என மற்ற இடங்களிலும் நல்ல பக்க பலம் உண்டு. கேமிரா தொடங்கி அரங்கு அமைப்புகள் வரை பெரிய சிரத்தை இருக்கிறது. சமீபத்தில் வந்து பெரிய ஹிட் கொடுத்த காந்தாரா படம் போன்ற உணர்வு உங்களுக்கு வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com